

சிறிது காலம் மலையாள தேசமான கேரளாவில் இருந்தபோது இரண்டு ஆச்சரியமான விஷயங்களை காண, உணர நேர்ந்தது. மலையாளிகள், ஒட்டு மொத்த பேரும், முஸ்லிம் மற்றும் கிருத்துவ சகோதர்கள் உட்பட, இரண்டு விஷயங்களை சமத்துவமாக பார்க்கிறார்கள். கடவுளையும் பண்டிகைகளையும்.
சராசரி கேரள மக்கள், எல்லா மதத்தினரும், சபரி மலைக்கு செல்வத்தையும். ஓணம் பண்டிகையை அனைத்து தரப்பினரும் ஏற்று வழிபட்டு கொண்டாடி மகிழ்கிறார்கள். சபரி மலைக்கு செல்கையில் வாபர் சன்னிதிக்கு செல்வத்தையும், கிறித்துவ மதத்தை சேர்ந்த யேசுதாஸ் அவர்கள் சபரிமலை ஐயப்பனை பாடி மகிழ்ந்ததும் எல்லோரும் அறிந்ததே. அவர் பாடிய ஹரிவராசனம் தான் சபரிமலையில் தினந்தோறும் ஒலிக்கும் வழிபாட்டு பாடல்.
ஓணம் பண்டிகையின் போது என்னை அழைத்து ச(ந்)த்தியா விருந்து கொடுத்தவர்கள் ஒரு முகமதிய குடும்பத்தார். அன்பாகவும் சுவையாகவும் பரிமாறப்பட்ட உணவுகளை மனமும், வயிறும் நிறைந்துபடி உண்டு மகிழ்ந்தேன்.
அப்போது எனக்கு எழுந்த ஏக்கம் தான் இந்த தமிழருக்கான பண்டிகையாக நாம் ஏன் பொங்கலை கொண்டாடக்கூடாது என்பது? அரசியல் காரணங்களுக்காக சமத்துவ பொங்கல் கொண்டாடும் போக்கை விட, அனைத்து மதத்தினரும் தமிழர் என்ற உணர்வோடு இந்த பண்டிகையை கொண்டாடினால் எவ்வளவு பெருமை சேர்க்கும் நிகழ்வாக இருக்கும்?
விவாசியிகளின் அறுவடை திருநாள் தான் பொங்கல். அவர்களது உழைப்பை கொண்டாடும் அற்புதமான வழிபாடு தான் இந்த பண்டிகையின் நோக்கம். உண்மையாக சொல்வதென்றால் எந்த கடவுளின் பேரிலோ உருவத்தை வைத்தோ இதனை யாரும் கொண்டாடுவதில்லை.
இயற்கையை, சூரியனை வழிபட்டு மகிழும் திருநாள் தான் இது. இயற்கையை, உழைப்பை அங்கீகரிக்கும், கொண்டாடி மகிழும் போது பிற வேற்றுமைகள் தலை தூக்க காரணம் ஏதுமில்லை!
பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகையும், பழையன கழித்தல் என்ற பொதுப்படையான நோக்கத்தில் உண்டானது தான். பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடுவதும், நமக்காக உழைத்த மாடுகளை வணங்கி அழகுபடுத்தி பார்க்கும் நிகழ்வு தான்.
அதற்கு அடுத்த நாளும் கணு என்றோ காணும் பொங்கல் என்றோ அழைப்பதும் உயர்ந்த நோக்கமும் பாகுபாடுமற்ற பண்டிகைதான். கணு என்பது உடன் பிறந்த அண்ணன், தம்பி மார்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் நாள். காணும் பொங்கல் என்று எடுத்துக் கொண்டால் வீட்டின் பெரியவர்களை, மூத்தோரை சென்று, கண்டு, வணங்கி அவர்களுடன் இருந்து ஆசி பெற்று மகிழும் திருநாளே ஆகும்.
சமீபத்தில் தான் அது கடற்கரைக்கும், திரை அரங்குக்கு, பொழுது போக்கும் இடங்களுக்கும் செல்லும் நாளாக மாறிவிட்டது. மனக்குப்பையை நீக்கி பெரியோரை மதிக்கச் சொன்னால் கடற்கரை எங்கும் குப்பைகளை வீசி விட்டு வரும் தூய்மை கேடான நிகழ்வாக மாற்றி விட்டோம் நாம்.
சமூக அமைப்புகளும், மக்களும், பெரியோர்களும் நம்மை வழிநடத்துபவர்களும் இவற்றை கருத்தில் கொண்டு தமிழர்கள் அனைவரும் மத, ஜாதி வேறு பாடுன்றி கொண்டாடி மகிழும் பண்டிகையாக, விழாவாக, கொண்டாடட்டமாக பொங்கல் விழாவை மாற்ற வேண்டும்!