நவராத்திரி கொலு மண் பொம்மைகள் தாத்பரியம் தெரியுமா?

நவராத்திரி நவ கட்டுரைகள் - 7
Navarathiri Kolu
Navarathiri Kolu
Published on

தினெண் புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது… எதிரிகளை வெற்றி கொள்வதற்காக மகாராஜா சுரதா தனது குரு சுமதாவின் ஆலோசனை கேட்கிறார். குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலை கொண்டு காளி ரூபத்தை செய்கின்றான். அதை ஆவாஹனம் பண்ணி உண்ணாநோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான். அம்பிகை அவனுக்குக் காட்சி தந்து அவனது வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும் பகைவர்களையும் அழித்து பின் ஒரு புது யுகத்தினையே உண்டுபண்ணுகிறாள்.

‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னை பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும் சௌபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்கிறாள் அம்பிகை தேவி புராணத்தில். நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

முதல் படியில் ஓரறிவு உயிர் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருக்க வேண்டும்.

இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான் போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு, பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவை பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகள் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம் பெற வேண்டும். நவகிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன இருக்க வேண்டும்.

ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் அவர் தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு மத்தியில் ஆதிபராசக்தி நடுநாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வமாக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி பொம்மைகள் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

நவராத்திரி கொலுவை பராசக்தியின் விஸ்வரூப தரிசனம் எனக் கூறலாம். ‘எல்லாமாக இருப்பவள் நானே’ என்பதையே அந்த கொலு பொம்மைகள் வாயிலாக பராசக்தி நமக்கு உணர்த்துகிறாள். நவராத்திரி கொலுவின் தத்துவம் இதுதான்.

இதையும் படியுங்கள்:
உலகப் புகழ் பெற்ற குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா!
Navarathiri Kolu

சித்திரை மாத வளர்பிறை பிரதமை முதல் ஒன்பது நாள் உமாதேவியை துதித்து விரதம் இருந்து பூஜிக்கும் வசந்த நவராத்திரியும் புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் ஒன்பது நாள் பூஜிக்கும் சாரதா நவராத்திரியும் பரிபூரணமாயும் நித்தியமாயும் உள்ள சக்தி தேவியின் வழிபாட்டை தனிப்பெரும் நோக்கமாய் கொண்டு கொண்டாடப்படும் கலை விழா உத்ஸவமாகும். நவராத்திரியை அம்பிகைக்கு உகந்த நாட்களாக தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகிய நூல்கள் வர்ணிக்கின்றன. ஆதிசக்தியும் அஷ்ட க்தியும் ஒன்றாகி நிற்கும்போது நவசக்தியாய் தோற்றமளித்து திகழ்கிறது. இந்த நவசக்தியை கொண்டாடும் உத்ஸவமே நவராத்திரி விழாவாகும். நவராத்திரியில் ஒன்பது நாட்களும் முறையே சைலபுத்ரி, பிரும்மசாரணி, சந்திரகாண்டா ,கூஷ்மாண்டா, ஸ்கந்த மாதா  காலராத்ரி, மகாகவுரி, சித்திதா என்ற நவ துர்காவாக நவ நாட்களிலும் ஒளிவிடுகின்றாள் அம்பிகை. இதனால்தான் பூஜையில் அந்தந்த நாட்களுக்கு உரிய தேவியாக பெண் குழந்தைகளை வரித்து பூஜை செய்யப்படுகின்றது.

அம்பிகையின் அருட்கொடையாய் விளங்கும் இந்த உத்ஸவ நாட்களில் பராசக்தியே துர்கையாகி தீமைகளை அழிக்கிறாள். சரஸ்வதியாகி நல்ல புத்தியையும் பக்தியையும் அளிக்கிறாள். மகாலட்சுமியாகி செல்வங்களை வாரி வழங்குகிறாள். புத்தி, பக்தி, சித்தி இம்மூன்றும் அடைய உதவும் அம்பிகை வீடுபேறு அடையச் செய்யவும் கை கொடுக்கிறாள். நவராத்திரி ஒன்பது நாட்களிலும் அன்னையின் அருள்வடிவங்களே பூஜிக்கப்படுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த நவராத்திரியில் அம்பிகையின் அவதாரங்களாக கொலு பொம்மைகளை  வைத்து ஆராதித்து நவராத்திரி விழாவைக் கொண்டாடுகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com