நினைவில் சுழலும் பம்பரம்!

பம்பரம் விளையாட்டு
பம்பரம் விளையாட்டு

ம்பரம் ஒரு பாரம்பரியமான விளையாட்டு. அக்காலச் சிறுவர்கள் தெருக்களில் பம்பரத்தை விளையாடி மகிழ்வது வழக்கம். பம்பரம் குடிசைத்தொழிலாக பலரால் தயாரிக்கப்பட்டது. எழுபது, எண்பதுகளில் அதிக அளவில் பம்பரங்கள் விற்பனை ஆனதால் இத்தொழிலில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். பம்பரம் கொய்யா அல்லது கருவேல மரத்தால் உருவாக்கப்பட்டன. மேற்பகுதி அகன்றும் கீழே மெல்ல மெல்லக் குறுகி இறுதியில் சற்று கூம்பு வடிவத்திலும் பம்பரம் உருவாக்கப்படும்.   கீழ்ப்பகுதியிலிருந்து மேற்பகுதி வரை கயிற்றைச் சுற்ற ஏதுவாக படிப்படியாக வெட்டப்பட்டிருக்கும். மேற்புறத்தில் அழகிற்காக பல வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். மேற்பகுதியின் நடுவில் ஒரு உலோகப் பூண் பொருத்தப்பட்டிருக்கும்.

அக்காலப் பெட்டிக்கடைகளில் பல வர்ண பம்பரங்களைப் பெரிய இரும்புக் கம்பிக் கூடைக்குள் போட்டு சிறுவர்களின் பார்வையில் தெரியும்படியாக மாட்டி வைத்திருப்பார்கள். அக்காலத்தில் ஒவ்வொரு சிறுவர்களும் இரண்டு மூன்று பம்பரங்களை வைத்திருப்பார்கள். யார் நிறைய பம்பரங்களை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சிறுவர்களிடையே ஒரு தனி மரியாதை இருந்தது.

பம்பரத்தை வாங்கியவுடன் அதற்கு ஊக்கு அடிக்க வேண்டும். இதற்கென சில வல்லுநர்கள் அக்காலத்தில் இருந்தார்கள். அவர்களிடம் கொடுத்தால் தடிமனான கம்பி ஆணியை வெட்டி முனையை மழுங்கச் செய்து அதைச் கூரான பம்பரத்தின் பகுதியில் பொருத்தித் தருவார்கள். இவ்வாறு அடிக்கும் பம்பர ஆணியின் கீழ்ப்பகுதியானது கூராக இல்லாமல் மழுங்கி உருளையாக இருக்க வேண்டும். கூராக இருந்தால் இது உள்ளங்கையைப் பதம் பார்த்து விடும். பம்பரத்திற்கு முறையாக ஆணி அடிக்கவில்லை என்றால் அவை சரியாகச் சுற்றாமல் இங்கும் அங்கும் குதிக்கும். இதை வைத்தே ஆணி சரியாக அடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். பம்பரத்திற்கு ஆணி அடிப்பது அவ்வளவு சுலபமல்ல. சில சமயங்களில் லாவகமாக ஆணி அடிக்காமல் முரட்டுத்தனமாக அடித்தால் பம்பரம் இரண்டாகப் பிளந்துபோய் சிறுவர்களின் மனதைப் பிளந்த சம்பவங்களும் நடந்தேறும்.

பம்பரத்தை இயக்கத் தேவையான சிவப்புக் கயிறு சாட்டை எனப்படும். இது தனியாக வேறு சில கடைகளில் கிடைக்கும். ஒரு மீட்டர் அளவுள்ள இந்தக் கயிற்றை வாங்கி பம்பரத்தில் சுற்றிப் பார்த்து அதிக அளவுக் கயிற்றை வெட்டி எறிய வேண்டும்.  கயிற்றின் ஒரு முனையில் முடிச்சு போட்டு வைப்பார்கள். பின்னர் முடிச்சு இல்லாத முனையை பம்பரத்தின் ஊக்குப் பகுதியில் சுற்றத் தொடங்கி ஒரே சீராக பம்பரத்தைச் சுற்றி கடைசியில் தரையில் குத்தி பம்பரம் சரியாகச் சுற்றுகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். பம்பரத்தில் சாட்டையைச் சரியாகச் சுற்றுவதும் ஒரு பெரிய கலையாகும். சுற்றும்போது சில சமயங்களில் அவை நழுவி விடும். அப்போது மீண்டும் முதலில் இருந்துச் சுற்றத் தொடங்க வேண்டும்.

உள்ளங்கையில் சுழலும் பம்பர்ம்
உள்ளங்கையில் சுழலும் பம்பர்ம்

பம்பரத்தை விடும்போது அதன் முனை முடிச்சு சரியாக இல்லை என்றால் பம்பரம் கையிலிருந்து விலகிச் சரியாகச் சுற்றாமல் போய்விடும். இதைத் தவிர்க்க குளிர்பான பாட்டிலில் வரும் மூடியை எடுத்து அதன் நடுவில் ஒரு துளையிட்டு முனையில் இணைத்து அதை  வலது கை மோதிர விரலுக்கும் சுண்டு விரலுக்கும் நடுவே பொருத்திக் கொண்டு பம்பரத்தை விடுவோம். இப்போது பம்பரம் பெயில் ஆகாமல் சரியாகச் சுழலும்.

இதையும் படியுங்கள்:
டைரி எழுதுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
பம்பரம் விளையாட்டு

பம்பரத்தில் சாட்டையைச் சுற்றி அதை லகுவாக மேற்புறம் எறிய அது சுழலத் தொடங்கி கீழே விழுமுன் அதை வலது உள்ளங்கையில் தாங்கிப் பிடிப்பார்கள். அது வேகமாக உள்ளங்கையின் மீது நின்று சுழலத் தொடங்கும். அதாவது பம்பரத்தை சாட்டையால் சுற்றி மேலே சுழலவிட்டு தரையில் விழுந்து விடாமல் அப்படியே உள்ளங்கயில் பிடித்துச் சுழல வைக்க வேண்டும். அக்காலச் சிறுவர்களுக்கு இது மிகவும் பிடித்த ஒரு செயலாக இருந்தது. பின்னர் உள்ளங்கையில் சுழலும் பம்பரத்தைத் தரையில் சுழல விட்டு சாட்டையால் அதை மேலே தூக்கிய பின்னர் கையில் பிடிப்பார்கள். பம்பரத்தை வேகமாகத் தரையில் குத்திச் சுழலவிட்டு உடனே சாட்டையால் அதைத் தூக்கிப் போட்டு கையால் பிடிக்க வேண்டும்.  இதற்கு அபீட்டு என்று பெயர்.

பம்பரம் மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு அருமையான விளையாட்டு. பலதரப்பட்ட நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒற்றுமை உணர்வு மனதில் தழைத்தோங்கும். இந்த விளையாட்டை நாம் எப்படி மறந்துபோனோம்? யோசிக்க வேண்டிய விஷயம் இது. தற்காலச் சிறுவர்களுக்குப் பாரம்பரியமான இந்த விளையாட்டை நாம் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com