
உலகின் அழகான பெரிய ரயில் நிலையம்: உலகின் மிகப்பெரிய ரயில் நிலையமான நியூயார்க்கின் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தின் அற்புதமாக இருந்து வருகிறது. இதனை கட்டுவதற்கு சுமார் 10 ஆண்டுகள் ஆகின. 1903 இல் தொடங்கி, முழுமையடையாத போதிலும், பிப்ரவரி 2, 1913 அன்று அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த நிலையத்தின் பிரமாண்டமான திறப்பு விழா அதன் முதல் நாளிலேயே 1,50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது, இது உலகின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது.
44 நடைமேடைகள் மற்றும் 67 தண்டவாளங்களைக் கொண்ட இந்த ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த நிலையத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அதன் இரண்டு ரயில் பாதைகள் நிலத்தடியில் உள்ளன. இது கட்டிடக்கலையின் அற்புதமாக அமைகிறது. 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நிலையத்தின் அளவு மற்றும் கட்டிடக்கலையின் அமைப்பு அதை ஒரு போக்குவரத்து மையமாக மட்டும் இல்லாமல் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். "கிராண்ட் சென்ட்ரலுக்குள் நுழைவது ஒரு அரண்மனைக்குள் நுழைவது போன்ற உணர்வு" என்று முனையத்தைப் பார்வையிட்ட ஒரு கட்டிடக்கலை ஆர்வலர் கூறியுள்ளார்.
வரலாற்றுக்கு அப்பால், இந்த நிலையம் ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக உள்ளது. ஒவ்வொரு நாளும், சுமார் 1,25,000 பயணிகள் கிராண்ட் சென்ட்ரல் வழியாக பயணம் செய்கிறார்கள், 660 மெட்ரோ ரயில்கள் கடந்து செல்கின்றன. இது பல ஹாலிவுட் படங்களுக்குப் பிடித்த படப்பிடிப்பு இடமாகவும் இருந்து வருகிறது.
பல பிரபலமான திரைப்படங்கள் இங்கு படமாக்கப் பட்டுள்ளன, இது அதன் புகழை மேலும் அதிகரிக்கிறது. இதனால்தான் பலர் அதன் அழகை ரசிக்கவே வருகிறார்கள். மேலும் இந்த ரயில் நிலையத்தின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்று பிரதான கூட்ட அரங்கில் உள்ள ஓபல் கடிகாரம். எல்லா திசைகளிலிருந்தும் தெரியும் இந்த கடிகாரம், ஒரு பிரபலமான சந்திப்பு இடமாக மாறியுள்ளது.
இவ்வளவு ஆடம்பர ரயில் நிலையத்தின் மர்மம் என்னவென்றால், கிராண்ட் சென்ட்ரல், வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலுக்கு அடியில் மறைந்திருக்கும் ஒரு ரகசிய தளம்தான். டிராக் 61 -ஐக் கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த தளம் மூலம் அவர் ஹோட்டலில் இருந்து நேரடியாக வெளியேற முடியும். ஆனால் பொதுமக்களின் பார்வைக்கு இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலமாக ரயில்வே ஸ்டேஷன்:
சுற்றுலா செல்வதற்கு, ஓர் அழகிய சுற்றுலாத்தலமாக மலேசியாவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அதுதான் "ஈப்போ ரயில் நிலையம், "மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஈப்போ நகரில் அமைந்துள்ள ஒரு முக்கிய ரயில் நிலையம் ஆகும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாகும், இது "ஈப்போவின் தாஜ்மகால்" என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது . சிங்கப்பூரில் இருந்து பாங்காங் வரை செல்லும் வேகமான அழகிய ரயில், இந்த ஸ்டேஷன் வழியாகத்தான் செல்கிறது. 30 மணி நேரம் பயணிக்கும் இந்த ரயில் ஈப்போ ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும் அழகைப் பார்க்கவே நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உலகில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களின் ரோல் மாடல் ரயில்வே ஸ்டேஷனாக இருக்கும் இந்த ஈப்போ ரயில்வே ஸ்டேஷனின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பில் தமிழர்களின் பங்கு அதிகம். இங்கு உலகின் பழமையான குகை ஓவியங்கள் கண்ணை கவரும் வண்ணம் உள்ளது.
தேவாலய வடிவில் ஒரு ரயில் நிலையம்:
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் மத்திய ரயில் நிலையம் உலகளவில் 'மிக அழகான ரயில் நிலையங்களில் ஒன்று' என்று அழைக்கப்படுகிறது. இது கல், கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன அரண்மனை, இது 1905 ஆம் ஆண்டு பெல்ஜிய கட்டிடக் கலைஞர் லூயிஸ் டெலாசென்செரியால் கட்டி முடிக்கப்பட்டது, மேலும் உலகின் மிகச்சிறந்த ரயில் நிலையங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படுகிறது. மைய 75 மீட்டர் உயரத்தில் குவிமாடம் இதன் 66 மீட்டர் எஃகு விதானம் மற்றும் பரந்த உட்புறம் 20 க்கும் மேற்பட்ட வகையான பளிங்கு மற்றும் கல்லால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இதில் அலங்கரிக்கப்பட்ட தூண்கள், ஆச்சரியமான இரும்பு வேலைப்பாடுகள் மற்றும் ஒரு பிரமாண்டமான நிலைய கடிகாரம் உள்ளன.
இந்த நிலையம் பெரும்பாலும் 'ரயில் பாதை கதீட்ரல்' என்று அழைக்கப்படுகிறது.இது ஒரு பாரம்பரிய நினைவு சின்னமாகும். பெல்ஜியம் தலை நகரமான பிரஸ்ஸல்ஸிலிருந்து ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் இங்கு ரயில்கள் வருகின்றன. அதில் இந்த ரயில் நிலையத்தின் அழகை கண்டு ரசிக்கவே அதிகம் பேர் வருகின்றனர்.