நாங்கள் கொண்டாடிய சாகச தீபாவளி!

Adventurous Diwali
Adventurous Diwali
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய சாகசங்கள் நிறைந்த மறக்க முடியாத தீபாவளியைப் பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எழுபத்தி ஐந்துகளில் நாங்கள் செங்கற்பட்டில் சின்னமணியக்காரத் தெருவில் ஒரு வாடகை வசித்துக் கொண்டிருந்தோம். தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே ஐரோட்டில் இருந்த அய்யலு செட்டியார் துணிக்கடைக்குச் சென்று எங்கள் தாயார் எனக்கும் எனது அண்ணனுக்கும் சட்டை டிரவுசர் துணிகளை வாங்கித் தந்து விடுவார். அக்காலத்தில் ரெடிமேட் துணிகள் கிடையாது. ஐரோட்டில் இருந்த செல்லப்பா டெய்லர் மிகவும் பிஸியான டெய்லர். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பிருக்கும்போதே காலை ஒரு முறை, மாலை ஒரு முறை அவர் கடைக்குச் சென்று “சட்டை டிரவுசரைத் தைத்து விட்டீர்களா?” என்று அவரை நச்சரிக்கத் தொடங்கி விடுவோம். “நாளை கட்டாயம் தந்துடறேம்பா” என்று தீபாவளிக்கு முந்தைய நாள் வரை சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், எப்படியாவது தீபாவளிக்கு முந்தைய நாள் சாயங்காலம் சட்டை டிரவுசரைத் தைத்துக் கொடுத்து விடுவார். அவற்றை வாங்கும்போது மனதில் ஒருவித அலாதி மகிழ்ச்சி பெருகும்.

மற்றொரு சாகசம் தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு நடக்கும். என் அப்பா எனக்கும் எனது சகோதரன் ராஜேந்திரனுக்கும் பட்டாசுகளை சென்னையிலிருந்து வாங்கிக் கொண்டு ரயில் மூலம் வீடு திரும்புவார். மாலை ஆறரை மணியிலிருந்தே வீட்டிற்கும் தெருவிற்குமாக அப்பாவின் வருகையை எதிர்நோக்கி நடந்தவண்ணம் இருப்போம். இரவு சரியாக எட்டு மணிக்கு வீட்டிற்கு வருவார். வாங்கி வந்த பட்டாசுகளை சரிபாதியாகப் பங்கிட்டுத் தருவார். என் பங்கை நான் பள்ளிக்கு நோட்டுப் புத்தகங்களைக் கொண்டு செல்லும் அலுமினியப் பெட்டியில் வைத்து பத்திரப்படுத்துவேன். எங்கள் இருவருக்கும் இரவு முழுவதும் தூக்கமே வராது. மறுநாள் எப்போது விடியும் என்று தூங்காமலேயே படுத்திருப்போம்.

மறுநாள் அதிகாலை எங்கள் தாயார் எங்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வைப்பார். தலையையும் உடலையும் துடைத்ததும் துடைக்காததுமாக புது டிரவுசர் சட்டையை மாட்டிக் கொள்ளுவோம். இருவரும் எங்கள் பங்கு வெடிகளை மெல்ல மெல்ல கொளுத்தி மகிழ்வோம். அந்த மகிழ்ச்சி சில மணி நேரமே நீடிக்கும். எங்கள் பங்கு பட்டாசுகளை வெடித்து அது கணிசமான அளவில் குறையத் தொடங்கும்போது மனதில் வருத்தம் படரத் தொடங்கும். இருவரும் ஒருவர் பெட்டியை மற்றொருவர் பார்த்து யாரிடம் எவ்வளவு பட்டாசுகள் இருக்கிறது என்பதை நோட்டமிடுவோம். இதற்குள் காலை டிபன் சாப்பிடத் தாயார் எங்களை அழைப்பார்கள். கை, கால்களை கழுவிக்கொண்டு வந்து உட்காருவோம்.

இதையும் படியுங்கள்:
தீபாவளியில் நல்லெண்ணெய் குளியல் செய்வதன் மகத்துவம் தெரியுமா?
Adventurous Diwali

தீபாவளி என்றால் எங்கள் வீட்டில் காலையில் ஆட்டுக்கால் பாயாவும் தோசையும்தான் மெனு. பல வருடங்களாக இந்த மெனு தொடர்ந்துகொண்டே இருந்தது. அக்காலத்தில் விறகு அடுப்பு அல்லது மண்ணெண்ணெய் ஸ்டவ்வில்தான் சமையல் நடைபெறும். ஆட்டுக்காலை வேக வைப்பது ஒரு பெரிய சாகசமாகும். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு பதினொரு மணி முதல் காலை ஏழு மணி வரை ஆட்டுக்கால் அடுப்பில் வேகும். அன்றிரவு யாரும் தூங்கவே மாட்டோம். காலை எட்டு மணிக்கு தோசையும் ஆட்டுக்கால் பாயாவும் தயாராகிவிடும். மளமளவென சாப்பிட்டு முடித்து மீண்டும் மிதமிருக்கும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்குவோம்.

காலை பத்து மணி அளவில் எல்லாம் தீர்ந்து போகும். அக்கம் பக்கத்து பையன்கள் பட்டாசு வெடிப்பதை வேடிக்கைப் பார்ப்போம். இந்த சமயத்தில் எங்கள் அடுத்த சாகசம் தொடங்கும். நாங்கள் கொளுத்திய பட்டாசுகளில் வெடிக்காமல் சில பட்டாசுகள் கீழே கிடக்கும். அதைச் சேகரித்து அதைப் பிரித்து அதனுள் இருக்கும் எரியாத மருந்துகளை ஒரு காகிதத்தில் கொட்டுவோம். கணிசமான அளவில் சேர்ந்ததும் அதை பந்து போல மடித்து மத்தாப்பால் கொளுத்துவோம். அது ‘புஸ்’ என்ற ஒரு சப்தத்துடன் கொழுந்து விட்டு எரியும். இது சற்று விபரீத விளையாட்டுதான். ஆனாலும், இப்படிக் கொளுத்தி மகிழ்வோம். ஒவ்வொரு தீபாவளியையும் சாகசத்துடன் கொண்டாடி மகிழ்ந்த பொன்னான காலங்கள் அவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com