

பிச்வாய் (Pichhwai) என்பது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அருகிலுள்ள நாத்வாராவில் தோன்றிய, 400 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய இந்திய கலை வடிவமாகும். இது துணிகளில் வரையப்படும். கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் தெய்வீக லீலைகளை சித்தரிக்கும் ஒரு நுணுக்கமான இந்திய பாரம்பரிய கலை வடிவம் இது. 'பிச்வாய்' என்ற சொல் சமஸ்கிருத வார்த்தைகளான பிச் (பின்னணி) மற்றும் வாய் (துணி) என்ற சொற்களிலிருந்து உருவானது. அதாவது துணியில் வரையப்பட்ட பின்னணி ஓவியம்.
இக்கலை ராஜஸ்தானில் சிப்பா கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. கோவில்களில் கடவுளுக்குப் பின்னால் தொங்கவிடப்படும் துணி ஓவியங்கள், ஸ்ரீநாத்ஜி (இளைய கிருஷ்ணர்) மற்றும் தாமரை, பசுக்கள், ராதா, கோபிகைகள், மயில்கள் போன்ற குறியீட்டு உருவங்களுக்கு பெயர் பெற்றவை. ஆரம்பத்தில் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் கடவுளுக்குப் பின்னால் தொங்கவிடப்பட்டது. பின்னர் வீடுகளிலும் பிரபலமானது.
பிச்வாய் ஓவியங்கள் அவற்றின் துடிப்பான, இயற்கை வண்ணங்களுக்கு பெயர் பெற்றவை. மிகவும் நுணுக்கமான விவரங்களுடன், இயற்கை வண்ணங்கள் (நிலக்கரி, இண்டிகோ, குங்குமப்பூ) மற்றும் தங்கம், வெள்ளி போன்றவற்றை பயன்படுத்தி வரையப்படுகிறது. இவை பெரும்பாலும் கையால் நெய்யப்பட்ட பருத்தி துணி அல்லது கைவினை காகிதத்தில் வரையப்படுகின்றன. ஓவியங்களுக்கு விலங்குகளின் முடி அல்லது பருத்தி இழைகளால் செய்யப்பட்ட இயற்கை தூரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பாரம்பரிய துணி ஓவியக்கலை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கைக் கதைகள் மற்றும் அவரது லீலைகளை சித்தரிக்கிறது. பிச்வாய் ஓவியம், கிருஷ்ணருடன் இயற்கையின் தெய்வீக தொடர்பையும், பக்தி மற்றும் ஆன்மீக உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஓவியங்கள் புஷ்டிமார்க் பக்தி பிரிவுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணரின் ஏழு வயது வடிவமான ஸ்ரீநாத்ஜியை மையமாகக் கொண்டுள்ளது. இந்தக் கலை வடிவம் ராஜஸ்தானின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.
ஆரம்பத்தில் கோயில்களில் பக்தி உணர்வை அதிகரிக்கவும், படிக்காதவர்களுக்கு கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லவும் பயன்படுத்தப்பட்டன. இப்போது கலை ஆர்வலர்களின் வீடுகளிலும் இவை இடம் பெற்றுள்ளன. ஜென்மாஷ்டமி, கோவர்தன் பூஜை, ஹோலி போன்ற பல்வேறு திருவிழாக்கள் மற்றும் பருவ கால நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஓவியங்கள் அமைக்கப்படுகின்றன.
பாரம்பரிய பிச்வாய் Vs நவீன பிச்வாய்:
பாரம்பரிய பிச்வாய் முற்றிலும் இயற்கை சாயங்கள் மற்றும் கைகளால் செய்யப்பட்ட தூரிகைகளைப் பயன்படுத்தி பருத்தி துணியில் வரையப்படுகின்றன.
நவீன பிச்வாய் ஓவியங்கள் அக்ரிலிக் வண்ணப்பூச்சுகள், காகிதம் அல்லது கேன்வாஸ் போன்ற பிற தளங்களைப் பயன்படுத்தி, சில சமயங்களில் அச்சு வடிவத்திலும் உருவாக்கப்படுகின்றன.