அதிகாலை எழுவதே ஆரோக்கியத்தின் படிக்கட்டுகள்!

Early morning awakening
Early morning awakeninghttps://manithan.com

திகாலை எழுவது நமக்கு வேப்பங்காயாகக் கசக்கும். ஆனால், அப்படி எழுந்துவிட்டால் நமக்கு அதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் இனிக்கும். அதிகாலை எழுவது என்பது வாழ்வியலில் மிகப்பெரிய நன்மையை பயப்பதாகும். ஆனால், நாம் என்ன செய்கிறோம்? நள்ளிரவு வரை செல்போன் முன்னாலும் லேப்டாப் போனாலும் காலத்தைப் போக்கிவிட்டு பிறகு கடமைக்கு தூங்க ஆரம்பிக்கிறோம். அதனால் நம்மால் அதிகாலை எழ முடியவில்லை. இப்படி செய்வதால் நம் உடல் நிலை, மனநிலை இரண்டுமே பாதிக்கப்படுகிறது.

அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த காலகட்டத்தில் எழுந்து நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்துமே வெற்றியை தரக்கூடியது என சான்றோர்கள் கணித்திருக்கிறார்கள். அதிகாலை எழுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

அதிகாலை நேரத்தில் நமக்கு அமைதியான மற்றும் எந்த ஒரு தொல்லைகளும் இல்லாத சூழல் அமையும் என்பதால் அன்றாட வாழ்க்கையின் கவனச் சிதறல்கள் ஏற்படாமல் வேலைகளில் முழு கவனம் செலுத்தலாம். காலையில் விரைவாக எழுந்து முக்கியமான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். அன்றைய நாளுக்கான இலக்கை அமைத்து, மீதம் இருக்கக்கூடிய நாளை அதற்கேற்றவாறு செலவு செய்யலாம். அதிகாலை எழுபவர்கள் அதிக ஆக்டிவாகவும் நேர மேலாண்மை திறன்கள் அதிகம் பெற்றவர்களாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காலை விரைவாக நீங்கள் எழும்பொழுது தெளிவான மற்றும் எச்சரிக்கையான மனநிலையோடு அன்றைய நாளை துவங்குவீர்கள். தூக்கத்தில் இருந்து விழிப்புக்கு உங்கள் மூளை மாறும் சமயத்தில் உங்களுடைய நினைவாற்றல், கவனம் மற்றும் பிரச்னைகளை சமாளிக்கும் திறன்கள் ஆகிய அனைத்தும் சிறப்பாக செயல்படும். காலை நேரத்தில் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய இந்த மனத்தெளிவின் நன்மையை பயன்படுத்திக் கொண்டு அதிக கவனம் மற்றும் திறன் தேவைப்படக்கூடிய வேலைகளை நீங்கள் செய்து முடிக்கலாம்.

அதிகாலை எழுந்து விடுவதால் உங்களது வழக்கமான வேலைகளைத் துவங்குவதற்கு முன்பு போதுமான அளவு நேரம் கிடைக்கும். இந்த சமயத்தில் நீங்கள் தியானம், உடற்பயிற்சி செய்வது, காலை உணவை பொறுமையாக ரசித்து சாப்பிடுவது, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கக்கூடிய வழக்கங்களை பின்பற்றுவது போன்ற உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் விஷயங்களை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மஷ்ரூம் காபி குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Early morning awakening

தொடர்ச்சியாக நீங்கள் காலை எழுவதற்கு பழக்கப்படுத்திக் கொள்ளும்பொழுது உங்கள் உடலின் உட்புற கடிகாரமும் அதற்கு ஏற்றவாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ளும். மேலும், இதன் மூலமாக உங்கள் தூக்கத்தின் தரம் மேம்படும்.

அதிகாலையில் பெரும்பாலானோர் அதிக உடல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும். காலையை நீங்கள் உடற்பயிற்சியோடு அந்நாளை ஆரம்பிக்கும்பொழுது உங்கள் ஆற்றல் அளவு, மனநிலை போன்றவை மேம்படும். அன்றைய நாளை நேர்மறையான எண்ணத்தோடு அணுகுவீர்கள். மேலும் உங்கள் இதய ஆரோக்கியம், உடல் எடை போன்றவை மேம்படுவதோடு நாள்பட்ட நோய்களுக்கான அபாயத்திலிருந்தும் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அதிகாலை எழும் நபராக இருப்பதற்கு அதிக அளவு ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு தேவை. அப்படி இருந்தால் மட்டுமே உங்களால் அதிகாலையில் தொடர்ச்சியாக எழுந்து உங்களுடைய காலை நியமங்களை பின்பற்ற முடியும். காலையில் எழுந்து நீங்கள் சுய ஒழுக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டால் உங்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் மீதான சிறந்த கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள். மேலும் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து இலக்குகளை எளிதாக அடைந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.

இரவு முன் தூங்கி காலையிலும் முன் எழுவோம். விலைமதிப்பில்லாத நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க இதை விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com