

போலந்தின் க்ராகோவ் அருகே உள்ள வியேலிச்கா உப்புச் சுரங்கம் 1.35 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான உப்பு படிமங்களில் தோன்றிய, 9 நிலைகள் கொண்ட 327 மீ ஆழம், 245 கிமீ நீளமுள்ள வரலாற்றுச் சின்னமாகும். காசிமிர் மன்னர் காலத்தில் அரசின் முக்கிய வருவாய் மூலமாக இருந்த இது, இரண்டாம் உலகப்போரில் ரகசிய தொழிற்சாலையாகவும் பயன்பட்டது; இன்று யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக சுற்றுலா மையமாக திகழ்கிறது.
முன்னோர்கள் வழ்ந்த காலத்தின் கதைகளை கூறும் பழமையான இடங்கள் வரலாற்றுச் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அதிசயக்கத்தக்க வரலாற்று சின்னங்கள் பல இருந்தாலும் நிலத்தடிக்கு அடியில் முழுவதும் உப்பினால் கட்டப்பட்ட பிரம்மாண்ட நகரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
சாதாரணமாக பார்க்கும்போது ஷாப்பிங் மால்போல தோன்றும் போலந்தின் க்ராகோவ் (Krakow) நகருக்கு அருகே அமைந்துள்ள 'வியேலிச்கா உப்புச் சுரங்கம்' (Wieliczka Salt Mine) விசித்திரமான,அழகான வரலாற்று சின்னங்களில் ஒன்றாக உள்ளது. 9 நிலைகளாக 327 மீட்டர் ஆழத்தில், 245 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு விரிந்துள்ள வரலாற்று சின்னம் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஐரோப்பாவின் சில பகுதிகளை சுமார் 1.35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீர் ஆக்கிரமித்து இருந்தது. புவி தட்டுகளின் நகர்வால் வற்றிய கடல் நீர் மிகப்பெரிய உப்பு படிமங்களாக கார்பேத்தியன் மலைத்தொடர் பகுதியில் உருவாகின. இங்கு வாழ்ந்த கற்கால மனிதர்கள் உணவிற்காக இயல்பான உப்பு நீரை காய்ச்சி உப்பு தயாரித்துள்ளனர். நீர்நிலைகள் வற்றத் தொடங்கியதும் 11 மற்றும்12 ஆம் நூற்றாண்டுகளில் ஆழமான கிணறுகளை நிலத்தைத்தோண்டி அமைக்கத் தொடங்கினர்.
போலந்து பேரரசர் காசிமிர் (Casimir III) ஆட்சி செய்த 14ஆம் நூற்றாண்டுகளில் அரசாங்கத்தின் முக்கிய சொத்தாக இது மாறத்தொடங்கியது. மேலும் உப்பு சுரங்கத்தில் இருந்து அரசு கருவூலத்திற்கு மூன்றில் ஒரு பங்கு வருவாய்அந்த காலகட்டத்திலேயே சென்று சேர்ந்தது.
இரண்டாம் உலகப்போரின் ரகசிய தொழிற்சாலை
ஆழமான இந்த நிலத்தடி சுரங்கம் ஜெர்மனி நாட்டு போர் விமானங்களின் பாகங்களை தயாரிக்கும் ரகசிய பட்டறையாக இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டது. இங்குள்ள சுரங்க தொழிலாளர் களுடன் பேசுவதற்கான அனுமதி கூட இல்லாத வகையில் அருகில் இருந்த செறிவு முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட போர்க் கைதிகள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.
நிலத்தடிக்கு அடியில் தேவாலயங்கள் மற்றும் கலைப் படைப்புகள்
உப்புச் சுரங்கத்தின் சிறப்பம்சமாக இங்குள்ள கலைப்படைப்புகள் உள்ளன. பல பிரமாண்டமான அரங்கங்களையும், தேவாலயங்களையும் உப்பைக் குடைந்து சுரங்கத் தொழிலாளர்களே உருவாக்கியுள்ளது அதிசயமாக பார்க்கப்படுகிறது.
புனித கிங்கா தேவாலயம் (Chapel of St Kinga)
67 ஆண்டுகால உழைப்பில் முழுவதும் உப்பினால் செதுக்கப்பட்ட புனித கிங்கா தேவாலயம் தரைமட்டத்திலிருந்து 101 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. மேலும் இங்கு முழுவதும் உப்பினால் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட விளக்குகள், பலிபீடங்கள், இயேசு கிறிஸ்துவின் `இறுதி இரவு உணவு` என்ற பெயரில் லியோனார்டோ டாவின்சி ஓவியத்தின் உப்புச் செதுக்கல் மற்றும் இரண்டாம் ஜான் பால் போப் அவர்களின் சிலை அனைத்தும் கலைநயம் மிக்க படைப்புகளாக காட்சி தருகின்றன.
புகழ் பெற்ற சுற்றுலா பயணிகள்
யுனெஸ்கோ 1978 ஆம் ஆண்டிலேயே உலக பாரம்பரிய சின்னமாக இந்த உப்புச் சுரங்கத்தை அறிவித்தது. வருடம் தோறும் சுமார் 12 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
அவர்களில் மிகவும் புகழ் பெற்றவர்களாக நிக்கோலஸ் கோபர் நிகஸ் என்ற புகழ்பெற்ற வானியலாளர்,கவிஞர் கோத்தே, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் போன்ற பலரும் இங்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்றும் தொடரும் பயன்பாடு மற்றும் நவீன வசதிகள்
1.35 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான உப்பு சுரங்கத்தில் தற்போதும் சுவாச பிரச்னை உள்ளவர் களுக்காக தரைக்கு அடியில் 450 அடி ஆழத்தில் சிறப்பு உப்பு மருத்துவ மையம் இயங்கி வருகிறது. 36 பேர் ஒரே சமயத்தில் செல்லக்கூடிய லிப்டின் வழியாக சுற்றுலாப் பயணிகள் இறங்கி சுரங்கத்தை அடைகின்றனர்.
பங்கி ஜம்பிங் (Bungee jump) மற்றும் சூடான காற்று பலூன் சவாரிகள் போன்றவை 120 அடி உயரமுள்ள ஒரு நிலத்தடி அரங்கில் தற்போதும் நடத்தப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழமான வரலாற்றுப் பதிவின் மூலம் மனிதனின் வியத்தகு உழைப்பு, பண்டைய பொறியியல் நுட்பங்கள் மற்றும் இயற்கை அளித்த உப்பின் மருத்துவப் பயன்பாடுகளைப் புரிந்து கொண்டு, உங்கள் பயண அறிவையும் வரலாற்றுப் பார்வையையும் புதிய உயரத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியும்.