இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூருக்கு அருகிலுள்ள சிறிய நகரமான குலசேகரப்பட்டினத்தில்தான் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
குலசை என்று அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் அக்டோபர் மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது. 300 ஆண்டுகள் பழைமையான ஞான மூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படும். இது ஒரு கிராமிய திருவிழாவாகும். பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு வகையான திருக்கோலத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சுயம்புவாகத் தோன்றிய முத்தாரம்மன் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரருடன் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும். ஈசன் இங்கு மனித வடிவில் மீசையுடன், அவருடைய வலது கையில் செங்கோலைத் தாங்கி, இடது கையில் திருநீற்றுக் கொப்பரையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.
தசரா திருவிழாவை ஒட்டி தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக பக்தர்கள் செவ்வாடை அணிந்து இக்கோயிலுக்கு வருவார்கள். கொடியேற்றத்தைத் தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்கின்றனர். பிறகு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து விழா நிறைவில் கோயிலில் செலுத்துகின்றனர்.
குலசை கோயிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்துவிட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அங்கப் பிரதட்சணமாகவே முத்தாரம்மன் கோயிலுக்கு வருகின்றனர். முற்காலத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். அதன்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு பக்தர்கள் மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்களும் தர்மம் செய்கிறார்கள்.
முத்தாரம்மனுக்கு காளி வேடம் பூண்டு பக்தர்கள் பலரும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காளி வேடம் போடுபவர்கள் தசராவின் போது 48 நாட்கள் கடும் விரதம் இருந்து கோயிலில் தங்கி விரதம் இருந்து கொடியேற்றத்திற்குப் பிறகு ஊர் ஊராகச் செல்வார்கள். இப்படி காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு, வளையல் போன்ற பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கிறார்கள். காளி வேடம் அணிந்து வருபவர்களை வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டு, புடைவை எடுத்துக் கொடுப்பதும் நேர்த்திக்கடனாகச் செய்கிறார்கள்.
விஜயதசமி அன்று இரவு மகிஷனை சம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானிடம் இருந்து முத்தாரம்மன் சூலம் வாங்கி சம்ஹாரம் செய்வதாக வரலாறு உண்டு. எனவே, முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தீமையை அழித்து நன்மையை நிலை நாட்டுவதுதான் இதன் முக்கியத்துவம். அசுர வதம் முடிந்ததும் பக்தர்கள் ‘ஓம் காளி! ஜெய் காளி’ என ஆக்ரோஷமாக முழக்கமிடுகின்றனர். அப்போது மேள தாளங்களும், வாத்தியங்களும் முழங்க வான வேடிக்கைகள் நடைபெறும். மகிஷாசுரனை வதம் செய்ததும் அம்பிகையை குளிர்விக்க பன்னீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பிறகு தேரில் முத்தாரம்மன் பவனி வருவாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி வருவது இந்தத் தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
பிறகு சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு கட்டிய காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்து விடுவார்கள். 12ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். இத்துடன் தசரா திருவிழா நிறைவடையும்.