
சம்மக்கா சாரக்கா என்பது ஆந்திராவின் தெலுங்கானா பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்களைக் காட்டுத் தெய்வங்களாகக் கருதி நடத்தப்படும் காட்டுத் திருவிழா ஆகும். இது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இத்திருவிழாவிற்குச் செல்லும் பயணத்தை ‘சம்மக்கா சாரக்கா யாத்திரை’ என்கின்றனர்.
சம்மக்கா சாரக்கா தெய்வங்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அந்தக் கதை இதுதான்:
ஆந்திராவின் மேடாரம் பகுதியில் வசித்த பழங்குடி மக்களிடம் காக்கத்தியா எனும் மன்னன் வரி செலுத்தும்படி சொல்லித் துன்புறுத்தி வந்தான். அப்போதையக் காலம் வறட்சிக் காலமாக இருந்ததால், பழங்குடியின மக்கள் தங்களால் வரி செலுத்த முடியாது என்று, தங்களின் பழங்குடியினத் தலைவனிடம் முறையிட்டுள்ளனர். தலைவனும் வரி செலுத்த வேண்டாமென்று சொல்ல, அவனது ஆலோசனைப் படி வரி செலுத்தாமல் இருந்தனர். அதனைக் கண்டு கோபமடைந்த மன்னனின் படையினர், அப்ப்ழங்குடியின மக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
அப்போரில் இருப்பக்கமும் இறப்புகள் நிகழ்ந்தன. அதில் பழங்குடியினத் தலைவன் இறந்து போனான். அதனைத் தொடர்ந்து தலைவனின் மகன் ஐம்பன்னா, மன்னனின் படையை எதிர்த்துக் கடுமையாகப் போரிட்டான். அப்போரில் மன்னனது அதிக எண்ணிக்கையிலான படையினருக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஏரியில் மூழ்கி இறந்தான். அதன் பின்பு, தலைவனின் மனைவி சம்மக்காவும், அவரது மகள் சாரலம்மா எனப்படும் சாரக்காவும் மன்னனை எதிர்த்துப் போரைத் தொடர்ந்தனர். மன்னனின் அதிக எண்ணிக்கையிலான படையின் முன்பு அவர்களது படை தோற்றுப் போனது. தங்களின் பலம் குறையவே, சம்மக்காவும், சாரக்காவும் அவர்களிடமிருந்து தப்பிக் காட்டுக்குள் சென்று விட்டனர்.
காட்டுக்குள் சென்ற அவர்கள், அதன் பின்பு திரும்பி வரவே இல்லை. பல ஆண்டுகள் சென்ற பிறகு, பழங்குடியினப் பெண்கள் காட்டுக்குள் சென்ற பொழுது அங்குள்ள மரம் மற்றும் புற்றுக்கு அருகில் குங்குமம் சிதறிக் கிடந்ததைக் கண்டனர். காட்டுக்குள் சென்ற சம்மக்கா, சாரக்கா ஆகியோர் தெய்வங்களாக மாறி, வன தெய்வங்களாக அங்கு வாழ்வதாகக் கருதினர். இந்தப் பழங்குடியினரின் நம்பிக்கையின் படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்மக்கா மற்றும் சாராக்காவிற்கு விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவிற்குச் செல்லும் பழங்குடியினர், தங்களது பயணத்தை வாரங்கல் மாவட்டத்தின் தத்வை மந்தலில் இருக்கின்ற மேடாரம் வனப்பகுதியில் இருந்து தொடங்குகின்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவின் போது, கோவில் வளாகத்திலுள்ள மரங்களுக்கு எடைக்கு எடை வெல்லத்தை வீசி எறிந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது தொன்ம நம்பிக்கையாக இருப்பதால், இத்திருவிழாவின் போது, எடைக்கு எடை வெல்லம் வீசித் தாங்கள் வேண்டியதை வழங்கிட வெல்ல வழிபாடு நடைபெறுகிறது.