கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியிலும் மற்றும் அதன் சுற்றுபுறங்களிலும் வளர்க்கப்படுகின்ற, இதய வடிவிலான வெற்றிலையினை மைசூர் வெற்றிலை (Mysore Betel Leaf) என்கின்றனர். இது புகையிலையோடும் அல்லது புகையிலை இல்லாமலும் நுகரப்படுகிறது. மங்களகரமான நிகழ்வுகளின் போது மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவும், அடையாளமாகவும் வெற்றிலை இலைகளின் ஒரு அடுக்கு பாரம்பரியமாக வழங்கப்படுகிறது. அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெற்றிலைத் தொகுப்பின் மீது பாக்கும் வைக்கப்பட்டு திருமண விழாக்களின் போதும், பெரியவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் வழங்கப்படுகிறது.
மைசூர் வெற்றிலை மற்ற வெற்றிலைகளிலிருந்து வேறுபட்ட தன்மையைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த வெற்றிலைகள் கொழுந்தாகவும், நல்ல சுவையுடனும் உள்ளன. அவை இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்திய துணைக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்த வெற்றிலை, 5000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் மகாராஜாவின் தோட்டங்களில் வெற்றிலை இலைகள் வளர்க்கப்பட்டன. பின்னர், பழைய அக்ரஹாராத்தில் உள்ள பூர்ணியா சவுல்ட்ரி என்னும் இடத்தில் தொடங்கி, மைசூரிலுள்ள மைசூர் - நஞ்சங்குட் சாலையை இணைக்கும் சந்திப்பானவித்யாரண்யபுரம் வரை 100 ஏக்கர் பரப்பளவு வரை விதைக்கப்பட்டன.
தொடர்ந்து படிப்படியாக, மைசூரைச் சுற்றி சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கு அது பரவ ஆரம்பித்தது. இந்த நீட்டிப்பில் தனித்துவமாக காலநிலை மற்றும் மண்ணின் தன்மையைக் குறிப்பிடலாம். அதன் காரணமாகவே இந்த வெற்றிலைகள் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டுள்ளன. அது 'மைசூர் சிகுரேல்' (மைசூர் முளை இலை) என்ற பெயர் பெற்றது. இந்த வகை இலை மிகவும் கொழுந்தாகவும், சிறந்த சுவையினையும் கொண்டு அமைந்துள்ளது.
வெற்றிலைத் தாவரமானது ஒரு குறிப்பிட்ட வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகக் கருதப்படுகிறது. எனவே அது ஒழுங்காக வளர்வதற்கு ஒரு சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை தேவைப்படுகிறது.10 முதல் 40 டிகிரி வரையிலான வெப்பநிலையில் அது சிறப்பாக வளர்கிறது. வெப்பமான, ஈரப்பதமான காலநிலையுடன் மண்ணில் கருப்பு களிமண் இருப்பது மைசூர் வெற்றிலை இலைக்கு சிறப்புப் பண்புகளை அளிக்கிறது.
கிட்டத்தட்ட 600 மில்லியன் மக்கள் உலகம் முழுவதும் பல வடிவங்களில் வெற்றிலையைப் பயன்படுத்தி வருகின்றனர். வெற்றிலை எனப்படுகின்ற இலையில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் பி பிரிவு வைட்டமின் போன்றவை அடங்கியுள்ளன. பெரும்பாலும் திருமண விழாக்கள், சமயம் சார்ந்த நிகழ்வுகள், முறையான அழைப்புகள் போன்ற நிலைகளில் வெற்றிலை முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
கர்நாடக அரசின் கீழ் உள்ள தோட்டக்கலை நிறுவனம் மைசூர் வெற்றிலையைப் பதிவு செய்ய முடிவெடுத்தது. அதற்காக இலைகளை 1999 ஆம் ஆண்டின் காப்புரிமை, வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டத்தின்படி, சென்னையிலுள்ள காப்புரிமைகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு முன்மொழிந்துள்ளது. இதைச் செய்வதன் மூலமாக மைசூர் விவசாயிகள், மைசூர் வெற்றிலை என்ற அடையாளத்தைக் கொண்டு அதனைப் பிரத்தியேகமாக பயன்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பெறும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் மைசூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.