
பணம்! பணந்தான்!
‘பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும்!’ என்றும்,
‘பணம் பாதாளம்வரை பாயும்!’ என்றும்,
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே!’என்றும்,
‘காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா!’என்றும், பணத்தைப் பற்றிய கருத்துக்கள் ஏகமாக நம் உலகில் உண்டு. இப்பொழுதுதான் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
முன்பெல்லாம் பணக்கார நாடுகள்,ஏழை நாடுகள் என்றே, நாடுகள் வகைப்படுத்தப் பட்டன. பணம் ஒன்றாகவே இருந்தாலும், கணக்கில் காட்டி வரி செலுத்தவில்லையென்றால், அது கள்ளப் பணமாகி விடுகிறது! கறுப்புப் பணம் என்றும் அழைக்கப்படுகிறது. தவறு செய்வதோ நாம். இழிவான பெயரை ஏற்பதோ நம் பணம்!
பணத்திற்கும், தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள தங்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவர் பணக்காரர் என்பதைப் பார்த்தவுடன் பறைசாற்ற உதவுவது, தங்கந்தான்!
‘பால் மாட்டுக் கன்றும் பணக்காரன் வீட்டுப் பிள்ளையும் பார்த்தவுடனே தெரிவார்கள்!’ என்று கூறுவார்கள். அப்படிக் கண்டு பிடிக்க உதவுவதில், தங்கத்தின் பங்கே அதிகம். ஒரு காலத்தில், செல்வச் செழிப்பைக் காட்டுவதாக கால் நடைகள் இருந்தன. அதிகமான எண்ணிக்கையில் மாடுகளை வைத்திருப்பவர்கள் செல்வந்தர்களாகக் கருதப்பட்டார்கள். பின்னர் அது மாறி, நிலங்களை அதிக அளவில் வைத்திருப்போரே பணக்காரர்கள் என்றழைக்கப்பட்டார்கள். பண்ணையார்கள்,செல்வந்தர்களாகவே இருந்தார்கள்.
இப்பொழுதோ அதிக வீடுகள், வங்கியில் வழிந்தோடும் அளவுக்குப் பணம், ஆங்காங்கே வீட்டு மனைகள், உடலையே மறைக்கும் அளவுக்கு ஆபரணங்கள் என்று பணக்காரர்களின் இலக்கணம் மாறிக்கொண்டே போகிறது. மண்ணும்,பொன்னும் என்றும் பணப்பெருமையின் அடையாளச் சின்னங்கள்.
எவ்வளவுதான் சொத்து இருந்தாலும், அவசரத் தேவைக்குக் கையில் கேஷ் அவசியமாகிறது. டிஜிடல் பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையிலும், கேஷ் பரிவர்த்தனையை விரும்புகிறவர்களும் இருக்கிறார்கள். நம் நாட்டைப் பொறுத்த வரை நமது ரிசர்வ் வங்கி, தேவையான அளவுக்கு நோட்டுகளையும், சில்லரைக் காசுகளையும் வெளியிட்டு வருகிறது.
ஒரு ரூபாய் நோட்டிலிருந்து, இரண்டாயிரம் ரூபாய் வரை பல ரூபாய் மதிப்புகளில், சமீப காலங்களில் நோட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மக்களின் நலங்கருதி சிலவற்றை அதிக அளவிலும், சிலவற்றை நிறுத்தியும், காலத்திற்குத் தகுந்தாற்போன்ற முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுத்து, செயல்படுத்தியும் வருகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1940 களில், பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பாங்க் ஆப் இன்டிபென்டண்ஸ் (Bank of Independence) என்ற பெயரில் வங்கி ஒன்றை, மக்கள் நலங்கருதி ஆரம்பித்தாராம். அந்த வங்கி மூலம் ஒரு லட்ச ரூபாய் நோட்டையும் வெளியிட்டாராம்.
அந்த லட்ச ரூபாய் நோட்டின் இடது புறத்தில் அவரின் உருவப்படமும், வலது புறத்தில் அப்போதிருந்த பிளவு படாத இந்தியாவின் வரைபடமும், நடுவில் ஆங்கிலத்தில் ஜெய் ஹிந்த் (Jai Hind) என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம். அந்த லட்ச ரூபாய் நோட்டு 1944 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாம்.
லட்ச ரூபாய் நோட்டைப் பார்க்க ஆவலாக உள்ளதல்லவா?
இதோ பாருங்கள் கீழே!