
தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக்கதைகள், சரித்திர கதைகள் ஆகியவை அதிகம் நிகழ்த்தப்படும். அதுவும் தமிழகத்தில் குறிப்பாக அருணகிரிநாதர் வரலாறு, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம், சிறுத்தொண்ட நாயனார் கதை போன்றவை நிகழ்த்தப்படுவதுண்டு.
எந்த கதையை எடுத்துக்கொண்டாலும் இடையில் கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. இதற்கு காரணம் திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டியதாக புராணக்கதை கூறுகிறது.
பொம்மலாட்டம் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது. பாரம்பரிய கலையான இது நவீன பொழுதுபோக்கு வடிவங்களின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டது. ஆனால் இதை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களால் அழைக்கப்படும் இக்கலை மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் சுவையான கலை நிகழ்வாகும். இதில் மொத்தமாக 9 கலைஞர்கள் உண்டு. அதில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்கவும், மற்ற நான்கு கலைஞர்கள் இசைக்கலைஞர்களாகவும் அதாவது ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், கைத்தாளக் கருவி, முகவீணை ஆகிய இசைக்கருவிகளை இசைப்பதற்கும், அத்துடன் ஒருவர் உதவியாளராகவும் இருப்பார்கள். மூன்று புறங்களும் அடைக்கப்பட்ட அரங்கில் மரபு ரீதியாக இக்கலை நிகழ்த்தப்படும்.
பொம்மலாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பொம்மைகள் கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. பொம்மைகளின் உருவங்களை தலை, கால், கை என தனித்தனியாக இயங்கும் வண்ணம் இணைத்திருப்பார்கள். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கருப்புத் திரையின் மேல் கட்டப்பட்டு, பொம்மலாட்டக் கலைஞர்கள் திரைக்குப்பின் நின்று கொண்டு பொம்மைகளை இயக்குவார்கள்.
இதில் இரண்டு வகைகள் உள்ளன. தோல் பொம்மலாட்டம் மற்றும் மர பொம்மலாட்டம். தோலால் செய்யப்பட்ட பொம்மைகளை பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பொம்மலாட்டத்தில் பொம்மைகள் ஒளிபுகும் தன்மை கொண்டவையாக இருப்பதால் திரைக்குப் பின்பிருந்து இயக்கப்படும் பொழுது அவை ஒளியூட்டப்பட்டு பார்ப்பதற்கு அழகாக தோன்றும்.
இது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பெயர்களில் நிகழ்த்தப்படுகிறது. ஆந்திராவில் 'கொய்யா பொம்மலாட்டா' என்றும், கர்நாடகத்தில் 'சூத்ரதா கொம்பயேட்டா' என்றும், ஒரிசாவில் 'கோபலீலா' என்றும், மேற்கு வங்கத்தில் 'சுத்தோர் புதூல்' என்றும், ராஜஸ்தானில் 'காத்புட்லி' என்றும், மகாராஷ்டிராவில்'காலாசூத்ரி பகுல்யா' என்றும் அழைக்கப்படுகிறது.
பொம்மலாட்டம் என்பது ஒரு கலை மட்டுமல்லாமல், ஒரு கலாச்சார அடையாளமாகும் விளங்குகிறது. ஆனால் இன்றைய கால குழந்தைகளுக்கு பொம்மலாட்ட கலையை பற்றி அதிகம் தெரிவதில்லை. சினிமா மற்றும் தொலைக்காட்சியின் காரணமாக அழிவின் விளிம்பில் இருக்கும் பொம்மலாட்டம் எங்கு நடைபெற்றாலும் நம் குழந்தைகளை அழைத்துச் சென்று காட்டி அந்த கலையை உயிர்ப்பிக்க வேண்டும்.