குஜராத்தின் பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட 'பித்தோரா ஓவியங்கள்' விலங்குகள், தாவரங்கள் மற்றும் இயற்கையின் வடிவமைப்புகளைக் கொண்டது. இந்த ஓவியங்கள் குஜராத் மக்களால் சுவர்களிலும் குகைகளிலும், வரைந்துதான் கண்டுபிடிக்கப்பட்டன.
பித்தோரா ஓவியங்கள் குஜராத், ராஜஸ்தானின் சில பகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த ரத்வா, பில், நாயக் மற்றும் தாடி பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஓவியம் 11ம் நூற்றாண்டில் குஜராத்தின் உள்ளூர் மலை உச்சியில் உள்ள குகை ஓவியங்களிலிருந்து இந்த ஓவியங்கள் தோன்றியதாக கண்டறியப்பட்டது.
11ம் நூற்றாண்டில் கோவில் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட இந்த ஓவியங்கள், வியாபாரமும் செய்யப்பட்டன. அதன்பின்னரே பித்தோரா ஓவியங்களின் புகழ் பல இடங்களில் பரவ ஆரம்பித்தது. அதன்பின்னர், இந்த ஓவியங்கள் பழங்குடி மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், புராதன வாழ்க்கை மற்றும் அதன் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும்விதமாக வளர்ச்சிபெற்றது.
இயற்கை நிறமிகளை வைத்து வண்ணமயமாக வரையப்பட்ட இந்த ஓவியங்களின் அழகு விரைவிலேயே ஒரு சிறப்பான கலைப் படைப்பாக மாறியது. பித்தோரா ஓவியங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் அதிகம் வரையப்பட்டன. அதேபோல் குஜராத் மக்கள் அந்த ஓவியங்களை வரைந்து கோவில்களுக்கும் காணிக்கையாக வழங்கினார்கள்.
பித்தோரா, உணவு தானியங்களின் கடவுளாகவும், குஜராத் மக்களின் முக்கிய தெய்வமாகவும் கருதப்படுகிறது. ஆகையால்தான், இந்த ஓவியத்திற்கு பித்தோரா என்று பெயர் சூட்டப்பட்டது.
முதலில் கோவில் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டு புனிதத்துவம் வாய்ந்த இந்த ஓவியங்கள், பிற்பாடு வீட்டில் குழந்தைகளுக்கோ அல்லது விலங்குகளுக்கோ உடம்பு சரியில்லை என்றால் இந்த ஓவியத்தை வாங்கி சுவற்றில் மாட்டினார்கள். இல்லையெனில், இந்த ஓவியங்களை சுவற்றில் வரைந்து வைத்துக் கொள்வார்கள். ஏனெனில், இது மக்களின் உடல் பிணிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய கலை ஓவியங்களின் அறிமுகத்தால், மீண்டும் பித்தோரா ஓவியத்தின் கலை அழகு பேசப்படத் தொடங்கியது. அதேபோல் சமீபக்காலமாக இதைப்பற்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட இந்தியாவில் பித்தோரா ஓவியத்தை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், இப்போது இந்த ஓவியங்கள் சடங்குப் பொருளாகப் பயன்படுத்தப்படவில்லை. இது வீட்டு அலங்காரத்திற்காகவும், பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் ஒரு கதைச் சொல்லியாகவும்தான் விளங்குகிறது.