
அலுவலகத்தில் வேலை செய்பவர்களில் மூன்றில் இரண்டு பேர்கள் மன இறுக்க நோயினால் அவதிப்படுவதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் நோய்களில் முக்கால் பங்கு அதாவது 75 சதவிகிதம் மன இறுக்கத்தினால்தான் வருகிறது என்று மனநல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
முக்கியமாக எதிர்பார்ப்பது நடக்காததுதான் மன இறுக்கத்திற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. மன இறுக்கம் உடையவர்கள் பெரும்பாலும் எதிர்காலத்திலேயே வசிக்கிறார்கள், நிகழ்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ அல்ல நவீன காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றமும், நம் வேலையை பலமடங்கு குறைத்தாலும் மக்களிடம் ஒருவித பரபரப்பு, அமைதியற்றத்தன்மையே காணப்படுகிறது.
வாழ்க்கையின் இலக்கை அடைய ஒருவித எதிர்பார்ப்பு அவசியம்தான். அப்பொழுது ஏற்படும் இறுக்கம் வரவேற்கத்தக்கதே. ஆனால் மன இறுக்கமே வாழ்க்கையாகி விடக்கூடாது. இதுதான் ஆபத்தானது மன இறுக்கத்துக்கு ஆண்களை விட பெண்களே அதிகமாக ஆளாகிறார்கள். ஏனென்றால் அவர்களது வட்டம் குறுகியது. வட்டம் குறைய குறைய மன அழுத்தம் அதிகமாகும்.
மன இறுக்கத்தை குறைப்பதற்கான வழிகளை காண்போம்.
எக்காரணத்தைக் கொண்டும். மன இறுக்கத்தைப் பற்றி நினைக்க முப்பது நிமிடத்திற்கு மேல் இடம் கொடுக்காதீர்கள் .அப்படி முடியாவிட்டால், எங்கேயாவது சென்று இயற்கையோடு ஒன்றாக கலந்துவிடுங்கள் பீச், பார்க் என்று போய்விடுங்கள்.
எதிர்பார்ப்பை குறையுங்கள் கூடிய மட்டும் நிகழ்காலத்தில் இருக்க முயலுங்கள்.
உங்களுடைய மனோபாவங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது என்பதற்காக கவலை கொள்ளாதீர்கள். அதைப்போல சிறு சிறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
நம்முடைய வாழ்க்கை என்பது சுமார் 70-லிருந்து 90 வருடம் வரை தான். அதை எப்படி மகிழ்ச்சியாக அனுபவிப்பது என்பதை திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இலக்கை விரைவில் அடைய, உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மன இறுக்கத்திற்குப் பொதுவான காரணம் எதிர்கால சிந்தனைதான். அதில் ஏற்படும் கெடுதலான உணர்வுகளாக கோபம் பயம் ஏமாற்றங்கள் இருக்கின்றன.
சிரிக்க மறக்காதீர்கள்! மன இறுக்கத்தைக் குறைக்க இதை விட சிறந்த, சுலபமான மருந்து வேறு எதுவுமே இல்லை.
மேற்கூறிய முறைகளில் நிகழ்காலத்தில் வாழ்ந்து பிரச்னைகளை தொலைநோக்கு பார்வையுடன் கையாண்டாலே மன இறுக்கத்தை மறந்துவிடலாம்.