
கற்கால மக்கள், தங்களை வெப்பமாகவும், குளிரிலிருந்தும் பாதுகாக்க இலைகள், விலங்குகளின் தோல்கள் போன்றவற்றை ஆடைகளாக பயன்படுத்தினர். மனிதன் எப்போது ஆடை உடுத்த தொடங்கினான் என்பதை ஜெர்மனியில் காணப்படும் குகை கரடியின் வெட்டுண்ட பாதப்படிமங்கள் காட்டுகின்றன என்கிறார்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.
3 மில்லியன் வருடங்களுக்கு முன் கரடியின் தோல்களை ஆடைகளாக பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்கிறார்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள். கரடியின் தோல் வெப்பம் கடத்துதல் தன்மையாலும், எளிதாக பயன்படுத்த முடிந்ததாலும் மற்றவைகளை விட அது உகந்ததாக இருந்ததால் மனிதன் அதை பயன்படுத்தியதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மிருகங்களின் தோலை ஆடையாக ஏனோதானோ என்று உடுத்தி வந்த மனிதன் கொஞ்சம் நாகரீகமான முறையில் உடுத்தியது 'ஸ்கர்ட்' வடிவ அரைப் பாவாடை உடைதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகின் மிகப்பழமையான இரண்டாம் வகை ஆடைகள் என்றால், அது ஸ்கர்ட் வடிவ ஆடைகள் தான்.
கி.மு 3900 ஆண்டு கால கட்டத்தில் இது வழக்கத்தில் இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆண்களும், பெண்களும் பாகுபாடு இல்லாமல் உடுத்திய ஆடை இது தான். மெசபடோமியா, எகிப்து, கிரேக்கம் போன்ற நாகரிகங்கள் தோன்றியபோது, ஆடைகள் மேலும் மேம்பட்டன. பருத்தி, கம்பளி போன்ற பொருட்களால் ஆடைகள் தயாரிக்கப்பட்டன.
எகிப்தியர்கள் ஆடை வடிவமைப்பில் முன்னோடிகளாக திகழ்ந்து உள்ளனர். எகிப்தியர்கள் நாணல், பாப்பிரஸ், பனை போன்ற செடிகளிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை கண்டுபிடித்தனர். உலகில் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட ஆடை எகிப்தில் உள்ள தார்கன் என்று இடத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாயந்த இந்த ஆடைக்கு 'தார்கன் ஆடை' என்று பெயர். கடந்த 2015ம் ஆண்டு கார்பன் டேட்டிங் செய்ததில் இதன் வயது கிமு 3482-3102 வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
நிலநடுக்க கோடுகள் பகுதியில் விளைந்த ஒரு செடி தான் பருத்தி செடி. முழுக்க முழுக்க செல்லுலோஸால் ஆனது. பருத்தி நாரிழை நூலாக நூற்கப்பட்டு அதன் திரியில் இருந்து மென்மையான துணி செய்யப்பட்டது.
கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பே பருத்தி ஆடை துண்டுகளின் படிமம் சிந்துசமவெளி நாகரீகத்திலும், ஆடைகளின் எச்சங்கள் கிமு 6000 ஆண்டுகளுக்கு முன்பே 'பெரு' நாட்டிலும் கிடைத்துள்ளன. அன்றிலிருந்து இன்று வரை இயற்கை நாரிழை ஆடைகள் என்றால் அது பருத்தி ஆடைகள் தான்.
தமிழர்களின் தொன்மையை பறை சாற்றி வரும் 'கீழடி' கிமு 3 முதல் 6 வரையிலான நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இதே கால கட்டத்தில் தான் கங்கை சிந்துசமவெளி நாகரீகமும் தோன்றியது என்கிறார்கள். கீழடி புதைபொருள் ஆராய்ச்சியில் அங்கு பருத்தி விளைந்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அன்றைய காலகட்டத்திலேயே பருத்தி துணிகளை கைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மூலம் உருவாக்கி ஆடைகளாக உடுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரங்களாக கீழடி அகழ்வாராய்ச்சியில் நெசவுத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் தக்களி, தூரிகை மற்றும் கைத்தறியில் தொங்க விடப்படும் கருங்கல் போன்றவைகளும் கிடைத்துள்ளன.
துருக்கியிலுள்ள கட்ல்ஹோக் உலகின் மிகப் பழமையான மனித நாகரிகங்களில் ஒன்று. கிமு 7100 முதல் கிமு 5700 வரை மக்கள் வாழ்ந்த நாகரிகம் அது. கட்ல்ஹோக் மக்கள் ஆளி (Flax) செடிகளை விளைவித்து அதிலிருந்து ஆடைக்கான மூலப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர் என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். அது தான் நாம் இன்று பயன்படுத்தும் கைத்தறி ஆடையான லினன் (Linen).
சீன வரலாற்றின் படி, கிமு 27-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசி ஹிஸ் லி ஷி தான் பட்டு நூலை (silk) நெசவு நாராக கண்டுபிடித்த முதல் நபர். இதன் பின்னர் தான், பட்டாடைகள் ஆசியா முழுவதும் உள்ள பிற பகுதிகளை சென்றடையத் தொடங்கின. பட்டு நூல்கள் மிக வலுவாகவும், பளப்பாகவும், விலையுயர்ந்தாகவும் இருந்தது. இதை அறிந்த சீனர்கள் பட்டுடன் செடி, கொடிகளிலிருந்து இயற்கை சாயத்தை கண்டுபிடித்து பல வண்ணங்களான பட்டு ஆடைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் பட்டும், சாயமும் உலகம் முழுதும் அறியப்பட்டது.
கைத்தறி நெசவு என்பது பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒரு பாரம்பரியத் தொழிலாகும். இது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அம்சம். கைத்தறியில் செய்யப்படும் துணிகள் இயந்திரங்களில் செய்யப்படும் துணிகளை விட தனித்துவமானவை. ஒவ்வொரு துணியும் கைவினையால் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருக்கும்.
குறைந்த ஆற்றலை பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு தொழில். இது கழிவுகளை உருவாக்குவதில்லை. மேலும், இயற்கையான இழைகளால் செய்யப்படுகின்றன. இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பை செய்கிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
கைத்தறி ஆடைகளுக்கு எப்போதும் மவுசு குறையாது. பாரம்பரியமிக்க கைத்தறி ஆடைகள், நவீன வடிவமைப்புகளுடன் இன்னும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக, சுங்குடி சேலைகள், ஆரணி பட்டுப் புடவைகள் போன்ற குறிப்பிட்ட கைத்தறிப் பொருட்கள் இன்னும் மவுசு குறையாமல் இருக்கின்றன.