

பொதுவாக விலங்குகளில் அனைவரும் விரும்பும் ஒரு உயிரினம் யானை. அதன் பணிவு, அமைதி மற்றும் மதிநுட்பம் ஆகியவை களால் மனிதர்கள் அவற்றின் பலத்தை பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
சுற்றுலாப் பிரியர்கள் சுற்றுலாத்தலங்களின் இயற்கையை கண்டு களிக்க யானைகள் மீதான சவாரி உள்ளது. ஆன்மீக ரீதியாகவும் முதல் கடவுள் எனப்படும் விநாயகரை யானை உருவத்தில் படைத்து ஆலயங்களிலும் யானைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.
எனினும் சாதுவான யானை சில சமயங்களில் மதம் பிடித்து விட்டால் தன்னை வளர்த்த பாகனையும் தூக்கி வீசுவது போன்ற பல விபரீதங்களையும் பார்த்து வருகிறோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் கேரளாவில் இயந்திர யானை அறிமுகப் படுத்தப்பட்டு தற்போது பல இடங்களில் வலம் வருவது ஆச்சரியம் தருகிறது.
திருச்சூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் சார்பில் அதிரப்பள்ளியில் உள்ள தும்பூர்முழி தோட்டத்தில் (Thumboormuzhi Botanical Garden) இயந்திர யானையில் (robotic elephant) அமர்ந்து இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ யானை உண்மையான யானையின் அசைவுகளையும், நடையையும் துல்லியமாகப் பின்பற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர யானையின் மீது அமர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
“இயந்திர யானை” எப்படி, எப்போது யாரால் உருவானது? இப்போது எங்கெல்லாம் இது பயன்பாட்டில் உள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கேரளாவில் பாரம்பரிய கோவில் விழாக்களின் ஊர்வலங்களில் அதிகம் யானைகள் பங்கு பெறும். சமீபகாலமாக அந்த ஊர்வலத்தில் யானைகள் சில நேரங்களில் பதற்றமடைந்து விபத்துகள் நடந்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. யானைகளின் நலன் (Animal Welfare) குறித்த கவலைகளுடன் பொதுமக்களின் பாதுகாப்பு பொருட்டு Thrissur, Kerala மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் (cruelty-free) மாற்று ஏற்பாடாக உயிருள்ள யானைகளைப் பயன்படுத்தாமல், அவற்றுக்கு பதிலாக இயந்திர (Robotic) யானைகள் பயன்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டது.
இந்த கல்லெட்டும்பாறை அருகில் உள்ள Irinjadappilly Sree Krishna Temple கோவிலில்தான் முதலில் (2023 பிப்ரவரி) யானைக்கு பதிலாக முழு அளவிலான இயந்திர யானை (“Irinjadappilly Raman”) தெய்வச் சேவைகளுக்கும் திருவிழாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.
தொடர்ந்து திருச்சூரில் உள்ள சில கோவில்களில் இந்த இயந்திர யானைகள் சமீப ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக Thrissur Pooram போன்ற பெரிய விழாக்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இது உள்ளது.
இந்த இயந்திர யானையின் ஒருமுறை கட்டுமானச் செலவு ~ ₹5 லட்சம் என்று சொல்லப்படுகிறது (2023 இல்). இது இரும்பு சட்டங்கள் மற்றும் மிருதுவான ரப்பர் பொருட்கள் (iron frame + rubber coating) உடனும் மற்றும் பல செயல்பாடுகளுக்காக motors உடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பல விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பால் வளர்ந்தது எனலாம். ஆனால் கேரளாவில் கோவில்களில் பயன்படுத்தப்படும் உயிருள்ள யானைகளுக்கு மாற்றாக இயந்திர யானை உருவாக்கிய முக்கிய நிறுவனமாக Four Paws ஆஸ்திரியா அடிப்படையிலான விலங்கு நல அமைப்பு ஆகும் என்று கூறப்படுகிறது. 2023 காலக்கட்டத்தில் இந்நிறுவனம் கேரளாவில் உள்ள கோவில்களுக்கு இயந்திர யானைகளை வழங்க ஆரம்பித்தது.
நிஜ யானையைப் போலவே வடிவமைப்பு. தும்பிக்கை, காதுகள் இயங்கும். மேல் பகுதியில் நெற்றிப்பட்டம் (Nettipattam) அலங்காரம், மயில் இறகுகள் போன்ற விழா அலங்காரம். ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் இவைகளைப் பார்த்து மகிழ்கின்றனர் கேரள மக்கள். சமீபத்தகவலின்படி திருச்சூர் மாவட்டத்தில் குறைந்தது 8 கோவில்களில் இயந்திர யானைகள் (robotic elephants) கொடுத்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அறிவியல் டெக்னாலஜியில் மக்கள் உயிருக்கு ஆபத்து தராத மற்றும் விலங்குகளின் நலன் காக்கும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கது.