

பெரும்பாலும், கோயில்கள் என்றாலே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ஆனால், அவற்றிற்குப் பின்னால் அறிவியலும் கலையும் ஒளிந்திருக்கின்றன. அங்கே செதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிலையிலும் ஆன்மீகக் கதையோடு சேர்ந்து, சில அறிவியல் உண்மைகள் மற்றும் கலை நுட்பங்கள் சார்ந்த கதையும் இருக்கிறது.
அதேபோல, சில கோயில்களில் இருக்கும் கல் தூண்களைத் தட்டினால், அவை இன்னிசையை எழுப்புவதைக் கேள்விப்பட்டிருப்போம்.
சாதாரண கல்லால் ஆன இந்தத் தூண்கள் எப்படி சப்தஸ்வரங்களை எழுப்புகின்றன? இதற்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் என்ன? வாருங்கள், தெரிந்து கொள்வோம்.
இதுபோன்ற இசைத்த தூண்கள் தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் ஆகிய இடங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக, ஹம்பியில் உள்ள விட்டலா கோயிலிலும் இத்தகைய தூண்களைக் காணலாம்.
கல்லுக்குள் இசை பிறப்பது எப்படி?
சாதாரணக் கற்களைக் கொண்டு இசைத் தூண்களை உருவாக்கிவிட முடியாது. இதற்குத் தமிழர்கள் கையாண்ட நுட்பம் மிகவும் நுணுக்கமானது. முதலில், அதற்கான சரியான கல்லைத் தேர்வு செய்ய வேண்டும்.
புவியியல் ரீதியாகக் கற்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஆண் கல், பெண் கல் மற்றும் அலி கல். ஆண் கலைத் தட்டும்போது கணீரென்ற ஓசை எழுப்பும். இவை சிலைகள் மற்றும் இசைத் தூண்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டன. பெண் கல் மென்மையான ஓசை தரும். இவை ஆபரணங்கள் மற்றும் மென்மையான சிற்பங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டன. அலி கற்கள் எந்த ஓசையையும் தராது. இவை கட்டிடங்களின் தரைதளத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.
இசைத் தூண்கள் அனைத்தும் ஒரே கல்லால் ஆனவை. அதாவது ஒரு பெரிய பாறையிலிருந்து இவை செதுக்கப்படுகின்றன. இத்தூண்களை உற்று நோக்கினால், இடத்திற்கு இடம் அதன் தடிமன் மாறுபடுவதைக் காணலாம்.
இயற்பியல் விதிகளின்படி, ஒரு பொருளின் நீளம் மற்றும் தடிமனை மாற்றும்போது அதன் அதிர்வெண் மாறும். இதனை உணர்ந்த அன்றைய சிற்பிகள், தூண்களைச் செதுக்கும்போதே அதன் உட்புறம் மற்றும் வெளிப்புற அளவுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் செதுக்கினர். இதனால், ஒரு தூணைத் தட்டும்போது 'ச' என்ற ஓசையும், மற்றொன்றைத் தட்டும்போது 'ரி' என்ற ஓசையும் எழுகிறது.
அதேசமயம், அந்த இசைத் தூண்களை தட்டும்போது அவை குறிப்பிட்ட வினாடிகளுக்கு நீண்டு ஒலிப்பதை கேட்க முடிகிறது. இதற்கு காரணம், இந்தத் தூண்களின் உட்புறம் சில இடங்களில் துளையிடப்பட்டோ அல்லது மெல்லியதாகவோ செதுக்கப்பட்டிருக்கலாம். இது ஒலியை எதிரொலிக்கச் செய்து, நீண்ட நேரம் அந்த இசை காற்றில் மிதக்க உதவிபுரியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, இந்த இசைத் தூண்கள் 'ஒலி அதிர்வு' தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது, ஒரு பெரிய தூணைச் சுற்றி மெல்லிய பல சிறிய தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். நாம் ஒரு சிறிய தூணைத் தட்டும்போது, அந்தத் தூண் அதிர்வுக்குள்ளாகி குறிப்பிட்ட ராகத்தை எழுப்புகிறது.
இன்றைய காலத்தில், நவீன கருவிகளைப் பயன்படுத்தி ஒலியை அளவிடுகிறோம். ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த மின்சாரக் கருவியும், அறிவியல் தொழில்நுட்பமும் இன்றி, வெறும் உளியையும் சுத்தியலையும் கொண்டு கல்லுக்குள் சுருதியைச் சேர்த்த தமிழர்களின் அறிவு வியக்க வைக்கிறது அல்லவா?