
மினியேச்சர் ஓவியம் என்பது மிகச் சிறிய அளவில் வரையப்படும் ஒருவகை ஓவியக் கலையாகும். இவை பெரும்பாலும் நுட்பமான வேலைப்பாடுகளை கொண்டிருக்கும். கையால் செய்யப்பட்ட வண்ணங்களால் வரையப்படும் இவை சிறியதாக இருந்தாலும் தெளிவான மற்றும் வண்ண மயமானவையாக இருக்கும். இவற்றின் சிக்கலான மற்றும் நுட்பமான தூரிகை வேலைகள் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும்.
இவை பெரும்பாலும் காகிதம், துணி அல்லது தந்தம் போன்ற பொருட்களில் வரையப்படுகிறது. இந்திய மினியேச்சர் ஓவியங்கள் மிகவும் பிரபலமானவை. இவை புராணங்கள், வரலாற்று நிகழ்வுகள், இலக்கியங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கின்றன.
ஓவியங்களில் பயன்படுத்தப்படும் தூரிகைகள் மிகவும் மெல்லியதாகம், கூர்மையாகவும் இருக்கும். இவை ஓவியரின் கைத்திறனை நன்கு வெளிப்படுத்துகின்றன. மினியேச்சர் ஓவியங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மிகவும் பிரகாசமாகவும் தெளிவாகவும் இருக்கும்.
மினியேச்சர் ஓவியங்களில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் இயற்கையான மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன. தங்கம், வெள்ளியின் மெல்லிய தாள்கள், தாதுக்கள், தாவரங்கள், விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படுபவை. இந்த ஓவியங்கள் கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், அரசவை ஓவியங்களிலும் பயன்படுத்தப்பட்டன.
மினியேச்சர் ஓவியம் பாரசீக, இஸ்லாமிய மற்றும் இந்திய ஆகிய மூன்று வகையான கலைகளின் கலவையாகும். இந்த வகையான கலைகள் 16ஆம் நூற்றாண்டில் இருந்து இந்தியாவில் உள்ளன. அங்கு காகித அடிப்படையிலான 'வஸ்லி' ஓவியத்தில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் பொதுவாக போர் கருப்பொருள்கள், வனவிலங்குகள் மற்றும் புராணக் கதைகளை குறிக்கின்றன. இந்த ஓவியங்களை உருவாக்க இயற்கை கல் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டன.
மினியேச்சர் ஓவியங்களில் நிறைய வகைகள் உள்ளன. முகலாய மினியேச்சர்களில் முகலாய அரசர்களின் வாழ்க்கை, வேட்டையாடுதல், போர் செய்தல் போன்றவற்றை சித்தரிக்கின்றன. காதல், வீரம் மற்றும் மத நிகழ்வுகளை ராஜபுத்திர மினியேச்சர்கள் சித்தரிக்கின்றன.
பஹாரி மினியேச்சர்களோ மலைப்பகுதிகளின் இயற்கை அழகை சித்தரிக்கின்றது. வங்காளத்தின் கிராமிய வாழ்க்கையை பங்கால் மினியேச்சர்கள் சித்தரிக்கின்றன.
மினியேச்சர் ஓவியங்களின் வளர்ச்சி பெரும்பாலும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பாணிகளில் வளர்ந்தன. குறிப்பாக முகலாயர் காலத்தில் இது ஒரு செழிப்பான கலை வடிவமாகத் திகழ்ந்தது. இன்று மினியேச்சர் ஓவியங்கள் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படுகின்றது.