
ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கும் உள்ள அருங்காட்சியகங்கள் பங்குகொள்ளும் ‘சர்வதேச அருங்காட்சியக தினம்’ மே மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தின் மேம்பாட்டை வலியுறுத்துவதிலும், பல நாடுகளின் கலாசாரங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கும், அருங்காட்சியகங்கள் ஆற்றுகின்ற அளப்பரிய பணியை போற்றும் விதமாக, இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதற்கான பிள்ளையார் சுழி 1951ம் வருடம், மாஸ்கோவில் நடந்த அருங்காட்சியகங்களுக்கான கூட்டத்தில் போடப்பட்டது. ‘கல்வியும், அருங்காட்சியகமும்’ என்ற கருப்பொருளுடன் நடந்த இந்த கூட்டத்தில், எல்லோரும் அருங்காட்சியகங்களை எளிதில் அணுகுவதற்கான கட்டமைப்பை உருவாக்கத் தேவையான அடித்தளம் அமைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பை 1977ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் சர்வதேச அருங்காட்சியக கூட்டமைப்பு (ஐ.சி.ஓ.எம்) ஏற்றுக்கொண்டது. மேலும், மே 18, சர்வதேச அருங்காட்சியக தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதல் சர்வதேச தினம் 1978ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. முதல் கொண்டாட்டத்தில், 22 நாடுகள் கலந்து கொண்டன.
இந்த கொண்டாட்டம் ஒரு நாள், வாரக் கடைசி நாட்கள் அல்லது முழு வாரம் என்று வசதிக்கேற்றபடி கொண்டாடப்படுகிறது. போன வருடம், 158 நாடுகள், 37000 அருங்காட்சியகங்கள் இந்த தினத்தில் கலந்து கொண்டன. இந்த நாட்களில் அருங்காட்சியகங்களில், நுழைவு கட்டணத்தில் தள்ளுபடி, கருப்பொருளைச் சார்ந்த காட்சிப் பொருட்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. பெரும்பான்மையான அருங்காட்சியகங்களில் மாணவர்களுக்கென்று பிரத்தியேகமான பயிற்சி அரங்குகளும் இருக்கும்.
ஒவ்வொரு வருடமும், இந்த நாளுக்கென்று சிறப்பு கருப்பொருள் முடிவு செய்யப்படுகிறது. அதன்படி 2024ம் வருடத்திற்கான கருப்பொருள் ‘கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அருங்காட்சியகங்கள்.’ அருங்காட்சியகங்கள் கல்வி கற்பிக்கும் மையங்கள் என்று சொல்லலாம். கலை, கலாசாரம், பாரம்பரியம், வரலாற்று சம்பந்தமானப் பொருட்களை இங்கு காணலாம். ஒரு நாட்டினுடைய கடந்த கால நாகரிகம், வாழ்க்கை முறை, கலை, கட்டடக் கலைகள் என்று பலவற்றை அருங்காட்சியகங்களில் காண முடிகிறது. இவற்றை வரலாற்றுக் களஞ்சியங்கள் என்று சொல்லலாம்.
வலைத்தளம் பல்கிப் பெருகியுள்ள இந்த காலகட்டத்தில், நமக்குத் தெரியாதனவற்றை வலைத்தளத்தில் தேடிக் கண்டு பிடிக்கிறோம். ஆனால், அவற்றின் மூலம் நாம் அறிகின்றவை சரியா, தவறா என்று புரிவதில்லை. வலைத்தளத்தில், 50 விழுக்காடுகளுக்கு மேல் தவறான செய்திகள், விளக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், அருங்காட்சியகங்களில் உள்ள காட்சிப் பொருட்கள் மற்றும் விளக்கங்கள் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது சாத்தியமாகிறது.
பல அருங்காட்சியகங்களில், ‘நீங்களே செய்யுங்கள்’ என்று பல காட்சிப் பொருட்களை வைத்திருப்பார்கள். அருகிலுள்ள விசையை அழுத்தினால், அந்தக் காட்சிப்பொருள் இயங்க, அதற்கான விளக்கமும் ஒலி வடிவில் கிடைக்கிறது. இவை நம்முடைய ஆர்வத்தை வளர்ப்பதுடன், அதனைப் பற்றி மேலும் அறிய நம்மைத் தூண்டுகிறது. மனதில் ஆராய்ச்சி சிந்தனையை ஊக்குவிப்பதில் அருங்காட்சியகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கலை, வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம் என்று எல்லாவற்றிலும், உலகின் மற்ற பகுதியில் நடந்த மற்றும் நடப்பதை அறிவதற்கு இவை உதவுகின்றன.
ஐக்கிய நாடுகளின் சபை, மேம்பட்ட வாழ்க்கைக்கு ‘நிலையான வளர்ச்சி இலக்கு’ வைத்துள்ளது. அதனை கருத்தில் கொண்டு, 2020ம் ஆண்டு முதல், சர்வதேச அருங்காட்சியக தினம், சில இலக்குகளை அந்த ஆண்டின் முக்கியமாக ஆற்ற வேண்டிய செயலாக ஏற்றுக் கொள்கிறது. அதன்படி, இந்த வருடம் அருங்காட்சியகங்கள் கவனம் செலுத்தப்போவது தரமான கல்வி மற்றும் தொழில், கண்டுபிடிப்பு, கட்டமைப்பு.
தரமான கல்வி, பாகுபாடின்றி உலகில் எல்லா நாட்டினரையும் சென்றடைய வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்பதற்கான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். நாம் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இனம், மொழி தடையாக இருக்கக்கூடாது. பாரம்பரியத்தைக் கைவிடாமல், புதுமையை ஏற்றுக் கொண்டு, யாவருக்குமான தகவலறிந்த உலகை உருவாக்க வேண்டும் என்பது இந்த நாளை அனுசரிப்பதின் நோக்கம்.
இந்த நாளில், நகரிலுள்ள அருங்காட்சியகத்திற்கு செல்வது, அதனுடைய அவசியத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது, குறிப்பாக மாணவ, மாணவியருக்கு ஆகியவை செய்யத்தக்கவை. மற்ற நாடுகள் அல்லது மாநிலங்களுக்குச் செல்பவர்களில் பலர் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் என்று வைத்திருக்கும் பட்டியலில், அருங்காட்சியகங்கள் இருக்காது. ‘அங்கு இருப்பதெல்லாம் பழைய பொருட்கள், அதை பார்ப்பது நேர விரயம்’ என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப்போலவே, தெரிந்து கொள்வதற்கு வலைத்தளம் இருக்கும்போது அருங்காட்சியகங்களில் செல்வதனால் என்ன நன்மை என்று சொல்பவர்கள் உண்டு. அறுபது, எழுபதுகளில் மியூசியத்தை, நம் நாட்டில்,0 ‘செத்த காலேஜ்’ என்று சொல்வதுண்டு.
பல மேலை நாடுகளில் அருங்காட்சியகம் செல்பவர்களுக்கு மாத நுழைவுச் சீட்டு வைத்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தில் உள்ள எல்லாப் பிரிவுகளையும் பார்த்து, தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு கண்டிப்பாக ஒரு நாள் போதாது. அவர்களுக்கு, மாத நுழைவுச் சீட்டு, பலமுறை செல்லும் நுழைவுச் சீட்டு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தியாவில் மொத்தம் 14201 அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. உலகத்தில் 202 நாடுகளில் மொத்தம் 55000 அருங்காட்சியகங்கள் உள்ளன.