நுண்கலை போற்றிய நல்லவர்!

Swami vivekananda
Swami vivekananda
Published on

டவுள் பக்தியில் கலைக்கும் இடம் உண்டு. பகுத்தறிவாளராகவும், விஞ்ஞான உணர்வு கொண்டும், தர்க்க சாஸ்திரங்களில் விருப்பம் கொண்டும் விளங்கிய விவேகானந்தர் வாழ்க்கையின் மறுபக்கமாகிய நுண்கலைகளிலும் பெரும் விருப்பம் கொண்டிருந்தார். வாழ்க்கையை மென்மையாக்கி மனிதனின் நற்குணங்களை பூரணமாக்குபவை கலைகள்தான். விவேகானந்தர் மிகச் சிறு வயதிலேயே நண்பர்களை சேர்த்துக்கொண்டு நாடகம் போடுவதும், வீட்டு மிருகங்களை வைத்துக்கொண்டு விளையாடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

இயற்கையை ரசிப்பதும் இறை வழிபாடே. 1877ம் ஆண்டு விவேகானந்தருக்கு 15 வயதில், தந்தை விஸ்வநாத தத்தருக்கு மத்திய பிரதேசத்தில் உள்ள ராய்பூரில் சில ஆண்டுகள் தங்கவேண்டி வந்தது. விந்திய பர்வதத்தின் வரிசைகளின் ஊடே கட்டை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த விவேகானந்தருக்கு வானளாவிய மரங்களும், பசும் இலைகளும், மலர்களும், பறவைகளின் இன்னொலியும் அவரது உள்ளத்தை கிறங்க வைத்தன. இரு மலை சிகரங்களுக்கிடையே இருந்த ஒரு பெரிய தேன்கூடு அவரின் உள்ளத்தில் பெரும் தாக்குதலை ஏற்படுத்தி விட்டது. தன்னை மறந்து இறைவுணர்வில் அமிழ்ந்து போய்விட்டார் விவேகானந்தர். அந்தத் தேன்கூடு அவரது இதயத்தில் பரவச நிலையை ஏற்படுத்தி விட்டது. பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஒரு மகத்தான ஆன்மிகவாதியாக உருவாவதற்கு காரணமான அவருடைய கலை உணர்வையும், ரசிகத் தன்மையையும் கட்டாயம் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சங்கீதம் என்பது மிக உயர்ந்ததோர் கலை. அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு அது ஒரு வழிபாடு ஆகும் என்று விவேகானந்தர் கூறுவது வழக்கம்.

சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றிப் பாடிய ஒரு பாடலில், ‘மனம் அமைதி அடைந்தால் அது ஒரு பெரிய செல்வக் குவியல் ஆகும். அதுவே இரும்பை பொன்னாக மாற்றும் பரிசவேதி ஆகும். நீ கேட்டதை எல்லாம் அது கொடுக்கும்’ என்றார்.

சுவாமி விவேகானந்தரின் கருத்தில் ‘இசை என்பது மிக உயர்ந்ததோர் வழிபாடாகும். கலையின் உணர்ச்சிதான் ஆன்மா ஆகும். கலையின் ரகசியம் மென்மை உணர்வுதான். மனிதன் பயன்படுத்தும் பொருட்கள், அவை ஆடம்பர பொருட்களாகவே இருந்தாலும் சரி, சில சிந்தனைகளையும், லட்சியங்களையும் பற்றி நிற்க வேண்டும். சிந்தனைக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பொருளே கலைப்பொருள் ஆகும்’ என்றார். அவர் பேசுவதே சங்கீதம் போல இருக்கும். அவருடைய குரல், சொற்கள், கருத்துக்கள் இவையெல்லாம் ஒரு மகத்தான இசை நிகழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!
Swami vivekananda

நுண்கலை பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை: ஒரு மரத்தை வெட்டிய பின் அதன் அடிப்பாகம் மட்டும் தூணைப்போல நின்று கொண்டிருந்தது. இருட்டில் அதை ஒரு திருடன் பார்த்தான். அவனுக்கு அது ஒரு காவல்காரனை போல தோற்றம் அளித்தது. ஆனால், தன்னுடைய அன்புக்குரிய ஒருவருக்காகக் காத்திருக்கும் மற்றொருவன், அந்த மரத்தூணை தனது அன்பராகவே நினைத்து மனம் மயங்கினான். மேலும், பிசாசு கதைகளைக் கேட்டு பயந்து போயிருந்த ஒரு குழந்தை அந்த மரத்தூணை ஒரு பிசாசாகவே நினைத்து அழ ஆரம்பித்தது. ஆனால், அங்கே இருந்தது என்னவோ ஒரு மரத்தின் அடிப்பகுதி மட்டும்தான். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே இந்த உலகத்தையும் பார்க்கிறோம்.

ஒரு அறையில் குழந்தை ஒன்று படுத்திருந்தது. அந்த அறையில் ஒரு பை நிறைய தங்கக் காசுகள் இருந்தன. ஒரு திருடன் அந்த அறைக்குள் வந்து தங்கக் காசுகளை திருடினான். அந்தக் குழந்தைக்கு அங்கு பொருள் திருடப்பட்டது தெரியவில்லை. அது மட்டுமின்றி, அந்தக் குழந்தை அவனை ஒரு திருடனாகவும் பார்க்கவில்லை. குழந்தைகளின் அறிவும் அப்படிப்பட்டதுதான். ஆக்கபூர்வமான பலமூட்டும் பயனுள்ள சிந்தனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே நம் மனதுக்குள் நுழைய வேண்டும். அனைவரும் கலையுணர்வு கொண்டு சிறக்க விவேகானந்தரை உதாரணமாக ஏற்றுக்கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com