மதுரையைச் சுற்றி எண்ணற்ற சமணக் குன்றுகளும், சமணப் படுகைகளும், தமிழ் கல்வெட்டுகளும் அமைந்து மதுரை நகரத்க்கு சிறப்பு செய்கின்றன. மதுரையின் கிழக்கில் யானைமலை, மாங்குளம், கீழவளவு என்னும் சமணர் படுகைகளும், மேற்கில் கொங்கர், புளியங்குளம், முத்துப்பட்டி என சமணர் படுகைகள் காணப்படுகின்றன. தெற்கில் கீழக்குயில்குடியின் சமணர் மலையும், மேற்கில் அழகர்கோயில் பகுதி சமணர் படுகைகளும் என மதுரையில் சமணர்களின் வரலாற்றை இன்றும் தெரிந்து கொள்ள உதவுகின்றன.
சமணர்மலை மதுரையிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை - தேனி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டைக்கு தெற்கே அமைந்துள்ளது. சமணர் மலையின் அடிவாரத்தில் கருப்புசாமி அய்யனாருக்குக் கோயில் உள்ளது. அதன் வாயிலில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது அந்தப் படையை எதிர்த்துப் போரிட்டு உயிர் துறந்த கள்ளர் குல தளபதிகளான வீரத்தேவர், கழுவதேவர் இருவருக்கும் நடுக்கல் எடுத்து வழிபடும் இடம் உள்ளது.
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை காணப்படுகிறது. இந்தக் குகையில் புடைப்புச் சிற்பமாக மகாவீரர் காது நீண்ட உருவத்துடன் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் ‘செட்டிப்புடவு’ என அழைக்கப்படுகிறது.
இந்தச் சிற்பத்தில் மகாவீரர் இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்து வர, அரச மரத்தின் கீழ் மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதற்குக் கீழே இந்த சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.
செட்டிபுடவு குகையின் உள்ளே ஐந்து சிற்பங்களைக் காணலாம். குணசேனத்தேவர் மற்றும் அவரின் மாணாக்கர்கள் செதுக்கியது என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சமணர் குன்றின் மேல் இயற்கையாக அமைந்த வற்றாத சுனை ஒன்று உள்ளது. இப்பகுதியை பேச்சிப்பள்ளம் என்றும் இங்கு 8 தீர்த்தங்கரர்கள் சிற்பங்களும், வட்டெழுத்து கல்வெட்டுகளாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன.
பேச்சிப்பள்ளத்திற்கு மேலே கி.பி. 10ம் நூற்றாண்டில் செயல்பட்ட மாதேவி பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளியின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. இதை பாண்டிய மன்னன் தனது மனைவி வானவன் மாதேவியின் பெயரால் கட்டிக் கொடுத்துள்ளார். இதற்கும் மேலே செல்ல தீபத்தூண் ஒன்றும் அதற்கு கீழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.