
அதென்ன 9 நாட்கள் 9 வண்ணங்கள்?
குழந்தைகளும் சுலபமாக கூறிவிடும் நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும், மும்பை மகாலெஷ்மி தேவிக்கு அணிவிக்கும் ஒன்பது ஆடைகளின் வண்ண நிறம் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அந்தந்த நாட்களில் அந்தந்த கலர் ஆடையை மும்பை வாழ் பெண்கள் மட்டுமன்றி, ஆண்களும் அணிவார்கள்.
இவ்வருடம் (2025) செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 30 ஆந்தேதி வரை அணியும் ஆடைகளின் நிறங்கள்:-
22.09.2025. வெள்ளை
23. 09. சிகப்பு
24.09. ராயல் ஃப்ளூ
25.09 மஞ்சள்
26.09 பச்சை
27.09 சாம்பல்
28.09 ஆரஞ்சு
29.09 மயில் பச்சை
30.09 பிங்க்
நவ நவராத்திரி கொண்டாட்டத்தில், தாண்டியா மற்றும் கர்பா நடனங்கள் முக்கியமானதாகும். நவராத்திரி 9 நாட்களும், மாலை வேளைகளில், அநேகர், வித-விதமாக கலர்ஃபுல் உடையணிந்து தாண்டியா மற்றும் கர்பா ஆடச் செல்வார்கள். கர்பா, தாண்டியா இரண்டும் குஜராத்தில் உருவானவைகள். துர்கா தேவிக்கும் மகிஷாசுர அரக்கனுக்கும் இடையே நடந்த ஒன்பது நாள் போரின் இறுதியில் தேவி வென்றாள். இதைக்கொண்டாடும் வகையில், தாண்டியா, கர்பா நடனங்கள் நடைபெறுகின்றன.
உலகம் முழுவதும் இருக்கின்ற இந்தியர்கள் இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
நவராத்திரியில் ஆடும் தாண்டியா மற்றும் கர்பா நடனங்களில் இருக்கும் வித்தியாச விபரங்கள்:
தாண்டியா:
தாண்டியா நடனம், ஆரத்திக்குப் பிறகு மாலை வேளைகளில் மகிழ்ச்சியாக வண்ண மயமான குச்சிகளைக் கொண்டு ஆடப்படுகிறது. கிருஷ்ண லீலாவை மையமாக கொண்டு, ராதை மற்றும் கோபிகளுடன் வட்ட வடிவ அமைப்புக்களில், தாளத்திற்கேற்ப ஆடப்படும்.
கர்பா:
கர்பா நடனம், தாண்டியாவைவிட, அதிக பக்தி ஈர்ப்பைக்கொண்டு பஜனைகள் மற்றும் கீர்த்தனைகளுக்காக ஆடப்படுகிறது. ஒரு களிமண் விளக்கைச் சுற்றி சுழற்சியான நடன அசைவுகளுடன் கர்பா நடனம் நிகழ்கிறது.
ஆரத்திக்கு முன்பாக, கைகளைத் தட்டிக்கொண்டும், கைகள் மற்றும் கால்களின் அசைவுகள் கொண்டும் ஆடப்படுகிறது.
கர்பா பாடல்கள், தேவியை மையமாக கொண்டவைகள்.
பெண்மை மற்றும் கருவுறுதலைக் கொண்டாடுகிறது. தாய் தெய்வத்தின் ஒன்பது வடிவங்களுக்கும் மரியாதை செலுத்துகிறது. பெரிய விளக்கு அல்லது சக்தியின் சிலையைச் சுற்றி வட்ட வடிவில் ஆடப்படுகிறது. தேவியின் தெய்வீக ஆற்றல் தங்களுக்குள் இருக்கிறது என்பதை மதிக்கும் வகையில் விளக்கு சின்னத்தை சுற்றி நடனம் நடைபெறும்.
கர்பா, தாண்டியா ஆகிய இரு நடனங்களுக்கும், கலர்ஃபுல் உடைகள் முக்கியம். அதிலும் சான்யா சோளி மற்றும் காக்ரா சோளிகள் போன்றவைகளை அநேகர் விரும்பி அணிவதுண்டு.
கலர் ஃபுல் -காரணம்..!
சானியா, காக்ரா சோளிகள், பூ வேலைப்பாடுகளுடனிருக்கும் கூடிய வண்ண மயமான அங்கி, துப்பட்டா கீழே பாவாடை ஆகியவைகள் இணைந்ததாகும். மணிகள், கண்ணாடிகள், குண்டுகள் போன்றவைகள் பதித்திருக்கும். பாடலுக்கு ஏற்ப, சுழன்று சுழன்று ஆடுகையில், குடை மாதிரி விரிவது அழகாக. இருக்கும். பள-பளவென இரவு ஒளியில் பளிச்சிடும்.
உபரி தகவல்கள்:
நவராத்திரி சமயம், பீரோவில தூங்கிக் கொண்டிருக்கும் ஆடைகளுக்கு விடுதலை அளிக்கும் வண்ணம் வெளியே எடுத்து அணியப்படும். குறிப்பிட்ட கலர் இல்லையென்றால், கடைக்குச்சென்று வாங்கி உடுத்துவார்கள்.
கோவிலுக்கு செல்வதும், அழைத்த வீடுகளுக்கு போவதும், வீட்டிற்கு வந்தவர்களுக்கு விருந்தோம்பல் செய்வதும், நடனங்கள் ஆடுவதுமென கல-கலவென்று நவராத்திரி பண்டிகை தூள் பரத்தும்.
நவராத்திரி! சுபராத்திரி!
நவவித சக்திகளைக் கும்பிட்டு
நவ-நவ - நவராத்திரியை கோலாகலமாக கொண்டாடுவோம்!
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்த்தினி - ரம்யக பர்த்தினி சைலஸுதே!