
மேற்காசியாவின் தீபகற்ப நாடாகவும் இறையாண்மைக்கு பெயர் பெற்ற பணக்கார நாடாகவும் இருக்கும் கத்தார் ஆரம்ப காலங்களில் பாலைவன பூமியாக இருந்து தற்போது பணக்கார நாடாக மாறி உள்ளது. இந்த கத்தார் நாட்டின் மாற்றம் குறித்து இப்பகுதியில் காண்போம்.
ஆரம்ப காலங்களில் கத்தார் வெறும் பாலைவனம் பூமியாக இருந்ததால் அங்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ்வதே மிகவும் கடினமாக இருந்தது. எந்தவித இயற்கை வளங்களும் இல்லாததோடு குளிர்ச்சியை தரும் பசுமையையும் அங்கு காணமுடியாது.
இந்த நிலை கத்தார் நாட்டின் துகான் பகுதியில் 1939 ஆம் ஆண்டில் எண்ணெய்இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அனைத்தும் தலைகீழாக மாறத்தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காரணத்தினால் 1949 ஆம் ஆண்டுவரை எண்ணெய் உற்பத்தி மெதுவாகவே இருந்தது.
கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படும் எண்ணெய் வளம் அபரிமிதமான செல்வத்திற்கான வாயில்களை திறந்ததோடு நவீன நகரங்களை உருவாக்கவும், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், உலகின் மிகவும் வளமான பணக்கார நாடுகளில் ஒன்றாக தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் கத்தார் இறங்கியது.
2.8 மில்லியன் கத்தாரின் மொத்த மக்கள் தொகையில் தோராயமாக 7 லட்சம் முதல் 8 லட்சம் மக்கள் வரை இந்தியர்கள். அதாவது 25 சதவீத இந்தியர்களைக் கொண்ட முஸ்லிம் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது கத்தார்.
கண்ணைக் கவரும் மால்கள், 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அழகான கடற்கரைகள் கத்தாரில் உள்ளதோடு, சவுக் வாகிஃப், இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மற்றும் கத்தாரா கலாச்சார கிராமம் போன்ற இடங்கள் கத்தாரின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன.
ஆங்கிலேயர்களிடமிருந்து 1971ல் சுதந்திரம் பெற்ற கத்தார், விரைவிலேயே நவீனமயமாக்கிக் கொண்டதோடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாக உருவெடுத்து தற்போது மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளது.
எண்ணெய், இயற்கை எரிவாயு இந்த இரண்டும் கத்தார் நாட்டின் பொருளாதாரத்தில் 70% ஈட்டி தருகிறது.கத்தார் உலகின் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக உள்ளதோடு, எரிசக்தி பாதுகாப்பில் இந்தியாவிற்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்த பூமி எண்ணெய் வளர்த்தினால் பணக்கார நாடாக மாறி இருந்தாலும், இங்கு போதை பொருள் மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான கடுமையான விதிகள் உள்ளதோடு பொது இடங்களில் மது அருந்துவது தடை போன்ற பாரம்பரிய கலாச்சார பின்னணியை கொண்ட நாடாக கத்தார் உள்ளது.