150 கிலோ எடை கொண்ட பஞ்சமுக வாத்தியம் வாசிக்கும் கோயில்கள் எது தெரியுமா?

Panchamukha vadyam
Panchamukha vadyam
Published on

குட பஞ்சமுகி எனும் பஞ்சமுக வாத்தியம் கி.பி .12ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் சோழமண்டலத்தில் மட்டுமே தோன்றிய தாளக் கருவி. இதனை யாமள தந்திரம் போற்றும் பாரசசைவர்களே இயக்குவார்கள். முட்டுக்காரர் எனும் இம் மரபினர் சிவபெருமானின் நிருத்தத்திற்காகவே இதனை இசைப்பார்கள் .

இக்கருவி ஐந்து முகங்களையும் சதாசிவனுடைய ஐந்து முகங்களாக போற்றுவர். சோழர்கள் காலத்தில் இருந்த இந்த தாளக்கருவி இன்று அருகி மறைந்து விட்டது திருவாரூர், திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம், வாசிக்கப்படுகிறது.

பஞ்ச முக வாத்தியம்

'பஞ்சமுக வாத்தியம்' என்னும் 'ஐம்முக முழவம்', மிகவும் பெரிய தோல் இசைக்கருவி ஆகும் . குடமுழா , குட பஞ்சமுகி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் சில பெருங் கோவில்களில் மட்டுமே இந்த கருவி இசைக்கப்படுகிறது. திருவாரூர் திருத்துறைப்பூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. சிவனின் ஐந்து முகங்களை குறிப்பதால் இது பஞ்சமுக வாக்கியம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாரூரில் காமிகாகம பூஜைகளுக்கும், விழாக்களிலும் இசைக்கப்படுகிறது.

இசைக்கருவி ஒலி

திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இதன் அமைப்பு ஒரு முகம் பாம்பு சுற்றியது போல உள்ளது.

மற்றொன்று ஸ்வஸ்திக் போன்ற வடிவில் அமைந்துள்ளது.

வேறொரு முகம் தாமரை பூ வடிவில் உள்ளது .

பிறிது ஒன்று எவ்வித அடையாளம் இன்றி உள்ளது.

நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது.

பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகத்திலும் கட்டப்பட்டுள்ள தோலின் கனம் வெவ்வேறு அளவுகளில் இருப்பதால் பஞ்சமுக வாத்தியத்தை இசைக்கும்போது வெவ்வேறு வகையான ஒலி எழுகிறது. இதில் உள்ள ஐந்து முகங்களும் ஐந்து வகையான ஒலியை எழுப்பும் தன்மை கொண்டவை. இந்த இசை கருவி ஒவ்வொரு முகத்திலும் தனித்தனியாக அடிக்கப்படும் போது ,ஏழு முறையும் ஐந்திலும் சேர்ந்து அடிக்கும் போது முகத்திற்கு ஒன்றாக ஐந்து முறையும் அடிக்கப்படும் .

இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது. இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சி பெற்ற கோவில் ஊழியர்கேளே இக்கருவியினை இசைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சிவலிங்கத்திற்கு புடவை அணிவிக்கப்படும் கோபெஷ்வர் மகாதேவ் மந்திர் - பின்னணி என்ன ?
Panchamukha vadyam

இதன் அமைப்பு.

ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும்.

மேல்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்து கட்டப்பட்டிருக்கும் .

சுமார் 150 கிலோ எடை கொண்ட பஞ்சமுக வாத்தியம் கைகளால் எடுத்து செல்ல முடியாது. இதனால் சக்கரம் இணைக்கப்பட்ட இரும்பு சட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல ஏதுவாக இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் பயன்பாடு மிகவும் அருகி வருகிறது.

கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 -800 ஆண்டுகள் பழமையான சில இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று முற்றிலும் செம்பால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றரை டன் எடை உள்ள பஞ்சமுக வாத்தியமும் வைக்கப்பட்டிருந்தது.

5 முகங்களின் தத்துவம்.

சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஐந்து வகையான தொழில்களை புரிகின்றன என்று சைவ ஆகமங்கள் சொல்லுகின்றன. இந்த ஐந்து முகங்கள் ஐந்து தத்துவ விஷயங்களை விளக்குவது பஞ்சமுக வாத்தியம் ஆகும்.

அதாவது சிவனுடைய பஞ்ச க்ருத்யங்களை ஐந்து தொழில்களை - ஆக்கல், காத்தல் , அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து செயல்களை விளக்க நடராஜர் பெருமான் ஐந்து வகை நடனங்களை ஆடினார்.

ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு ஒலிகள் தேவைப்பட்டதால், ஐந்து முகங்களிலும் தோலின் மென்மையும் , பருமையும் அதற்கு தக்க அமைக்கப்பட்டது.

ஐந்து முகங்களுக்கும் நான்கு திசைகளின் பெயர்களையும் நடுவில் உள்ள முகத்தை ஆகாய திசை என்றும் சொல்லுவர்.

ஆக்கல் - சதியோ ஜாதம் - மேற்கு.

காத்தல் - வாம தேவம் - வடக்கு .

அழித்தல் -அகோரம் - தெற்கு.

மறைத்தல் - தத்புருஷம் - கிழக்கு.

அருளல் - ஈசானம் - வானம்.

இதையும் படியுங்கள்:
‘சிவ பூஜையில் கரடி’ என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
Panchamukha vadyam

சில பஞ்சமுக வாத்தியங்களில் பாம்பு, மலர்கள் போன்ற சித்திரவேலைபாடுகளும் உள்ளன.

கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும் போது நந்திகேஸ்வரர் பஞ்சமுக வாத்தியம் என்னும் குடமுழாவாத்தியத்தை வாசிப்பதைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com