செங்கற்பட்டு மாவட்டம், வல்லம் கிராமத்தில் ஒரு சிறிய மலையில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைகள் அமைந்துள்ளன. இக்குடைவரைகளில் ஸ்ரீ வேதாந்தீஸ்வரர், ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் மற்றும் சிவன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்குடைவரைகள் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவையாகும். இத்தலத்தில் மகேந்திரவர்ம பல்லவர் காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுக்கள் சில காணக்கிடைக்கின்றன.
பல்லவர்கள் எந்தவிதமான கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்தாமல் இயற்கையாய் அமைந்த மலைகளையும் பாறைகளையும் உளி கொண்டு குடைந்து காலத்தால் அழியாத குடைவரைக் கோயில்களை உருவாக்கி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இப்பகுதியில் அமைந்துள்ள குடைவரைக் கோயில்கள் சுமார் 1300 வருடங்கள் பழைமை வாய்ந்தவை. இக்குடைவரைகளைக் காண 81 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
படிகளை ஏறிக்கடக்கும்போது முதலில் அமைந்த குடைவரையில் கரிவரதராஜப் பெருமாள் கோயில் காணப்படுகிறது. இக்குடைவரையின் முகப்பு உத்திரத்தில் காணப்படும், ‘பல்லவபேர் அரைசர் மகள் கொம்மை தேவகுலம்’ என்ற பழந்தமிழ்க் கல்வெட்டின் வாயிலாக இக்குடைவரையினை உருவாக்கியது பல்லவப் பேரரசன் மகளான கொம்மை எனத் தெரிய வருகிறது.
கருவறைக்கு முன்பாக புடைப்புச் சிற்ப நிலையில் துவாரபாலகர்கள் ஜயன் விஜயன் என்ற பெயர் தாங்கி காட்சி தருகிறார்கள். இவர்கள் வழக்கத்திற்கு மாறாக ஆயுதங்கள் ஏதும் தாங்காது ஒரு கையை இடுப்பில் ஊன்றியும் மறு கரத்தை கவரி வீசும் பாவனையில் கையை உயர்த்திக் காட்சி தருகின்றனர்.
இதற்கு அடுத்தநிலையில் உள்ள குடைவரையில் ஆவுடையார் இன்றி ஒரு நீண்ட நெடிய பாணம் மட்டுமே காட்சி தருகிறது. கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் காட்சி தருகிறார்கள். முற்காலத்தில் லிங்கத்திருமேனி அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்துள்ளது. இக்குடைவரையில் அமைந்துள்ள விநாயகர் தாமரைப்பூவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இக்குடைவரையின் உத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டானது, ‘லக்கச் சோமாசிரியார் மகள் தேவகுலம்’ என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் இக்குடைவரையானது பெண் ஒருவரால் அமைக்கப்பட்டது எனவும் அவள் அரச மரபு சாராத பெண் எனவும் அறிய முடிகிறது.
இதற்கு அடுத்த நிலையில் மலையின் மேற்புறத்தில் ஒரு குடைவரை காணப்படுகிறது. இக்குடைவரையின் வடபுறத் தூணில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.
‘சத்துரும் மல்லன் குணபரன்
மயேந்திரப் போத்தரெசரு அடியான்
வயந்தப்பிரி அரெசரு மகன் கந்தசேனன்
செயிவித்த தேவகுலம்’
இக்கல்வெட்டின் மூலம் இந்த குடைவரையானது பல்லவப் பேரரசில் சிற்றரசனாக விளங்கிய வயந்தப்பிரியரின் மகன் கந்தசேனன் என்பவரால் அமைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இக்குடைவரையின் கருவறைத் தூண்களின் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களான பகாப்பிடுகு, லளிதாங்குரன், சத்ருமல்லன், குணபரன் முதலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டும் முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.
வேதாந்தீஸ்வரர் குடைவரையின் தென்புறக் கோட்டத்தில் ஒரு அழகிய விநாயகப் பெருமானின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. இவ்விநாயகர் தனது வலது காலை குத்துக்கால் போட்டும் இடது காலை மடக்கி வைத்து லலிதாசன நிலையில் காட்சி தருகிறார். இக்குடைவரையின் வடபுறக் கோட்டத்தில் ஜேஷ்டா தேவியின் புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. இதில் ஜேஷ்டா தேவி காளை மாட்டின் தலை கொண்ட மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தி மற்றும் சாயாதேவி, காகக்கொடியோடு காட்சி தருகிறாள்.
செங்கற்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் வல்லம் அமைந்துள்ளது. இங்கிருந்து இடதுபுறமாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இக்குடைவரைகள் அமைந்துள்ளன.