A festival that combines tradition and culture
onam festival...

ஓணம்: பாரம்பரியமும் பண்பாடும் கலந்த திருவிழா!

Published on

ருடம்தோறும், முக்கியமாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் மட்டுமின்றி, வேறு பல மாநிலங்களிலும் சிறப்பாகவும் குதூகலத்தோடும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். கேரளாவின் புகழ்பெற்ற மன்னன் மகாபலி தன் நாட்டின் வளத்திற்கும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் பாடுபட்டு நல்லாட்சி வழங்கி வந்தான்.

மஹா விஷ்ணு தன் வாமன அவதாரத்தில் மகாபலி மன்னனை பூமிக்கடியில் அனுப்பிவிட்டு வருடம் ஒருமுறை தன் மக்களைக் காண வெளியே வரலாமென அனுமதி கொடுத்திருந்தார்.

இந்த நாளே, அனைவரும் ஒன்றிணைந்து நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை அறுவடைத் திருநாள் மற்றும் புது வருடப் பிறப்பு என்றும் கூறுகின்றனர்.

சுமார் 12 நாட்கள் வரை இந்த விழா கொண்டாடப் படுகிறது. முதல் நாளிலிருந்து, வீட்டை நன்கு சுத்தப்படுத்தி, அத்தப்பூக்காலம் எனப்படும் பூ மற்றும் பூவிதழ்களால் வீட்டில் பிரமாண்டமான வடிவில் வண்ண வண்ணக் கோலமிட்டு, விளக்குகளேற்றி மன்னனை மகிழ்ச்சியோடு வரவேற்கத் தயாராவர். கோவிலுக்கு சென்று நைவேத்யம் படைத்து, ஆர்ப்பு வில்லிக்குகள் (Aarppu Villikkukal) போன்ற மதம் சார்ந்த சடங்குகளை செய்வர். இதில் குடும்பத்தின் ஆண் உறுப்பினர்கள் உரத்த குரலில் தாள நயத்தோடு குரலெழுப்பி கோஷமிடுவர். இதுவே பண்டிகை குதூகலமாக ஆரம்பித்துவிட்டதற்கான அடையாளமாகும்.

இதையும் படியுங்கள்:
பாலைவனத்திலிருந்து பில்லியனர் நாடாக கத்தாரின் பயணம்!
A festival that combines tradition and culture

அரிசி மாவில் தயாரித்த இனிப்புகளை சாமிக்குப் படைத்து வணங்குவார்கள். ஒவ்வொரு நாளும் ஷாப்பிங், வகை வகையான சமையல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என ஊரே கல கலப்பாகும். திருவோண நட்சத்திர தினத்தன்று அரசன் மகாபலி நாட்டிற்குள் வருவதாக ஐதீகம். முக்கியமான நாளான அன்றைய தினம், தங்கள் மனம் கவர்ந்த மன்னன் மகாபலிக்காக ஓணசத்யா என்ற ஸ்பெஷல் விருந்து தயாரிக்கப்பட்டு படைக்கப்படும்.

அதில் இனிப்பு வகைகள், வகை வகையான பாயசம், காய்கறி, கூட்டு என முப்பதுக்கு குறையாத உணவு வகைகள் இருக்கும். பின் உறவினர் மற்றும் நண்பர்கள் குடும்பத்துடன் சேர்ந்து உண்டு மகிழ்வர். புலியாட்டம், கதகளி போன்ற பாரம்பரிய நடனம், படகுப் போட்டி, திருவாதிரா, கும்மட்டிக்களி, யானைகளின் அணி வகுப்பு மற்றும் அரசனுக்காக செய்யப்படும் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளால் மக்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.

அறுவடைத் திருநாள் என்ற முக்கியத்துவத்தை தாண்டி, கேரளாவின் வளம் நிறைந்த பாரம்பரியக் கலைகள், அரசாள்பவனுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் இடையிலான அர்ப்பணிப்புடன் கூடிய அளவில்லாத அன்பு, தடைகளைத் தகர்த்து ஜாதி மத பேதமின்றி உருவாகும் சமூக ஒருமைப்பாடு போன்ற வற்றையும் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவம் கொண்ட திருவிழாவாக ஓணம் பண்டிகை அமைந்துள்ளது.

இதன் காரணமாகவே இன்றைய தலைமுறையில் வந்தவர்களாலும் அதே துள்ளளோடு அனுபவித்து கொண்டாடப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கவும், ஓண சத்யாவை உண்டு மகிழவும் இந்த சீசனை தேர்ந்தெடுத்து இங்கு வருகின்றனர். இந்த வருட ஓணம் பண்டிகை செப்டம்பர் 5 ஆம் தேதியில் வருவது கூடுதல் சிறப்பு. ஏனெனில், வார இறுதி நாட்களையும் சேர்த்து மேலும் இரண்டு நாட்களை விருந்தினர்களுடன் கழிக்கலாமே!!

logo
Kalki Online
kalkionline.com