இசை மும்மூர்த்திகளின் சிகரம்: முத்துசுவாமி தீட்சிதரின் தெய்வீக இசைப் பயணம்!

23.03.26 இன்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் 251 ஆவது ஜெயந்தி!
muthuswami-dikshitar
muthuswami-dikshitar
Published on

சை மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படும் முத்துசுவாமி தீட்சிதர் 1776 ஆம் ஆண்டு பங்குனி மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் திருவாரூரில் பிறந்தார். சங்கீதத்தில் இவருடைய தந்தையே இவருக்கு முதல் குரு. இனிமையாகப் பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும் தனித் திறமையுடன் விளங்கினார்.

சிதம்பரநாத யோகி என்பவரிடம் ஸ்ரீவித்யா மகாமந்திரத்தை தீட்சையாகப் பெற்று, தினமும் உச்சாடனம் செய்து வந்தார். பிறகு தன் குருவுடனேயே காசிக்குச் சென்றார். அங்கே கங்கை நதியில் இவருக்கு ஒரு வீணை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. காசியில் கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி சங்கீதமும் பயின்றார்.

காசியிலிருந்து திரும்பி குருவின் உத்தரவுப்படி திருத்தணி சென்று முருகப்பெருமானை தரிசித்தார். திருத்தணி மலையேறும்போது ஒரு கிழவர் எதிரில் வந்தார். முத்துசாமியை வாயைத் திறக்கச் சொல்லி, கற்கண்டை ஊட்டி விட்டு உடனேயே மயில் வாகனத்தில் இருக்கும் முருகப்பெருமானாகக் காட்சியளித்தார். திருத்தணி முருகனை கண் குளிர தரிசித்தார் முத்துசுவாமி தீட்சிதர்.

இந்த தரிசனத்திற்குப் பின் மாயா மாளவ கௌளையில் தன்னுடைய முதல் கிருதியை இயற்றினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் கீர்த்தனைக¬ளை இயற்றினார். அவருடைய பாடல்களில் அவருடைய முத்திரையாக இறுதியில் குருகுஹ என்னும் வார்த்தை வரும். இவர் இயற்றிய 'வாதாபி கணபதிம் பஜே' என்னும் ஹம்சத்வனி ராகப் பாடல் மிகச் சிறந்த பாடலாக அவர் காலத்திலேயே புகழ் பெற்றது. இன்றும் சங்கீத வித்வான்களால் தங்கள் கச்சேரியில் தொடக்கப் பாடலாகப் பாடப்பெறும் பெருமை பெற்று விளங்குகிறது.

தன் இள வயதில் மதராஸுக்கு வந்த தீட்சிதர் மேற்கத்திய சங்கீதத்தையும் கற்றுக்கொண்டார். இவர் தாளங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். மேற்கத்திய பாணியில் இவர் இயற்றிய 'நொட்டுஸ்வரங்கள்' பெரும்பாலும் சங்கராபரணம் ராகத்தில் அமைந்தவை, துள்ளல் நடையில் கேட்போரை நடனமாடத் தூண்டும் தாளக்கட்டில் அமைந்துள்ளது. கர்நாடக சங்கீதம் கற்பவர்கள் ஆரம்ப காலத்தில் கற்கும் 'சக்தி சஹித கணபதிம்' போன்ற கீதங்களும் இவராலேயே இயற்றப்பட்டு புகழ் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகை ஆட்டிப்படைக்கும் கச்சா எண்ணெய்… வறுமையில் இருந்தவரை ஒரே நாளில் கோடீஸ்வரனாக்கிய சுவாரஸ்ய கதை!
muthuswami-dikshitar

இவருடைய வாழ்வில் நிறைய அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவரது தம்பி பாலுசாமி தீட்சிதர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் வித்வானாக இருந்த சமயத்தில், அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய நிச்சயித்தார் எட்டயபுரம் மன்னர். அதில் கலந்து கொள்ள எட்டயபுரம் வந்த முத்துசாமி தீட்சிதர்.

வரும் வழியெல்லாம் மழையின்றி பூமி பாளம் பாளமாக வெடித்திருந்ததையும், நீர் நிலைகள் வற்றி வறண்டு போய் இருந்ததையும் கண்டு வருந்தி, "ஆனந்தாம்ருதார்கர்ஷினி" என்று அமிர்தவர்ஷினி ராகத்தில் மனம் உருகிப் பாட கருமேகங்கள் திரண்டு மழை பொழிந்தது. இந்த அற்புத நிகழ்ச்சியால் மகிழ்ந்துபோன எட்டயபுரம் மன்னர் முத்துசாமி தீட்சிதரை தன்னுடைய அரண்மனை வித்வானாக நியமித்தது சிறப்பு செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com