பல கோடிகளுக்கு விற்கப்படும் நவீன ஓவியங்களின் பின்னணியில் இவ்வளவு இருக்கிறதா?


Modern painting
Modern painting
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

நவீன ஓவியம் என்பது பாரம்பரிய மரபுகளைத்தாண்டி, புதிய சிந்தனைகளையும் சோதனைகளையும் உள்ளடக்கிய ஒரு கலை இயக்கமாகும். இது பார்வையாளர்கள் இடையே தனிப்பட்ட சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் தூண்டுகிறது. அதே நேரத்தில் மாறிவரும் உலகத்தைப் பற்றிய புதிய பார்வையையும் வழங்குகிறது. இது பாரம்பரிய கலை மரபுகளை உடைத்து புதிய பாணிகளை உள்ளடக்கிய ஒரு கலையாகும். இதில் தடித்த தூரிகை ஸ்ட்ரோக்குகளை பயன்படுத்துதல் மற்றும் துடிப்பான வண்ணங்கள் காணப்படும்.

நவீன ஓவியம் என்பது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஏறத்தாழ 1970 ஆம் ஆண்டு வரை உருவான பலவகையான ஓவியப் பாணிகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயராகும். இதில் ஓவியங்கள் அவை இருப்பது போன்றே வரையப்பட வேண்டும் என்பதில்லை. நிழற்படத் தொழில்நுட்பத்தில் தோற்றம், ஓவியத்துக்கு இருந்த அந்த தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. அதனால் கலைஞர்கள் புதிய சிந்தனைகளுடன் கலையை நோக்குவதற்கான புதிய முறைகள் பற்றிய சோதனைகளில் ஈடுபட்டார்கள். பாரம்பரிய பாணிகளை விடுத்து தனிப்பட்ட பார்வை, உணர்ச்சிகள் மற்றும் பரிசோதனை முயற்சிகளை வலியுறுத்திய கலை இயக்கமாகும்.

நவீன கலை ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டு ஏளனம் செய்யப்பட்டது. ஆனால் பின்பு பல்வேறு பாணிகள் வேகம் பெறத்தொடங்கின. நவீன ஓவியத்தின் முக்கிய அம்சமாக காட்சிகளை அப்படியே பிரதிபலிக்காமல் அவற்றின் சாரத்தை நிறங்கள் மற்றும் வடிவங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகும். இதில் தூரிகை பயன்பாடு முதல் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் வரை பல புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இக்கலையில் கலைஞர்கள் தங்கள் ஆழ்மன எண்ணங்களையும், சமூகப் பிரச்னைகளையும் சுதந்திரமாக வெளிப்படுத்தத் தொடங்கினர். நவீன கலைக்குள் பல உட்பிரிவுகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
உலகம் வியக்கும் நமது ராணுவ வலிமை!

Modern painting

நவீன ஓவியத்தின் முக்கிய வகைகள்:

இம்ப்ரெஷனிசம் (Impressionism):

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சில் தோன்றிய ஒரு கலை இயக்கமாகும். ஒளியின் மாற்றங்களையும் அதன் தாக்கத்தையும் சித்தரிப்பது. ஒளியின் விளைவுகள் மற்றும் அன்றாட காட்சிகளை தத்ரூபமாக இல்லாமல், துல்லியமற்ற தூரிகை வீச்சுகள் மூலம் சித்தரிப்பது.

பிந்தைய இம்ப்ரெஷனிசம் (Post Impressionism):

இம்ப்ரெஷனிசத்திற்குப் பின் உணர்ச்சிகள் மற்றும் குறியீட்டுத் தன்மையை வலியுறுத்திய பாணி இது.

கியூபிசம் (Cubism):

இது புரட்சிகரமான நவீன ஓவியப் பாணிகளில் ஒன்றாகும். மாறிவரும் நவீன உலகிற்கு ஏற்ப இந்த சுருக்க கலை வடிவம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானது. பொருட்களை வடிவியல் வடிவங்களாக (கனசதுரம், கூம்பு) உடைத்து, பல கோணங்களில் ஒரே நேரத்தில் காட்டுதல். இதற்கு பப்லோ பிகாசோ முன்னோடியாகத் திகழ்ந்தார்.

சுரியலிசம் (Surrealism):

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய பிரபலமான நவீன ஓவிய பாணியாகும்.கனவு மற்றும் கற்பனை உலகத்தை எதார்த்தத்தோடு கலந்து வெளிப்படுத்துதல். பிரபலமான சர்ரியலிஸ்ட் ஓவியர்களில் சால்வடார் டாலி, மேக்ஸ் எர்ன்ஸ்ட், ஜோன் மிரோ மற்றும் டோயன் ஆகியோர் அடங்குவர்.

எக்ஸ்பிரஷனிசம் (Expressionism):

கலைஞரின் அகஉணர்வுகள் மற்றும் நாடகத் தன்மையை வெளிப்படுத்தும் பாணி.

ஃபாவிசம் (Fauvism):

யதார்த்தமான நிறங்களுக்கு பதிலாக, பிரகாசமான மற்றும் செயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்.

இதையும் படியுங்கள்:
இந்திய எல்லையில் தொங்கும் கண்ணாடி பாட்டில்கள் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா?

Modern painting

அரூப ஓவியம்:

எவ்வித உருவமும் இன்றி வண்ணங்களின் சேர்க்கை மூலம் உணர்வுகளைத் தூண்டுதல்.

அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் (Abstract Art):

உருவங்களை சித்தரிக்காமல் கோடுகள், நிறங்கள் மற்றும் வடிவங்கள் மூலம் மட்டுமே கலைப் படைப்பை உருவாக்குதல்.

பப் ஆர்ட் (Pop Art):

வெகுஜன கலாச்சாரம், விளம்பரங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பாணி நவீன இந்திய ஓவிய வரலாற்றில் எம்.எஃப். உசேன், ராஜா ரவிவர்மா ( நவீனத்துவத்தின் முன்னோடியாக கருதப்படுபவர்) மற்றும் குலாம் முகமது ஷேக் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

logo
Kalki Online
kalkionline.com