Swami Pushkarini
Swami Pushkarini

ஆன்மிகக் கதை: சித்தத்தை சீராக்கும் திருப்பதி சுவாமி புஷ்கரணி தீர்த்தம்!

Published on

திருப்பதி மலைக்குச் செல்பவர்கள் அங்குள்ள தீர்த்தங்களையும் அறிந்து சென்றால் பல நன்மைகளைப் பெறலாம். இந்த மலையில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவை அனைத்துமே மகிமை பொருந்தியவை என்றாலும் அவற்றில், ‘சுவாமி புஷ்கரணி தீர்த்தம்’ மிகவும் முக்கியமானது. இதன் நீர் அமுதம் போல் இனிக்கும். இந்த நீரைத் தொட்டாலே எல்லா பாவங்களும் நம்மை விட்டு அகலும் என்பது ஐதீகம்.

சந்திர வம்சத்தை சேர்ந்த அரசன் நந்தன் என்பவனுக்கு தர்மகுப்தன் என்னும் மகன்  இருந்தான். அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அவனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு நந்தன் ஆன்மிக வழி நாடி தவம் செய்யப்போனார்.

ஒரு நாள்  வேட்டையாடச் சென்ற தர்மகுப்தன் நெடுநேர வேட்டைக்குப் பின்னர் மிகவும் களைப்படைந்து விட்டான். இருளும் சூழ்ந்ததால் விடியும் வரை ஓய்வெடுக்க அவன் ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்தான் அச்சமயம், கரடி ஒன்றை சிங்கம் மிக வேகமாகத் துரத்தி வந்தது. பயத்தில் கரடியும் தர்மகுப்தன் ஏறியிருந்த மரத்தில் ஏறியது. இதைப் பார்த்த மன்னன் மிகவும் பயந்தான். அப்போது கரடி, "மன்னவா பயம் வேண்டாம், என்னை நம்பு" என்றதுடன், "நீ மிகவும் களைப்பாக உள்ளாய். நடுநிசி வரை நீ என் தொடையில் தூங்கு. பிறகு நான் உன் தொடையில் தலை வைத்து தூங்குகிறேன். விடிந்ததும் சிங்கம் சென்றுவிடும்" என்று சொல்ல, அவனும் ஒப்புக்கொண்டான்.

தர்மகுப்தன் கரடியின் தொடையில் தலை வைத்து அசந்து தூங்கினான். அவன் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சிங்கம் கரடியிடம், "மன்னனை கீழே தள்ளிவிடு. அவனைக் காப்பாற்றுவதால் உனக்கு என்ன பயன்? நான் அவனை சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்" என்றது.

அதற்கு நேர்மையான அந்தக் கரடி சம்மதிக்கவில்லை. இதற்குள் தர்மகுப்தனும்  தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டான். அவனுடைய தொடையில் தலை வைத்து கரடி தூங்கியது. அப்போதும் சிங்கம் அவனிடம், "அரசனே, கரடியை கீழே தள்ளி விடு. அதனால் உனக்கு ஆபத்துதான் நேரும். நான் அதை புசித்து விட்டு உன்னைக் காப்பாற்றுகிறேன்" என்றது.

இதையும் படியுங்கள்:
பட்டர் மற்றும் சீஸ் வகைகள் அல்ட்ரா ப்ராஸஸ்ட் உணவுகளா?
Swami Pushkarini

அரசனும் அதை நம்பி கரடியை கீழே தள்ளிவிட்டான். ஆனால், கடவுளின் கருணையால் அந்தக் கரடி மரக்கிளைகளில் மாட்டிக் கொண்டது. அப்போது கரடி தர்மகுப்தனைப்  பார்த்து, "மன்னவா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாயே. உன் போன்றவனை பூதேவியும் காப்பாற்ற மாட்டாள். நான் உண்மையில் கரடி அல்ல. பிராமணக் குலத்தில் பிறந்த ஒரு அந்தணன். இப்போது இந்த உருவத்தில் அலைந்து கொண்டிருக்கிறேன். நம்பிக்கை துரோகம் செய்த காரணத்தினால் நீ ஒரு பைத்தியம் ஆவாய்" என்று சபித்தது. தர்மகுப்தன் அப்போதிருந்து தனது நினைவிழந்து பைத்தியக்காரனாக நாடு நாடாக அலைந்து கொண்டிருந்தான்.

மந்திரிகள் அவனைப் பற்றி தவம் புரிந்து கொண்டிருந்த அரசர் நந்தனுக்கு தெரிவித்தனர். அதைக்கேட்டு மிகவும் கவலை அடைந்த நந்தன், ‘ஜெய் மினி’ என்னும் மாமுனியை யோசனை கூறும்படி வேண்டிக் கொண்டான். அம்மாமுனி தனது சக்தியால் நடந்தவற்றை அறிந்து, "உனது பிள்ளை வேங்கடாஜலத்தில் இருக்கும் சுவாமி புஷ்கரணியில் நீராடினால் அவனுக்கு பைத்தியம் தீரும்" எனக் கூறினார். அதற்கிணங்கிய நந்தன் தனது மகனை அழைத்துக்கொண்டு திருவேங்கடம் வந்தார். சுவாமி புஷ்கரணியில் தர்மகுப்தன் நீராடியதும் அவனுடைய பைத்தியம் குணமானது. அன்று முதல் தர்மகுப்தன் திருமலை சுவாமிக்கு பக்தியோடு சேவை புரிந்து பலவிதமான காணிக்கைகளைச் செலுத்தினான்.

இதிலிருந்து சுவாமி புஷ்கரணியில் நீராடினால் சித்தம் சீராகி எல்லா பாவமும் நம்மை விட்டு அகலும். நீண்ட ஆயுளும் செல்வமும் கிட்டும் என்பது உறுதி.

logo
Kalki Online
kalkionline.com