

மின்சாரப் போர் (DC vs AC):
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த மின்சார போரானது, (War of Current) உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர் எடிசனுக்கும், மாமேதை நிக்கோலஸ் டெஸ்லாவிற்கும் இடையே நடைபெற்றது.
எடிசன் கண்டுபிடிப்பில் உருவானது தான் இந்த நேரடி மின்னூட்டம்(direct current) எனப்படும் மின்சாரம். இதற்கு மாற்றாக மாறுதிசை மின்னோட்டத்தை கண்டுபிடித்தவர் தான் நிக்கோலஸ் டெஸ்லா.
எடிசன் தனது மின்னோட்டம் தான் சிறந்தது என்று நிரூபிப்பதற்காக நாய் குதிரை போன்ற கால்நடைகளுக்கு டெஸ்லாவின் மாறு திசை மின்னோட்டத்தை கொடுத்து சாகடித்தார். எதற்கு எடிசன் இதுபோன்று செய்தார் என்று பார்த்தால், நேரடி மின்னோட்டத்தை விட, மாறுதிசை மின்னோட்டமானது மனித உயிருக்கு மிகவும் ஆபத்தாக இருந்தது. மாறுதிசை மின்னோட்டத்தில் பாயும் மின்சாரமானது ஒவ்வொரு வினாடிக்கும் 50 முறை தனது திசையை மாற்றிக் கொள்ளும்.
தவறுதலாக இந்த மின்சாரமானது மனித உடலில் பாயும் போது, இந்த மின்சாரத்தின் திசை மாற்றமானது, இதயத்தின் இயற்கை மின்னோட்டத்தோடு மோதும்போது, இதயம் தனது சீரான துடிப்பை இழந்து 'வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன்' (Ventricular Fibrillation) நிலைக்குச் செல்லும். இதனால் இதயம் துடிப்பது திடீரென்று நின்று விடுகிறது. இறுதியில் மரணம் கூட நிகழலாம். AC மின்சாரம் உடலில் பாயும்போது நமது தசைகளை மிக வேகமாகச் சுருங்கி விரியச் செய்யும். இதனால் மின்சாரம் தாக்கும் கம்பியைப் பிடித்துள்ள கை விரல்கள், நமது கட்டுப்பாட்டை மீறி அந்தக் கம்பியை இன்னும் பலமாகப் பற்றிக்கொள்ளும்.
இப்படி AC மின்சாரத்தில் பல ஆபத்துகள் இருப்பதை உணர்ந்த எடிசன் டெஸ்லாவிற்கு எதிராக பல வாதங்களையும், எதிர்ப்புகளையும் முன் வைத்தார்.
இறுதியாக வென்றது யார்..?
DC மின்னோட்டத்தை நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லும் போது, மின்கம்பிகளின் மின்தடை காரணமாக அதிகப்படியான மின்சாரம் வெப்பமாக மாறி வீணாகும். ஆனால், AC மின்னோட்டத்தை மிகக்குறைந்த மின் இழப்புடன் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
மின் உற்பத்தி நிலையத்தில் குறைந்த வோல்டேஜில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, டிரான்ஸ்பார்மர் மூலம் பல ஆயிரம் வோல்ட்டுகளாக உயர்த்தி (Step-up) அதனை மின்கம்பிகள் வழி செலுத்தி, மீண்டும் நம் வீடுகளுக்கு வரும்போது தேவைக்கேற்பக் குறைத்துக் (Step-down) கொள்ளும் வசதி இருக்கிறது. DC-இல் வோல்டேஜை இப்படி எளிதாக மாற்றவும்,குறைக்கவும் முடியாது.
AC மின்சாரத்தைத் தயாரிக்கும் ஜெனரேட்டர்கள் மற்றும் அதைக் கடத்தும் கம்பிகள், DC அமைப்புகளை விடச் செலவில் குறைந்தவை.
எடிசனின் DC முறைப்படி பார்த்தால், ஒவ்வொரு தெருக்களுக்கும் மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றால், தனித்தனியாக ஒரு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் டெஸ்லாவின் AC முறையில், பார்த்தால் குறைவான ஒன்று அல்லது இரண்டு மின் உற்பத்தி நிலையம் அமைத்தால் மட்டுமே போதும்.
சுருக்கமாக சொன்னால், நேரடி மின்னோட்டம் ஒரு தேங்கி நிற்கும் குட்டை போன்றது; அதை வெகுதூரம் கொண்டு செல்ல முடியாது. ஆனால் மாறுதிசை மின்னோட்டம் என்பது பெருக்கெடுத்து ஓடும் ஆறு போன்றது.
இப்படி பல விஷயங்களில் DC- யை விட AC மின்னோட்டமானது உயர்ந்து காணப்பட்டதால், இறுதியாக உலக அளவில் பிரதானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏசி மின்னோட்டம் தான்.இப்போது நம் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரமும் ஏசி மின்னோட்டம் தான். இதன்பிறகு தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் எடிசன் அவர்கள். இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், எடிசனுக்கு கீழே பணிபுரிந்த ஊழியர் தான் நிக்கோலஸ் டெஸ்லா அவர்கள்.
இதில் டாப்சி என்ற யானையின் மரணத்திற்கு என்ன காரணம்?
இந்த மின்சார போருக்கு பின் வரலாற்றின் கறுப்புப் பக்கமாக அமைந்தது 'டாப்சி' (Topsy) என்ற யானையின் மரணம். 1903-ஆம் ஆண்டு சனவரி 4, நியூயார்க்கின் கோனி தீவில் இருந்த ஒரு சர்க்கஸ் யானையான டாப்சிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எதற்கு என்றால், முதலில் இந்த யானையை வளர்ப்பவர்களும், அதனைச் சுற்றியுள்ளவர்களும் இந்த யானைக்கு பல இன்னல்களை கொடுத்துள்ளார்கள்.
அதாவது சிகரெட்டால் யானையின் துதிக்கையில் சூடு வைப்பதும், யானையின் பக்கத்தில் சென்று அதிகமாக கத்துவதும், கம்பு, கற்களை கொண்டு தாக்குவதும் என்று இருக்கையில், ஒரு கட்டத்தில் டாப்சி என்ற அந்த யானை மனிதர்கள் என்றாலே தீங்கானவர்கள் என்று நினைத்து, தன் கூட இருக்கும் நபர்களை கொல்ல ஆரம்பித்தது. இதற்குப் பின் அந்த அரசாங்கமே இந்த யானையை கொலை செய்ய திட்டமிட்டது. இதன் விளைவாக, சுமார் 1,500 பேர் முன்னிலையில், டாப்சியின் கால்களில் செம்பாலான தகடு போன்ற செருப்புகள் கட்டப்பட்டு 6,600 வோல்ட் AC மின்சாரம் பாய்ச்சப்பட்டது.
பாய்ச்சப்பட்ட அடுத்த நிமிடமே அவ்வளவு பெரிய அந்த உருவம் சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து இறந்தது.இதைப் பயன்படுத்திக்கொண்ட எடிசன், AC மின்சாரம் ஒரு யானையையே கொல்லும் வலிமை கொண்டது என்பதைக் காட்டத் திட்டமிட்டார். இதற்கு சாட்சியாக எடிசன் உதவியாளர்கள் யானை சாகும் அந்த நிகழ்வை கேமராவில் படமும் பிடித்தார்கள்.
மனிதர்களுக்கு மட்டும்தான் உயிர் முக்கியமா…! பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் என்பது விலை மதிப்பிட முடியாத ஒன்றுதான்..!