நெட்டிச் சிற்பக் கலை!...
நெட்டிச் சிற்பக் கலை!...

நெருக்கடியில் நெட்டிச் சிற்பக் கலை!

Published on

புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கலைகளில் ஒன்றுதான், ‘தஞ்சாவூர் நெட்டிச் சிற்பக் கலை.’ இது ‘தஞ்சாவூர் ஓவியங்கள்’, ‘தஞ்சாவூர் கலைத் தட்டுகள்’, ‘தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்’ போன்று, இந்தத் ‘தஞ்சாவூர் நெட்டிச் சிற்பங்களு’ம் அதன் பெருமைகளில் தனித்துவம் மிக்கதாகும். இந்த நெட்டிச் சிற்பக் கலைதான் இன்றைக்கு அதனை விலை கொடுத்து வாங்குவோர் மற்றும் அதனைப் போற்றுவோர் எவரும் இன்றி, கடுமையான வீழ்ச்சியின் நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.

இராஜராஜ சோழ மன்னன் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்த கை வேலைப்பாடு கலைகளில், நெட்டிச் சிற்பக் கலைக்கு எனத் தனித்த சிறப்பிடம் இருந்து வந்துள்ளது. இராஜராஜ சோழனின் அரண்மனை அரங்குகளிலும், அரசனின் தர்பார் மண்டபத்திலும் நெட்டிச் சிற்பக் கலை வேலைப்பாடுகள் இடம் பிடித்திருந்தன. அத்தகைய நெட்டிச் சிற்பக் கலை, இன்றைக்குக் கரைந்து காணாமல் போகின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இதன் மிச்சமிருக்கும் எஞ்சிய கலைஞர்களில் ஒருவர்தான், கும்பகோணத்தில் வசித்து வரும் கே.ஏ. சொக்கலிங்கம். அவருக்கு வயது எண்பது. அவரது பத்துப் பனிரெண்டு வயதுகளிலேயே கும்பகோணத்தில் நெட்டிச் சிற்பக் கலை கற்றுக்கொள்ள வந்து விட்டவர். எழுபது ஆண்டுகளாக இந்தச் சிற்பக் கலையினை எதன் பொருட்டும் கை விட்டு விடாது தொடரும் பந்தமாகக்கொண்டு வாழ்ந்து வருபவர். அவரது ‘பிரகாசம் நெட்டிச் சிற்பக் கலைக்கூடம்’ ஆனது  கும்பகோணம் மகாமகக் குளத்தருகே போஸ்ட் ஆபீஸ் சாலையில் ஒரு சந்தில் அமைந்துள்ளது. சொக்கலிங்கம் சொல்வதைக் கேட்போமா?

கே.ஏ. சொக்கலிங்கம்
கே.ஏ. சொக்கலிங்கம்
Q

நெட்டின்னா என்னங்க?

A

ஏரி, குளங்களில் வளருகின்ற நீர்த் தாவரம் நெட்டி. அது தண்ணீரை உறிஞ்சாது. அதன் தண்டுகள் தண்ணீரில் மிதக்கும் அளவுக்கு மிகவும் லேசானவை. நெட்டித் தண்டுகளை ஒரு லாரி முழுவதுமாக லோடு ஏற்றினாலும், அவைகளின் மொத்த எடையானது சுமார் ஐநூறு கிலோவுக்கு மேலே தாண்டாது. அவ்வளவு எடை குறைவானவைகள் நெட்டித் தண்டுகள். அந்தத் தண்டுகளை வெயிலில் உலர வைத்து, அதன் மேல் பட்டைகளச் சீவி விட்டால் அதனுள்ளே நெட்டி எனப்படும் வெண்ணிறத் தண்டுகள் நமக்குக் கிடைக்கும். அந்த நெட்டித் தண்டுகளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அவைகளை ஒரு வடிவமாக ஓட்ட வைத்துத் தான் நெட்டிக் கலைச் சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன.

Q

என்னென்ன சிற்பங்கள் உருவாக்குவீர்கள்?

A

எந்தவொரு கோயில் மாடல், நினைவுச் சின்ன மாடல் எது ஆர்டர் தந்தாலும் அதனை நெட்டிச் சிற்பமாக உருவாக்கித் தந்துவிடுவோம். தாஜ்மஹால், தஞ்சை பெரிய கோயில், கும்பகோணம் மகாமகக் குளம், திருவாரூர் ஆழித் தேர் என இன்னும் நிறைய வடிவங்களை நெட்டிச் சிற்பங்களாக உருவாக்கித் தந்துள்ளோம். கும்பகோணம் மகாமகக் குளத்தை ஐந்து இஞ்ச் நீளம் நான்கு இஞ்ச் அகலம் என மிக மிகச் சிறிய வடிவத்திலும், ஐந்து அடி நீளம் நான்கு அடி அகலம் என மிகப் பெரிய வடிவத்திலும் நெட்டிக் கலைச் சிற்பமாக உருவாக்கித் தந்துள்ளோம்.

இதையும் படியுங்கள்:
ஒருவரின் வாழ்க்கை மாறுவது எதனால்? யார் காரணம்?
நெட்டிச் சிற்பக் கலை!...
Q

என்னென்ன விருதுகள் பெற்றுள்ளீர்கள்?

A

தமிழக அரசு 1980ல் சிறந்த கைவினைக் கலைஞர் விருது கொடுத்து கௌரவித்துள்ளது. மத்திய அரசு 2013ல் சிறந்த கைவினைக் கலைஞர் பட்டயம் தந்து பாராட்டியுள்ளது.  தமிழக அரசு 2019ல் ‘வாழும் கலைப் பொக்கிஷம்’ என்கிற விருது கொடுத்து மகிழ்வித்துள்ளது. நான் என்ன விருதுகள் பெற்று என்ன பயன்? என் வாழ்நாளில் என் கண்ணெதிரே இந்த நெட்டிச் சிற்பக் கலை, பெரும் அழிவினை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதுதான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

Q

அப்படியென்ன அழிவினை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது இந்த நெட்டிச் சிற்பக் கலை?

A

கற்றுக்கொள்ள வந்ததிலிருந்து நான் எழுபது ஆண்டுகளாக இந்தத் தொழிலில்தான் தொடர்ந்து இருந்து வருகிறேன். ஏனோ தெரியவில்லை. தஞ்சாவூர் ஓவியங்கள் போலவோ அல்லது தஞ்சாவூர் கலைத் தட்டுகள் போலவோ இல்லாமல், வாடிக்கையாளர்கள் மத்தியில் நெட்டிச் சிற்பங்களுக்கான சந்தை விற்பனையும் அதன் மீதானக் கலையார்வமும் பெரும் அளவில் குறைந்து போய்விட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்தில் எனது கலைக்கூடத்தில் என்னிடத்தில் மட்டும் இருபது முப்பது நபர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

காலப்போக்கில் நெட்டிக் கலைச் சிற்பங்கள் விற்பனை பெரும் சரிவினைச் சந்திக்கவே நாளடைவில் இன்றையச் சூழலில் எனது கலைக்கூடத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே என்னுடன் வேலை செய்து வருகின்றனர். தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே நெட்டிச் சிற்பக் கலையினை மீட்டெடுக்க முடியும் நெட்டிச் சிற்பக் கலைஞரான கும்பகோணம் கே.ஏ. சொக்கலிங்கம் அவர்களின் கோரிக்கையை நம் தமிழக அரசு செவிமடுத்து ஆவன செய்யும் என எதிர்பார்ப்போம்.

logo
Kalki Online
kalkionline.com