
பறையாட்டம் என்பது தமிழர்களுடைய பாரம்பரிய நடனமாகும். இது தமிழ் கலாச்சாரத்தின் பழமையான கலை வடிவங்களில் ஒன்று. பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது. பறையாட்டத்தில் இசைக்கருவியை வாசிப்பவர் தான் நடன கலைஞர். இவர் பறையை தோளில் செங்குத்தாக 'நடாய்' எனப்படும் தோல் துணி பட்டையால் கட்டிக்கொண்டு நின்று அல்லது நடந்து கொண்டு என பல்வேறு நிலைகளில் நடனம் ஆடுவார்கள். தமிழகத்தில் பல ஆண்டு காலமாக இருந்து வரும் முக்கிய தோல் இசைக் கருவியாகும்.
ஆதி மனிதர்கள் தங்கள் குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்துவதற்கும், விலங்குகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் எழுப்பிய சத்தம் தான் பறையாட்டத்தின் மூலம் என்று கூறப்படுகிறது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி கேட்போரை மயக்கும் இசை இது.
விலங்குகளை கொன்று, தின்று மீந்த தோலை எதிலாவது கட்டி வைத்து, காயவைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடிய ஆட்டம் தான் காலப்போக்கில் கலை வடிவமாக மாறியது. பிறகு திருமணம், இறப்பு, கிராமத்தில் உள்ள சிறு தெய்வங்களின் திருவிழா நிகழ்ச்சிகளிலும் இசைப்பது வழக்கமானது.
'தப்பாட்டம்' என அழைக்கப்படும் பறையாட்டம் ஜாதிய குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிய பின்பு அந்த சமூகத்தில் உள்ள இளைஞர்கள் பறை அடித்தலை அவமானமாக கருதத் தொடங்கினர். எனவே, மெல்ல மெல்ல இந்தக் கலை அழியும் நிலைக்கு வந்தது.
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் என தனித் தனி அடிவகைகள் உள்ளன. டப்பா அடி, பாடம் அடி, மருள் அடி, சினிமா அடி, சாமிச்சாட்டு அடி, மாரடிப்பு அடி, வாழ்த்தடி என பல வகையான அடிகள் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நேர் நின்று, எதிர் நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளை மாற்றுதல் என விதவிதமான கலையாடல்கள் இதில் உண்டு.
தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்த கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோவில் சார்ந்த நிகழ்ச்சிகள், அரசியல் பிரச்சாரங்களில் பறையாட்ட கலை நிகழ்த்தப்படுகிறது. ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட கலையை இப்பொழுது பெண்களும் ஆடி வருகின்றனர். பறையாட்டக் கருவியோடு துணைக் கருவியாக சில இடங்களில் தவிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த தோல் இசைக்கருவி எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக இருந்து வந்துள்ள இது பழங்காலத்தில் முக்கிய தகவல் பரப்பு முறையாகவும் இருந்துள்ளது. தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சங்க இலக்கியங்களில் பறை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பறையில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. அவை வட்ட வடிவமான சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். சட்டத்தில் புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி வைக்கப்படும்.
பறையடிக்க இரண்டு விதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இடது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு 'சிம்புக்குச்சி' அல்லது 'சுண்டுகுச்சி' என்று பெயர். இது மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும். வலது கையில் வைத்திருக்கும் குச்சிக்கு 'அடிக்குச்சி' அல்லது 'உருட்டுக்குச்சி' என்று பெயர். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன. தற்காலத்தில் விழாக்கள், அரசியல் பிரச்சார நிகழ்ச்சிகளில் பறை முக்கிய இடம் பெற்று வருகிறது.