டைரி எழுதுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Writing a diary
Writing a diaryhttps://www.writediary.com
Published on

தினமும் தேதி வாரியாக குறிப்புகள் எழுதப் பயன்படும் டைரி எனும் வார்த்தை லத்தீன் மொழிச் சொல்லான, ‘டயரியா’என்பதிலிருந்து வந்தது. இதற்கு, ‘தினமும்’ என்று பொருள். 16ம் நூற்றாண்டில் இருந்து டைரி எழுதும் பழக்கம் தொடங்கியது. ஆரம்பத்தில் மறக்காமல் செய்யவேண்டிய விஷயங்களைக் குறித்து வைக்கும் நோக்கில் டைரிகள் தோன்றின. அதன் பின்னர்தான் அன்றாட நிகழ்வுகளையும் பதிவு செய்யும் பழக்கம் வந்தது.

தினக்குறிப்புகளுக்காக டைரி புத்தகம் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்தவர் லண்டனைச் சேர்ந்த ஜான் லெட்ஸ் என்பவர். 1816ல் முதல் டைரி சந்தைக்கு வந்தது. ஆனால், அது உடனே பிரபலமடையவில்லை. 20 வருடங்களுக்குப் பின்னர்தான் டைரி விற்பனை சுடுபிடித்தது. உலகின் மிகப்பெரிய டைரி தயாரிப்பு நிறுவனம் லண்டனில் உள்ள, ‘லெட்ஸ்’ நிறுவனம்தான்.

சிலர் அன்றாட நிகழ்வுகளை தங்களது, ‘டைரிகளில்' குறித்து வைப்பார்கள். இந்த பழக்கம் அவர்களுக்கு ஒருவித உற்சாகத்தை தருவதுடன் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒருவர் வாழ்வில் நடக்கும் ஏமாற்றங்களையும், முரண்பட்ட விஷயங்களையும் டைரியில் எழுதி விடுவது அவர்களது மனதில் இருந்து பாரத்தை இறக்கி வைத்தது போன்ற விடுதலை உணர்வை கொடுப்பதாகவும், மன அழுத்தத்தை நீக்கி விடுவதாகவும் உளவியல் நிபுணர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இரவில் தூக்கம் வராமல் பலர் தவிப்பார்கள், சிலர் இரவில் தூக்கம் வராமல் நான்கைந்து முறை எழுந்திருப்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் தூங்கப்போகும் முன் 5 நிமிடங்கள் ஏதாவது எழுதிவிட்டு தூங்கச்சென்றால் 9 நிமிடங்களில் விரைவாக தூங்கி விடுவார்கள் என்கிறார்கள் அமெரிக்க உளவியல் வல்லுநர்கள். இதைச் செய்யாதவர்களுக்கு குறைந்தது 25 நிமிடங்களாவது ஆகும் தூக்கம் கண்களை சொக்க வைக்க.

தூங்கும் முன் கைப்பட எழுதுவது தூக்கம் வரவழைக்க உதவும் தூக்க மாத்திரை போன்றது என்கிறார்கள் ‘சைக்காலஜி டுடே’ பத்திரிகை ஆய்வாளர்கள். படுக்கப்போகும் முன் அவரவருக்குப் பிடித்தவற்றை எழுதி விட்டு படுத்தால் மன இறுக்கம் குறைந்து விடுவதுடன், இரவில் அதிக முறை எழாமல் நிம்மதியாகத் தூங்க வழி செய்கிறது, அதோடு காலையில் விரைவில் எழவும் உதவுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
பற்களைப் பலமாக்கும் 5 வகை சூப்பர் உணவுகள்!
Writing a diary

நீண்ட காலம் மனச்சோர்வு அல்லது மன பதற்றத்தினால் அவதிப்படுபவர்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. டைரி எழுதும்போது எதிர்மறை எண்ணங்கள் வெளியேறி அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். நாம் ஆயிரம் விஷயங்களை ஆயிரம் விதமாக மனதில் நினைத்தாலும், அதில் ஒரு விஷயத்தை எழுதும்போது அதில் கிடைக்கும் தெளிவு அதிகம். எனவே, நீங்கள் கோபமாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்ந்தால், அதற்கான காரணங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஒருமுறை எழுதிப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும், ‘மக்களை விட காகிதத்திற்கு அதிக பொறுமை உள்ளது’ என்றார் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆன் ஃபிராங்க்.

தினமும் சற்று நேரம் அன்றாட நிகழ்வுகளை உங்கள் டைரியில் எழுதி வாருங்கள். உங்கள் மன அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டுமே கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறார்கள். ஒரு நாட்குறிப்பை எழுதுவது சிகிச்சையின் ஒரு வடிவமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் அதிர்ச்சி போன்ற எதிர்மறை அனுபவங்கள் உட்பட எதிர்மறை அனுபவங்களை சமாளிக்க உதவும் என்கிறார்கள். ஒருவர் மன அழுத்தம் அல்லது மனச் சோர்வு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து வெளிவர, டைரி எழுதுவது உதவும். குறிப்பாக, மனநல பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு டைரி எழுதுவது ரிலாக்ஸாக அமையும்.

காலையில்  அன்றைய தினம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பெடுத்து எழுதுங்கள். இரவு தூங்கும் முன் அன்றைய தினம் நீங்கள் சந்தித்த நல்ல விஷயங்களை அல்லது உங்களுக்குப் பிடித்தவற்றை  டைரியில் எழுதுங்கள். முதியவர்கள் புதிர்களுக்கு விடை தேடி எழுதுங்கள். இவை அனைத்தும் நமது மூளை நரம்பியல் செயல்பாட்டை தூண்டி அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோயை வராமல் தடுக்க உதவுகிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com