போரை எதிர்த்து நிற்பது ஓவியமா? பிகாசோவின் பிரம்மாண்டப் படைப்பு!

போருக்கு எதிராகக் கலையை ஆயுதமாக ஏந்திய பாப்லோ பிகாசோவின் மாபெரும் சுவரோவியத்தின் வரலாறு.
கெர்னிகா ஓவியம் - Picasso Guernica
கெர்னிகா ஓவியம் - Picasso Guernica
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

கெர்னிகா (1937) — ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது கெர்னிகா மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சைக் கண்டித்து வரையப்பட்ட பிரம்மாண்டமான ஒற்றை வண்ணச் சுவரோவியம்; இது ஒரு உலகளாவிய போர் எதிர்ப்புச் சின்னமாகவும், 20-ஆம் நூற்றாண்டு அரசியல் கலையின் மையப் படைப்பாகவும் திகழ்கிறது.

“ஓவியம் என்பது வீடுகளை அலங்கரிக்கும் வெறும் காட்சிப் பொருள் அல்ல; அது எதிரிக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் ஓர் ஆயுதம்” _ பாப்லோ பிகாசோ

ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது, ஏப்ரல் 26, 1937 அன்று நாஜி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலியப் படைகளால் ஸ்பெயினின் ‘கெர்னிகா’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரின் மீது நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலைக் கண்டித்து, போரின் அவலங்களை உலகிற்கு உணர்த்த பிக்காசோ இந்த மாபெரும் சுவரோவியத்தை உருவாக்கினார்.

கெர்னிகா ஓவியம் முக்கிய சிறப்புகள்

பிரமாண்டமான வடிவமைப்பு: இது 3.49 மீட்டர் உயரமும், 7.76 மீட்டர் அகலமும் கொண்ட பிரமாண்டமான கேன்வாஸ் (எண்ணெய் வண்ணம்) ஓவியமாகும். போரின் இருளையும், சோகத்தையும் வெளிப்படுத்த பிக்காசோ வண்ணங்களைத் தவிர்த்து கருப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் ஆகிய நிறங்களை மட்டுமே பயன் படுத்தியுள்ளார். இது செய்தித்தாள் செய்திகளின் தீவிரத்தன்மையை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது

குறியீடுகளும் மனித ஓலங்களும்: கெர்னிகா ஓவியத்தில் உள்ள ஒவ்வொரு உருவமும் போரின் பேரழிவையும், மனிதர்களின் வேதனையையும் குறிக்கும் ஆழமான குறியீடுகளாகும். தனது இறந்த குழந்தையைக் கைகளில் ஏந்தி, வானத்தைப் பார்த்து கதறும் தாயின் உருவம், போரினால் ஏற்படும் ஈடு செய்ய முடியாத இழப்பைக் காட்டுகிறது.

கெர்னிகா ஓவியம் - Picasso Guernica
கெர்னிகா ஓவியம் - Picasso Guernica

ஓவியத்தின் மையத்தில் உடலெங்கும் காயங்களுடன், வாயைத் திறந்து அலறும் குதிரையானது போரினால் சித்திரவதைக்குள்ளாகும் காட்சி மக்களை கண்கலங்க வைப்பதாக இருக்கும். ஒரு பக்கமாக நிற்கும் காளையின் உருவம் பாசிசத்தின் கொடூரத்தையோ அல்லது ஸ்பெயினின் பாரம்பரிய மாண்பையோ குறிப்பதாக கலை விமர்சகர்களால் விவாதிக்கப்படுகிறது.

தரையில் துண்டு துண்டாகக் கிடக்கும் ஒரு வீரனின் உடல் மற்றும் அவனது கையில் இருக்கும் உடைந்த வாள், போரின் தோல்வியையும் அழிவையும் உணர்த்துகிறது.

கலை பாணி: பிக்காசோ தனது புகழ்பெற்ற கியூபிசம் (கனசதுர வடிவியல் பாணி) மற்றும் நவீனத்துவக் கலை நுட்பங்களை இதில் கையாண்டுள்ளார். உடல்களின் சிதைவு, முகங்களின் கோணல் வடிவங்கள் மற்றும் பகுப்பாய்வு முறைகள் மூலம் மனித உடலின் தாங்க முடியாத வலியையும், அதிர்ச்சியையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வரலாற்று முக்கியத்தும் மற்றும் தற்போதைய இடமும்: இந்த ஓவியம் முதன்முதலில் 1937 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த சர்வதேச கண்காட்சியில் ஸ்பானிய அரங்கில் வைக்கப்பட்டு, உலக நாடுகளின் கவனத்தை ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் பக்கம் திருப்பியது.

இதையும் படியுங்கள்:
மணலில் மிதக்கும் பிரம்மாண்ட கோவில்: அங்கோர் வாட் பின்னால் உள்ள அறிவியல் என்ன?
கெர்னிகா ஓவியம் - Picasso Guernica

பிக்காசோவின் சபதம்: ஸ்பெயினில் ஜனநாயகம் மலரும் வரை இந்த ஓவியத்தை அங்கு கொண்டு செல்லக் கூடாது என்று பிக்காசோ நிபந்தனை விதித்திருந்தார். இதனால் பல ஆண்டுகள் நியூயார்க்கின் Modern Museum of Art இல் இது பாதுகாக்கப்பட்டது.

தற்போதைய இருப்பிடம்: பிக்காசோவின் விருப்பப்படியே ஸ்பெயினில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்ட பின் 1981 இல் இது தாயகம் திரும்பியது. தற்போது இது ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உள்ள Museo Reina Sofia அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

லியோனார்டோ டா வின்சியின் ‘மோனாலிசா’ ஓவியம் எப்படி அமைதிக்கும் புன்னகைக்கும் அடையாளமோ, அதேபோல பிக்காசோவின் ‘கெர்னிகா’ ஓவியம் போருக்கு எதிரான உலகளாவிய அமைதியின் சின்னமாகவும், அதிகார அத்துமீறல்களுக்கு எதிரான கலைப் புரட்சியாகவும் இன்றும் திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
ஜெர்மன் கலாச்சாரம் உலகை வென்றது எப்படி? நீங்கள் அறியாத ஆச்சரியமான உண்மைகள்!
கெர்னிகா ஓவியம் - Picasso Guernica