பட்டுப் புடவைகள் என்றாலே காஞ்சிபுரம், ஆரணிதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியாவின் மேற்குப் பகுதியில் குஜராத்தில் இருக்கும் பட்டன் (Patan) நகரின் பட்டோலா புடவைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இவை வெறும் புடவைகள் அல்ல; இதன் ஒவ்வொரு நூலிலும் வரலாறு, கலை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.
பட்டோலா புடவைகளின் தனிச்சிறப்பு அதன் இரட்டை இக்கட் (Double Ikat) நெசவு முறைதான். இது உலகிலேயே மிகவும் சிக்கலான நெசவு நுட்பங்களில் ஒன்று. ஆகையால், இந்த புடவைகள் மிகவும் விலை உயர்ந்தவை.
ஒரு சாதாரண புடவை நெசவைப் போலன்றி, பட்டோலா புடவை நெய்வதற்கு முன், பாவு நூல்கள் மற்றும் ஊடு நூல்கள் இரண்டும் தனித்தனியே வண்ணம் தீட்டப்படுகின்றன. ஒவ்வொரு நூலிலும் டிசைனை திட்டமிட்டு, பலகட்டங்களாக நூலை சாயமேற்றி மிக நுணுக்கமாக பட்டோலா புடவை தயாரிக்கப்படுகிறது. இந்த கடினமான செய்முறைக்கு மிகுந்த துல்லியமும், பொறுமையும் தேவை. ஒரு பட்டோலா புடவையை நெய்ய ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம்!
புடவையின் டிசைன்கள்:
பட்டோலா புடவைகளின் டிசைன்கள் ஆழமான கலாச்சார முக்கியத்துவம் கொண்டவை. பூக்கள், யானைகள், கிளிகள், மனித உருவங்கள், மற்றும் வடிவியல் வடிவங்கள் என ஒவ்வொரு வடிவமும் செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம், வளமை போன்றவற்றைச் உணர்த்துகிறது. நடனமாடும் பெண் வடிவம் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் குறிக்கும். யானை மற்றும் கிளி வடிவங்கள் அரச குடும்பத்தையும், அன்பையும் குறிக்கின்றன. ஒவ்வொரு புடவையும் ஒரு தனித்துவமான கதையைச் சொல்கிறது. குஜராத்தின் கலாச்சார வரலாறு, புராணக் கதைகள் மற்றும் இயற்கையிலிருந்து இந்த வடிவங்கள் உருவானவை.
வரலாற்று ரீதியாக, பட்டோலா புடவைகள் அரச மற்றும் பணக்காரக் குடும்பங்களால் மட்டுமே அணியப்பட்டதாக கருதப்பட்டன. செல்வம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக விளங்கின. 12 ஆம் நூற்றாண்டில், சால்வி சமூகத்தினர் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலிருந்து குஜராத்தின் பட்டன் நகருக்கு இந்த நெசவு கலையைக் கொண்டு வந்ததாகவும், சோலங்கி ராஜபுத்திரர்கள் ஆதரவின் கீழ், இக்கலை செழித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பல நூற்றாண்டுகளாக, பட்டோலா புடவைகள் குஜராத்தின் கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளன. குறிப்பாக ஜைன மற்றும் இந்து சமூகத்தினரிடையே திருமணங்கள் மற்றும் சுப காரியங்களின் போது இவை அணியப்படுகின்றன.
பட்டனின் இரட்டை இக்காட் பட்டோலா புடவையின் சிறப்பு என்னவென்றால், புடவையின் இரு பக்கங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரு உண்மையான பட்டோலா புடவை அதன் நிறத்தையோ, பளபளப்பையோ ஒருபோதும் இழக்காது என்று கூறப்படுகிறது. இன்றும், பட்டோலா புடவைகள் தலைமுறை தலைமுறையாக போற்றிப் பாதுகாக்கப்படும் பொக்கிஷங்களாக இருக்கின்றன. அவை இந்திய பாரம்பரியத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பட்டன் நெசவாளர் சமூகத்தின் நீடித்த கலைத்திறனையும், கலாச்சாரப் பெருமையையும் பிரதிபலிக்கின்றன.