
பிருந்தாவனத்தில் வம்சிவட் என்ற பகுதியில் கோபேஷ்வர் மகாதேவ் மந்திர் என்ற ஒரு மிகப்பழமை வாய்ந்த ஷிவா கோவில் இருக்கிறது. இங்கு இருக்கும் சிவலிங்கத்திற்கு ஆடையாக புடவை தான் அணிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
ஒரு முறை பிருந்தாவனத்தில் கிருஷ்ணரும் கோபிகளும் பௌர்ணமி இரவில் ராஸ லீலா நடனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ஷிவாவுக்கு ராஸ லீலையில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை உண்டாக கலந்து கொள்ள வம்சிவட்டுக்கு போனார்.
ஆனால், பிருந்தாதேவி அவரை தடுத்து நிறுத்தி, 'ராஸ லீலா நடனத்தில் கிருஷ்ணரை தவிர வேறு ஆண்கள் பங்கெடுக்க முடியாது' என்றார்.
ஷிவா மிகவும் வருத்தம் அடைந்து நுழைவாயிலில் உட்கார்ந்து விட்டார். அவரது சோகம் பிருந்தாதேவியை சங்கடப்படுத்தி விட்டது. உடனே பிருந்தா தேவி சிவாவிடம் குசும் சரோவர் என்ற குளத்தில் முங்கி குளித்து வருமாறு கூறினார். சிவாவுக்கு குசும் சரோவரில் முங்கி எழுந்ததும் அழகிய பெண் ரூபம் கிடைத்தது.
அளவில்லா சந்தோஷத்துடன் ராஸ லீலாவில் கலந்து கொண்டு கிருஷ்ணருடன் நடனமாடி மகிழ்ந்தார். கிருஷ்ணர் கோபி ரூபத்தில் இருந்த சிவாவை 'கோபெஷ்வர்' என்று அழைத்தார்.
இந்நிகழ்வு காரணமாகவே இந்த கோபெஷ்வர் மகாதேவ் கோவிலில் சிவலிங்கத்திற்கு புடவை அணிவிக்கிறார்கள். வம்சி வட்டில் சிவா கோபி வடிவில் உள்ள அழகிய விக்ரகம் இன்றும் உள்ளது. இன்னொரு விஷயம் இந்த கோவிலில் சிவாவுக்கு போகா அதாவது நைவேத்யம் எதுவும் செய்வதில்லை. சிவா, சாப்பிட மூன்று வேளையும் கைலாயம் சென்று வருவதாக ஐதீகம்.