
இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்ற இந்த மாநிலங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் சங்கிலித் தொடராக திகழ்கின்றன. புவியியல் ரீதியாக, இந்த மாநிலங்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கலாச்சார ரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. இந்த மாநிங்களில் வாழும் மக்கள் மங்கோலியர்கள், திபெத்தியர்கள் மற்றும் பர்மியர்கள் உட்பட பல்வேறு இனத்தை சேரந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்பது அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களைக் குறிக்கிறது.
இந்த 7 மாநிலங்களும் மகிழ்ச்சி மற்றும் அமைதியான உணர்வுகளோடு சுவையான சமையல் பாணிகள் மற்றும் பழங்கால மரபுகளின் துடிப்பான கலவையை வழங்குகின்றன. அசாமின் காரமான கறிகள் முதல் நாகாலாந்தின் நெருப்பு புகைபிடித்த இறைச்சிகள் வரை, ஒவ்வொரு உணவும் ஒரு கதையைச் சொல்கிறது.
ஒவ்வொரு மாநிலமும் அதன் நிலப்பரப்பு, பழங்குடி தாக்கங்கள் மற்றும் இயற்கை வளங்களால் வடிவமைக்கப்பட்ட அதன் சொந்த உணவுகளை (Traditional foods) கொண்டுள்ளன. வாருங்கள் அவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
அருணாச்சலப் பிரதேசத்தில், அபோங் என்பது பல்வேறு பழங்குடியினரால் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய அரிசி பீர் ஆகும். இது ஒரு பானம் மட்டுமல்ல, ஒரு கலாச்சார சின்னமுமாகும். இந்த பீரானது புளிக்கவைக்கப்பட்ட அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை பொதுவாக அவர்கள் பண்டிகைகள், அறுவடை கொண்டாட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளின் போது அருந்தி மகிழ்கிறார்கள். இந்த பானம் நட்பு, விருந்தோம்பல் மற்றும் சமூக பிணைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பெரும்பாலான பழங்குடியினரில், அபோங்கின் முக்கிய மதுபான உற்பத்தியாளர்கள் பெண்கள் தான். அவர்கள் தங்களுடைய மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்ட பழங்கால இயற்கை நொதித்தல் முறைகளை தான் இன்றும் பின்பற்றுகிறார்கள்.
மசோர் டெங்கா என்பது ஒரு அசாமிய உணவு வகை. இந்த மீன் கறியானது அசாமிய மக்களின் வழக்கமான உணவாக இருக்கிறது. இது நன்னீர் மீன், தக்காளி மற்றும் தேகெரா டெங்கா அல்லது யானை ஆப்பிள் போன்ற உள்ளூரில் கிடைக்கும் புளிப்புப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது கடுகு எண்ணெயில் சமைக்கப்பட்டு வெந்தய விதைகளுடன் பதப்படுத்தப்பட்ட இந்த சுவையான மீன் கறி கோடைக்காலத்திற்கு உகந்த குளிர்ச்சியான உணவாக கருதப்படுகிறது.
ஈரோம்பா என்பது மணிப்பூரின் ஒவ்வொரு இல்லத்திலும் உண்ணப்படும் முக்கியமான உணவாகும். யாம், உருளைக்கிழங்கு மற்றும் பீன்ஸ் போன்ற வேகவைத்த காய்கறிகளை மசித்து அத்துடன் நகரி எனப்படும் புளித்த மீனைச் சேர்த்து இந்த உணவை செய்கிறார்கள். சிவப்பு மிளகாய் மசாலாவை தான் இந்த உணவில் சேர்க்கிறார்கள். கூடவே ஒரு சில மூலிகைகளையும் கூடுதல் சுவைக்காக சேரக்கிறார்கள். பெரும்பாலான நாட்களில் இந்த ஊர் மக்கள் இதை சாதத்தோடு சாப்பிடுகிறார்கள் மேலும் இது மணிப்பூரி குடும்பங்களின் பிரதான உணவுமாகும்.
Smoked pork என்கிற இந்த பன்றி இறைச்சி நாகாலாந்தில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். பன்றி இறைச்சியை வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே ஜூசியாகவும் இருக்கும் வரை அதை எரித்து தயாரிக்கிறார்கள். முதலில் நன்றாக இறைச்சியை நெருப்பில் சுட்டு பிறகு அதை மூங்கில் தளிர்களுடன் சேர்த்து சமைக்கிறார்கள். அகுனி (காரமான புளித்த சோயா பீன்ஸ்) அல்லது அனிஷி (புளித்த யாம் இலைகள்) சில தனித்துவமான சுவைகளை வழங்க இந்த உணவில் பயன்படுத்தப்படுகின்றன.
சான்பியாவ் என்பது மிசோரமில் மிகவும் பாராட்டப்படும் அரிசி-கஞ்சி உணவாகும். இது அவர்களின் தெருக்களில் விற்கபடும் கலாச்சார உணவாகும். மென்மையான அரிசியை மெதுவாக சமைத்து, அது கஞ்சி போன்ற நிலைத்தன்மையாக மாறும் வரை தயாரிக்கபட்டு அதில் வெங்காயம், கொத்தமல்லி விழுது, அரைத்த கருப்பு மிளகு மற்றும் மீன் சாஸ் அல்லது இறைச்சி குழம்பை தூவி அலங்கரிக்கிறார்கள். சில நேரங்களில், கூடுதல் சுவைக்காக, பூண்டு மற்றும் ஒரு துருவல் அல்லது வேகவைத்த முட்டை சேர்க்கிறார்கள். இந்த அரிசியை வேகவைத்து சில சமயங்களில் அதில் நூடுல்ஸ் செய்து பிறகு மேற்கூறிய பொருட்களால் அலங்கரித்தும் சாப்பிடுகிறார்கள்.
ஜாடோ மேகாலயாவின் மிகவும் பிரபலமான உணவாகும். இது பன்றி இறைச்சி மற்றும் உள்ளூர் மசாலாப் பொருட்களின் கலவையோடு சிவப்பு அரிசியை சேர்த்து தயாரிக்கபடும் one pot உணவாகும். பன்றி கல்லீரல் அல்லது ஆஃபல் தான் இந்த உணவிற்கு ஆழமான, மண் சுவையை அளிக்கிறது. ஜாடோ பொதுவாக டங்ரிம்பாய் (புளிக்கவைக்கப்பட்ட சோயாபீன் சட்னி) அல்லது புதிய சாலட்டுடன் பரிமாறப்படுகிறது.
திரிபுராவின் பாரம்பரிய உணவு இந்த முய் போரோக் ஆகும். இந்த உணவனாது காய்கறிகள், பச்சை மிளகாய் மற்றும் மூங்கில் தளிர்களோடு பெர்மாவை (புளிக்க வைக்கப்பட்ட மற்றும் உலர்ந்த மீன்) சமைக்கும் உணவாகும். நொதித்தல் செயல்முறை மூலம், இந்த உணவு பழமையான மற்றும் தனித்துவமான ஒரு கூர்மையான சுவையை தருகிறது.