
பொதுவாக வயதானவர்கள் பலதையும் நினைத்து கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த வயதில் வேலையிலிருந்து ஓய்வு பெற்று, பிள்ளைகளின் கடமைகளை முடித்திருந்தாலும் அவர்கள் மனம் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும். அவர்கள் நிம்மதியாக வாழ சில உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும். அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
எல்லோருக்கும் உங்களைப் பிடிக்காது:
சிறுவயதில் பிறரைக் கவர, நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொண்டிருப்பீர்கள். உங்களுடைய ஆசைகளைக் கூட விட்டுக் கொடுத்திருப்பீர்கள். ஆனால் 70 வயதுக்கு மேல் யாரையும் கவர நினைக்காமல் பிடித்த வாழ்க்கையை வாழலாம். உங்களைப் பற்றி அறிந்தவர்கள் உங்களை எப்போதும் நேசிப்பார்கள் என்கிற உண்மையை புரிந்து கொண்டால் நிம்மதி கிடைக்கும்.
காலம் காயங்களை ஆற்றும்:
இந்த வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ துயரங்களையும் துன்பங்களையும் இழப்புகளையும் சந்தித்திருப்பீர்கள். இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு சகித்துக் கொண்டு இத்தனை வயது வரை வாழ்ந்து இருக்கிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். காலம் என்பது எந்தவிதமான காயத்தையும் ஆற்றும்.
உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
வயதானால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். எத்தனை அழகுக் கிரீம்கள் அல்லது டிரீட்மென்ட்கள் எடுத்தாலும் இளமை விடை பெற்றுப் போயிருக்கும். முகத்தில் சுருக்கங்கள், மூட்டு வலி, கை, கால் வலி எட்டிப் பார்க்கும். முகத்தில் இருக்கும் ஒவ்வொரு கோடும் ஒரு கதை சொல்லும். அத்தனை விதமான அனுபவங்கள் உங்களுக்குக் கிட்டியிருக்கும். உங்கள் உடலை அப்படியே ஏற்றுக் கொள்வது மனதிற்கு அமைதியைத்தரும்.
பணம் வெற்றியின் அளவுகோல் அல்ல:
இளம் வயதில் குடும்பத்தைக் காப்பாற்ற பணத்தை அளவுகோலாக வைத்து உழைத்திருப்பீர்கள். வீடு, கார், சொத்து இவைதான் வெற்றியின் அடையாளம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் 70 வயதிற்கு மேல் பணம் என்பது வாழ்க்கையை சுலபமாக எதிர்கொள்ள உதவும் ஒரு கருவி மட்டுமே. அது ஆரோக்கியம், அன்பு, உண்மையான மகிழ்ச்சி ஆகியவற்றைத் தராது என்று உணர்வீர்கள். உலகில் மிகப்பெரிய பணக்காரர்களைவிட ஏழைகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.
தவறுகளை மன்னிக்கவும்:
இளமையில் உங்களுக்கு யாராவது தீங்கு செய்திருந்தால், அவர்கள் மீது பழி உணர்ச்சியோ அல்லது வருத்தமோ ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் 70 வயதிற்கு மேல் தவறுகள் மனிதனின் இயல்பான விஷயம் எனப்புரியும். நீங்களே கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும், அவற்றை அனுபவங்களாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றிற்காக வருந்த வேண்டிய அவசியமில்லை. உங்களை நீங்களே மன்னித்துக்கொண்டு அமைதியாக வாழலாம்.
சில உறவுகள் தொடராது:
வாழ்க்கையில் எல்லா உறவுகளும் தொடர்ந்து நீடித்திருக்க மாட்டார்கள். பழகிய நண்பர்கள், உறவுகள், குடும்பத்தினர் போல் கூட பிரிந்து எங்கோ போயிருக்கலாம். இளம் வயதில் இவையெல்லாம் மிகப்பெரிய தோல்விகளாக தோன்றியிருக்கும். ஆனால் இது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று முதுமை உணர்ந்தியிருக்கும். சில மனிதர்களோடு தொடர்ந்து உறவாடிக் கொண்டிருப்பது வலியையும் வேதனையும் கொண்டு வந்து சேர்க்கும்.
மெதுவான இயக்கம் என்பது பலவீனமல்ல:
சிறுவயதில் இருக்கும் ஓட்டமும் வேகமும் முதுமையில் இருக்காது. அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. மெதுவாக உடல் இயங்குவது பலவீனமல்ல. இது ஞானத்தின் அடையாளம். அவசர அவசரமாக எந்த வேலையும் செய்யாமல் நிதானமாக ஒரு கப் காபியை ரசித்து ருசித்து அருந்த வேண்டும்.
மகிழ்ச்சி என்பது உள்ளிருந்து வருவது:
சிறுவயதில் ஆடம்பரமான பொருள்கள் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பியிருப்பீர்கள். ஆனால் 70 வயதில் மகிழ்ச்சியை விலைக்கு வாங்க முடியாது. அது மனதின் உள்ளிருந்து வருவது. நன்றியுணர்வு, நோக்கம் உள்ளார்ந்த அமைதி, இவைதான் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்று உணர்ந்திருப்பீர்கள். இந்த உண்மைகளைத் தெரிந்துகொண்டால் 70 வயதுக்கு மேல் ஒருவரால் நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழமுடியும்.