

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இந்த வரிகளை அடிக்கடி கேட்டிருப்போம். நிறைய இடங்களில் இந்த அடிகளை உபயோகப்படுத்துவார்கள். இந்த சாண் மற்றும் முழம் எதைக் குறிக்கிறது தெரியுமா? நம் கைகளில் உள்ள அளவுகளை தான் இவை குறிக்கின்றன.
ஒரு சாண் என்பது நம்முடைய கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து சுண்டு விரலின் மேல் நுனி வரையிலான நீளத்தைக் குறிக்கிறது.
அதைப் போல முழம் என்பது நம்முடைய முழங்கையிலிருந்து நடு விரலின் நுனி வரை உள்ள நீளத்தை குறிக்கிறது.
மேலும் ஒரு முழம் என்றால் 2 சாண் என்று பொருளாகும்.
சரி, இப்போது இந்த வரிகளுக்கான விளக்கத்தை பார்க்கலாம்...
உண்மையிலேயே இந்த வரிகளை நம் முன்னோர்கள் எதற்காக உபயோகப்படுத்தினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா??
நம்முடைய இந்து கலாசாரத்தில் பாரம்பரியமாக இந்த மரமேறும் போட்டி நடப்பது வழக்கம். இன்றும் அவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் இந்தியாவில் முக்கியமாக கிருஷ்ண ஜெயந்தி அன்று தோப்பிலுள்ள ஒரு பனை மரத்திலோ அல்லது உயரமான மரங்களுக்கு கீழே ஒரு கம்பத்தை வைத்து கட்டி, உச்சியில் ஒரு பரிசு மூட்டையை கட்டி வைத்து விடுவார்கள். மரம் முழுவதும் அல்லது கம்பம் முழுவதும் ஏற முடியாத படிக்கு எண்ணெயை தடவி விடுவார்கள்.
அதில் ஏற முயற்சிப்பவர்கள் தன் கால்களால் ஒரு அடி வைத்து ஏற முயற்சிக்கும் போது மரத்திலிருக்கும் எண்ணெயின் காரணமாக சறுக்கி இரண்டு அடி கீழே இறங்கி விடுவார்கள். மறுபடியும் ஏறுவார்கள் இப்போதும் அதைப் போலவே இரண்டு மடங்கு சறுக்கி கீழே இறங்கி விடுவார்கள். இதைப் போல பல முறை முயற்சி செய்து விட்டு, ஏற முடியாதவர்கள் விலகி விடுவார்கள். ஆனால் இறுதியாக ஒரே ஒரு நபர் மட்டும் பலமுறை வீழ்ச்சி அடைந்த போதிலும் பரிசை பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு திக்கு முக்காடி ஏறி போட்டியில் ஜெயிப்பார். இந்த போட்டியின் போது மரத்தில் ஒரு அடி ஏறினால் இரண்டடி சறுக்குகிறது என்கிற மையத்தை கருத்தில் வைத்து தான் “சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது” என்று முன்னோர்கள் கூறினார்கள்.
ஆனால் நாளாக நாளாக இந்த வரிகளை நாம் வேறு சில இடங்களிலும் உபயோகிக்க தொடங்கி விட்டோம்.
அதாவது உதாரணத்திற்கு ஒருவருக்கு வியாபாரத்தில் முதல் மாதம் ஒரு பேச்சிற்கு 10% லாபம் வந்தது என்று வைத்துக் கொள்ளுவோம். அடுத்த மாதம் லாபம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் அதற்கு பதிலாக 20% நஷ்டம் வந்தால் அந்த நபரின் நிலை என்னவாகும்? ஒரு மடங்கு லாபம் வந்த அடுத்த நொடியிலேயே இரண்டு மடங்கு நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இவ்விதமான சூழ்நிலையில் பாதிக்கபட்டவர்கள் பெரும்பாலும் அடுத்தவர்களிடம், அட போப்பா.. "சாண் ஏறினால் முழம் சறுக்குது..என்ன பிழைப்பு இது..." என்று புலம்புவது வழக்கம்.
இன்னும் சில பேர் உடல் நலம் குன்றி சிறிது நாள் கழித்து ஒரளவிற்கு தேறி இருப்பார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக அடுத்த சில நாட்களிலேயே ஏற்கனவே இருந்த நோயோடு வேறு சில நோய்களும் சேர்ந்து முன்பை விட உடல் நிலை அதிக அளவு மோசமாகி விடும். அத்தருணத்தில் அவர்களும் இதைப் போலவே புலம்புவார்கள்.
எது எப்படியோ, ஆக மொத்தத்தில் நம் முன்னோர்கள் சொன்ன பழமொழிகளும் மற்றும் கருத்துக்களும் எப்போதுமே தவறாகவே இருந்ததில்லை.