மங்கலகரத் தோற்றம் தரும் தரமான குங்குமத்தை வீட்டிலேயே தயாரிக்கலாம்!

Kungumam
Kungumam
Published on

சுமங்கலிப் பெண்கள் தங்களது நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்வது இந்து கலாசாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆன்மிக நெறிகள் மட்டுமின்றி, பெண்களின் அழகியலிலும் குங்குமத்தில் அடங்கியுள்ளது. திருக்கோயில்களில் கொடுக்கப்படும் குங்குமத்தை ஆண்களும் இட்டுக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. பாலின பேதம் இல்லாமல் குங்குமம் அனைவருக்கும் நல்ல பலன்களைத் தருகிறது எனலாம். அழகு, ஆன்மிகம், அறிவியல் என குங்குமத்தின் சிறப்புகள் ஏராளம்.

தினமும் புருவத்தின் இடையில் குங்குமம் வைத்துக்கொள்வதால் மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஐஸ்வர்யமும் பெறலாம். காலையில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் நேரத்தில் நெற்றியில் குங்குமத்தை வைத்து பயிற்சி செய்தால் சூரியனின் சக்தி முழுமையாகக் கிடைத்து உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், நெற்றியில் வைக்கும் குங்குமம் உடலின் உஷ்ண நிலையை சரிசமமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

முக்கியமாக, நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசுவதும், நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதும் கட்டாயமாக இருந்தது. இவை முகப்பொலிவை மட்டும் தரவில்லை, கிருமி நாசினியாக சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்றியது. ஆனால், இன்றோ நாகரிகம் பெருகி விட்ட சூழலில், அடியோடு மறந்த விஷயங்களில் மஞ்சள் குங்குமமும் அடங்கும்.

முகத்திற்கு கெமிக்கல் அடங்கிய க்ரீம்களைத் தடவுவதாலும், ஸ்டிக்கர் பொட்டுகள் வைப்பதாலும் அலர்ஜி ஏற்பட்டு ஒவ்வாமை உண்டாவதும், அதற்காக மருத்துவமனைகளை நாடி பெரும் பணம் செலவு செய்வதும் வழக்கமாகிவிட்டது.

பலருக்கு ஆசையிருந்தும் நெற்றியில் குங்குமம் வைப்பதை தவிர்ப்பதற்குக் காரணம், அது தயாரிக்கப்படுவதில் உள்ள தரமின்மை மற்றும் கலப்படம்தான். உடலுக்கு எந்தவித தொல்லையும் தராத, தரமான குங்குமத்தை நாம் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். இனி, தரமான குங்குமத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

குண்டு மஞ்சள் – 100 கிராம், வெங்காரம் – 10 கிராம், படிகாரம் – 10 கிராம், நல்லெண்ணெய் – தேவையான அளவு, எலுமிச்சை சாறு – அரை மூடி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

(திருஷ்டிக்கு படிகாரத்தைப் பயன்படுத்துவார்கள். வெங்காரம் என்பது கற்கண்டு வடிவத்தில், வெண்மை நிறத்துடன் இருக்கும். இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.)

இதையும் படியுங்கள்:
உலகுக்கு உப்பு அறிமுகமான கதை தெரியுமா?
Kungumam

இனி, தரமான குங்குமத்தை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். வெங்காரம், படிகாரம் இவை இரண்டையும் உடைத்து மிக்ஸியில் தனித்தனியாக போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். மீண்டும் மிக்ஸியில் இரண்டு பொடிகளையும் ஒன்றாக போட்டு கலந்து அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து அரைக்கும்போது அதன் நிறம் பழுப்பு நிறமாகி கொஞ்சம் ஈரப்பசையுடன் இருக்கும். பிறகு குண்டு மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து மிக்ஸியில் போட்டு நைசாகப் பொடித்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து அரை மூடி சாறு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சை சாறுடன் பொடித்து வைத்துள்ள வெங்காரம், படிகாரம் கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் மஞ்சள் பொடியை கலந்து ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் தட்டில் வைத்து பரப்பி உலர விடவும்.

நன்கு உலர்ந்த பிறகு அது செங்கல் தூள் நிறத்தில் இருக்கும். இதில் நல்லெண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து பிசறி விடவும். அப்போதுதான் நல்ல அடர் சிவப்பு நிறத்தில் குங்குமம் கிடைக்கும். இப்போது மஞ்சளின் வாசனையுடன் ஒரிஜினல் குங்குமம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com