

எழுபது எண்பதுகளில் பொங்கல் திருநாள் வரப்போகிறது என்றாலே ஒரே கொண்டாட்டம்தான். காரணம் போகி அன்று பழைய பொருட்களை எரித்து குதூகலமாக மேளத்தை அடித்துக் கொண்டாடுவார்கள். பொங்கல் அன்று சூரியபகவானை வழிபட்டு மகிழ்வார்கள். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை வழிபட்டு மாலை நேரங்களில் மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டர்களில் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் ஏறியபடி "பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல்" என மகிழ்ச்சியாக சத்தமிட்டவாறே ஊர்களையும் கிராமங்களையும் சுற்றி வருவார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக காணும் பொங்கல் அன்று அனைவரும் உறவினர்கள் நண்பர்கள் என பலரது இல்லங்களுக்குச் சென்று மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளுவார்கள்.
காணும் பொங்கல் அன்று ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரியவர்கள் தங்கள் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறுசிறு தொகையை பரிசாக வழங்கி அவர்களை ஆசிர்வதித்து மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்கள். இது ஒரு அன்பின் வெளிப்பாடு.
சிறிய தொகை என்பது அக்காலத்தில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அதிகபட்சமாக ஐந்து ரூபாய் அவ்வளவுதான். ஆனால் அதை நம் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து வாங்கி அவர்கள் நம்மை நல்லா இருங்க என்று ஆசிர்வதிக்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அதற்கு ஈடுஇணை ஏதுமில்லை.
கடைக்காரர்களைத் தேடி பொங்கல் இனாம் கேட்டு பலர் வருவார்கள். அவர்களும் தங்களை நாடி வந்தவர்களுக்கு சிறுசிறு தொகையைக் கொடுத்து மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்கள்.
காணும் பொங்கல் என்பது அன்றைய தினம் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி. இதனாலேயே இதற்கு காணும் பொங்கல் என்று பெயர் சூட்டியுள்ளார்கள். இதன் பின்னால் ஒரு வலுவான காரணம் உள்ளது. இவ்வாறாக அந்த நன்னாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வதன் மூலம் உறவுகள் பலப்படும் என்பதே அந்த முக்கியமான காரணமாகும்.
சிறு தொகையைப் பெறுவதன் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இத்தகைய பண்டிகைகளின் மூலம் நமது முன்னோர்கள் உறவினர்கள் நண்பர்களுக்கிடையில் ஒற்றுமை உணர்வினையும் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் நேர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வழிவகை செய்துள்ளார்கள்.
தற்காலத்தில் காணும் பொங்கல் அன்று நம்மில் பலரும் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று அந்த நாளை மகிழ்ச்சியாகக் கழிப்பதை நாம் காண்கிறோம். பண்டிகை என்பது மகிழ்ச்சிக்காகத் தானே. அன்றைய தினம் நாம் நமது உறவினர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்து கூறினால் மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பாகும்தானே!
எனது இளம்பிராயத்தில் செங்கற்பட்டில் வசித்துக் கொண்டிருந்தபோது என் தாய்வழி தாத்தாவின் வீட்டிற்குச் சென்று தாத்தாவிடம் பொங்கல் இனாம் கேட்பதை வழக்கமாக வைத்திருந்தேன். “தாத்தா பொங்கல் இனாம் குடு தாத்தா” என்பேன். அவரும் எனக்கு புத்தம் புதிய இரண்டு ரூபாய்த்தாளைக் கொடுத்து “நல்லா இருடா” என்று மகிழ்ச்சியோடு என்னை மனதார ஆசிர்வதிப்பார். அவருடைய ஆசிர்வாதமே இன்று என்னை மகிழ்ச்சியாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஆழமான வாழ்க்கைக்குத் தேவையாக விஷயம் ஒன்று ஒளிந்திருக்கும். இந்த ஆண்டில் வரும் காணும் பொங்கல் அன்று நாமும் நமது வீட்டுப் பெரியவர்களைச் சந்தித்து ஆசி பெற்று பொங்கல் இனாமைப் பெற்று மகிழ்ச்சியாக வாழலாமே!