

நாம் ஏதாவது ஒரு செயலை செய்து அதில் வெற்றி பெறவேண்டும் என்றால் வீட்டில் இருப்பவர்களில் இருந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். நீ எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா? உன்னால் அந்த காரியத்தை எளிதாக செய்துவிட முடியுமா? அதற்கான திறமை இருக்கிறதா? அவ்வளவு முயற்சி செய்ய உன்னால் முடியுமா? உன்னைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே? என்று ஆயிரம் கேள்விகளை கேட்டு அணு அணுவாய் துளைத்து எடுப்பார்கள்.
அதற்காகவெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது அவசியம் இல்லை. அவர்களிடம் ஒரு புன்னகையைத் தவழவிட்டு நம் வேலையில் 'ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டியதுதான்'.
நாம் லட்சியத்தை அடையும்வரை யார் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து நாம் செய்யவேண்டிய வேலையை செய்து கொண்டே இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் காது கேட்காது என்ற அளவிற்கு மற்றவர்களின் பேச்சை காதில் வாங்காமல் இருந்தால்தான் நாம் செயலில் இறங்கி நன்றாக செய்து முடிக்க வேண்டிய வழிகளை திட்டமிட முடியும். அதற்கு விவேகானந்தர் சொன்ன கதை இது.
தவளைகள் பல ஒன்று சேர்ந்து ஒரு பந்தயத்துக்கு ஏற்பாடு செய்தன. மிகப்பெரிய கோபுரம் ஒன்றில் ஏறி அதன் உச்சியை எட்ட வேண்டும் என்பதுதான். போட்டி தொடங்கியது. சிறிய தவளைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற முடியாமல் சரிய ஆரம்பித்தது. சான் ஏறினால் முழம் சறுக்கியது.
தொடர்ந்து உற்சாகத்துடன் சில தவளைகள் மட்டும் அதிக உயரத்தில் ஏறிக்கொண்டு இருந்தன. இதுவும் மிகவும் கஷ்டமான காரியம் என கூச்சல் போட்டது கூடி இருந்த கூட்டம். உற்சாகமாக இருந்த சில தவளைகள் சோர்வடைந்து தங்கள் முயற்சியை கைவிட்டு கீழ்நோக்கி இறங்கத் தொடங்கின. ஒரே ஒரு தவளையை தவிர அனைத்து தவளைகளும் முயற்சியை கைவிட்டது.
அது மட்டும் தொடர்ந்து மேலே ஏறிக்கொண்டே இருந்தது. தன் முயற்சியில் இருந்து சற்றும் தளரவில்லை .மிகுந்த சிரமப்பட்டு கோபுரத்தின் உச்சியை அடைந்தது. உனக்கு மட்டும் எப்படி இத்தனை பலம் என தோல்வி அடைந்த தவளைகள் கேட்க, வெற்றி பெற்ற தவளையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது. வெற்றி பெற்ற தவளைக்கு காது கேட்காது என்பது.
மனிதன் தனது லட்சியத்தை அடைய இந்த செவிட்டு தவளை போன்றுதான் மற்றவர்களின் அர்த்தமற்ற நியாயமற்ற விமர்சனங்களை காதில் வாங்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நாம் அடைய நினைத்த லட்சியத்தை அடையலாம்.