
ஸ்பைசி மற்றும் புளிப்புச் சுவையுடன் மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய 'மன்ச்சொவ் சூப்' மற்றும் குஜராத்தி 'ஆலூ போஹா' எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்.
'மன்ச்சொவ் சூப்' ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.நறுக்கிய பூண்டு 2 டீஸ்பூன்
2. நறுக்கிய இஞ்சி 2 டீஸ்பூன்
3.நறுக்கிய காய்கறி (கேரட், பீன்ஸ், ஸ்பிரிங் ஆனியன்,
பச்சைப் பட்டாணி போன்றவை) 1 கப்
4.சோயா சாஸ் 2 டீஸ்பூன்
5.வினிகர் 2 டீஸ்பூன்
6.மிளகுத் தூள் 1½ டீஸ்பூன்
7.உப்பு தேவையான அளவு
8.எண்ணெய் தேவையான அளவு
9.தண்ணீர் தேவையான அளவு
10.பொரித்த நூடுல்ஸ் 200 கிராம்
11.வெஜிடபிள் ஸ்டாக் 1 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். அடுப்பை நன்கு எரியவைத்து இரண்டு மூன்று நிமிடங்கள் வரை குலுக்கி விட்டு ஸ்டிர் ஃபிரை
பண்ணவும். பின் 1 கப் தண்ணீர் மற்றும் வெஜிடபிள் ஸ்டாக் 1 கப், இரண்டையும் காய்கறிகளுடன் சேர்த்து நன்கு கொதித்து வேக விடவும். பின் அதனுடன் சோயா சாஸ், வினிகர், உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். பொரித்த நூடுல்ஸ் மற்றும் மேலும் சிறிது வெங்காயத் தாள் துண்டுகளைத் தூவி சூடாகப் பரிமாறவும்.
குஜராத்தி ஆலூ போஹா ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.போஹா (கெட்டி அவல்) 1 கப்
2.எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
3.கடுகு ¾ டீஸ்பூன்
4.நறுக்கிய பச்சை மிளகாய் 2
5.எள் விதை 1 டீஸ்பூன்
6.வேர்க்கடலை பருப்பு 2 டீஸ்பூன்
7.கறிவேப்பிலை 2 இணுக்கு
8.பெருங்காயம் ஒரு சிட்டிகை
9.வேக வைத்து நறுக்கிய உருளைக் கிழங்கு ½ கப்
10.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
11.லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன்
12.உப்பு தேவையான அளவு
13.கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
செய்முறை:
அவலை நன்கு கழுவி, கால் டம்ளர் தண்ணீர் தெளித்துப் பிசிறி ஐந்து நிமிடம் வைத்திருக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு, வேர்க்கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் கறிவேப்பிலை, எள், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். இரண்டு கிண்டு கிண்டிவிட்டுப் பின் உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து, இரண்டு டீஸ்பூன் தண்ணீர் தெளித்து, அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும்படி மிதமான தீயில் வைத்து கிளறிவிடவும். பின் அவல் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிடவும். மூடி போட்டு மூடி வைத்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்து லெமன் ஜூஸ் பிழிந்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சுவையான ஆலூ போஹா ரெடி!