
தாம்பூலம் (paan) என்பது பண்டைய மன்னர் காலத்தில் அரச குடும்பத்தில் ஆண் பெண் இடையே நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட பொருளாயிருந்தது. ஆயுர்வேதத்தில் பான், ஜீரணத்திற்கு உதவும் ஒரு பொருளாகக் கருதப்பட்டது. மேலும் வாய் துர்நாற்றத்தை நீக்கவும், சிலவகையான தொற்று நோய்களை குணப்படுத்தவும் உதவியது வெற்றிலை. இதனுடன் பெருஞ்சீரகம், ஏலக்காய் மற்றும் லவங்கம் சேர்த்து மெல்லும்போது, சிறிது குளிர்ச்சியுடன் இனிப்பு சுவை மற்றும் காரத்தன்மையும் சேர்ந்து வயிற்றில் ஒரு சமநிலைத் தன்மை உருவாகும். விருந்துண்ட பின் தாம்பூலம் போடுவது ஜீரணத்தை சுலபமாக்கவும், புத்துணர்ச்சி பெறவும் உதவும்.
பீடா என்றும் அழைக்கப்படும் தாம்பூலம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
வெற்றிலை ஒன்றை கழுவி, அதன் காம்பை நீக்கிவிட்டு நடுவில் சுண்ணாம்பையும் காசிக் (catechu) கட்டியையும் இரண்டு அடுக்காக தடவுவார்கள். அதன் மீது பாக்கு பெருஞ்சீரகம் மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பவுடரும் வைத்து மடித்து, ஒரு லவங்கத்தை மடிப்பின் மீது குத்தி சீல் வைத்து கையில் தருவர்.
ஆயுர்வேதத்தில், வயிற்றின் ஆரோக்கியமான செயல்பாடுகளுக்கு உதவும் ஒரு பொருளாக இருந்த பீடா, பிற்காலத்தில் அதன் தயாரிப்பிலிருந்த நேர்த்தியின் மூலம் தனித்துவமான நளினம் பெற்றது.
மொகலாய மன்னர்களின் அரசவையில் பீடா நறுமணம் பெற்று விளங்கியது. அதன் உள்ளே ரோஜா இதழ்கள் வைக்கப்பட்டு, வெள்ளித் தாள்களில் (silver foil) சுருட்டி, பிறருக்கு கொடுக்கப்பட்டபோது அது அன்பின் வெளிப்பாடாகவும் இருந்தது. அப்போதிருந்த கவிஞர்கள் காதலர்களை வர்ணிக்கையில், "பீடா போட்டு சிவந்திருந்த அவர்களின் உதடு நெருப்பின் தணல் போல் தோற்றமளித்தது" என்று எழுதுவதுண்டு.
ஒரு ஆணோ பெண்ணோ மற்ற பாலினருக்கு பீடா வழங்குவதும், மற்றவர் அதைப் பெற்றுக்கொள்வதும் அவர்களுக்கிடையேயான நெருக்கத்தின் அடையாளமாக உணரப்பட்டது. மருத்துவத்தில் ஒரு கூட்டுப் பொருளாக இருந்த பொருள் நாளடைவில் கலை மற்றும் இலக்கியங்களில் பாஷனாக (passion) மாறியது. மருத்துவ குணங்களைத் தாண்டி, காதலர்கள் ஒருவரை ஒருவர் காந்தம் போல் கவர்ந்திழுக்க உதவும் உடல் மொழியாகவும் ஆனது.
நூற்றாண்டுகள் கடந்த பின், பீடா அரண்மனைகளைத் தாண்டி தன் வழியே பயணிக்க ஆரம்பித்தது. தெருவுக்குத் தெரு பான்வாலாக்கள் தங்கள் திறமையை கொட்டி பல வகையான பீடாக்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர். புகையிலை சேர்த்து உணர்ச்சியைத் தூண்டக்கூடிய, மற்றும் குல்கந்த் சேர்த்து குளிர்விக்கும் குணம் கொண்டதென பல வகை உருவாகின. எல்லாமும் எல்லோருக்கும் எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாயின் ஒவ்வொரு வகையும் ஒரு அர்த்தத்தை உள்ளடக்கியதாக உருவானது.
தன் சுயத்தை இழக்காமல், ஒரு புறம் வயிற்றுக்கு குணமளிக்கும் மருந்தாகவும், வாய்க்கு சுகந்தமான மணம் தருவதற்கும் இன்னொரு பக்கம் லேசான மயக்கம் தரும் போதைப் பொருளாகவும் பன்முகத் தன்மை கொண்டு, ஒரே ஒரு மடிப்பில் ஒரு மர்மம் நிறைந்த பொருளாக மாறிவிட்டது ஒற்றை வெற்றிலை.
இன்றும் சுபகாரியம் நடக்கும் இடங்களில் வெற்றிலை பாக்கு வைத்திருப்பது, நவராத்திரி போன்ற நல்ல நாட்களில் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்து மரியாதை செய்வது, ஹோட்டல்கள் மற்றும் விருந்து பரிமாறப்படும் இடங்களில் கடைசி ஐட்டமாக பீடா வைத்திருப்பது என இவை அனைத்துமே வெற்றிலையின் மகத்துவத்தை பறை சாற்றுவதற்கே எனலாம்.