
உலகம் முழுவதும் பொம்மைகள் பிரபலமாக உள்ளன. ஒருவர் பிறந்த பிறகு விளையாடும் முதல் விளையாட்டு பொருட்களில் ஒன்று பொம்மை. பொம்மை வைத்து விளையாடாத குழந்தைகளையே பார்க்க முடியாது. இந்த பொம்மைகள் களிமண், மரம், ரப்பர், காகிதம் மற்றும் பிற பாரம்பரிய உள்ளூர் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
மண் பொம்மைகள்:
களிமண் மற்றும் வண்டல் மண் இரண்டையும் சேர்த்து நன்கு காலால் மிதித்துக்கொண்டே இருந்தால் ஒரு நல்ல பதத்திற்கு வரும். அதாவது கைகளில் கொஞ்சம் மண்ணை எடுத்து பார்த்தால் கையில் ஒட்டாமல் பதமாக இருக்கும். இதுவே சரியான பதம். பிசைந்த களிமண்ணை பல்வேறு வடிவங்கள் கொண்ட அச்சுகளில் வைத்து அழுத்தி எடுத்து, நன்கு உலர்த்திய பிறகு பல வகையான வண்ணங்களை பயன்படுத்தி பொம்மைகளுக்கு உயிரூட்டி அழகாக வர்ணம் பூசுகிறார்கள்.
சாதாரண மண்ணில் செய்யும் பொம்மைகள் அதிக எடையுடன் இருக்கும். இத்தனை எடையோடு வெளிநாடுகளுக்கு அனுப்ப நிறைய செலவாகும். ஆனால் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொம்மைகள் மிகவும் லேசான எடையுடன் இருக்கும். அதற்கு மண்ணை நன்கு சலித்து மிக பைன் குவாலிட்டி மண்ணாக பிரித்து எடுத்து அதில் பொம்மைகள் செய்வார்கள். இவை சாதாரண பொம்மைகளைவிட எடை மிகவும் குறைவாக இருக்கும்.
கொண்டப்பள்ளி பொம்மைகள்:
விஜயவாடாவிற்கு அருகிலுள்ள கொண்டப்பள்ளி நகரம் பொம்மைகளுக்கு பிரபலமானது. உள்ளூரில் கிடைக்கும் தெல்லா பொன்னிகி எனப்படும் லேசான மென்மரத்தாலான பொம்மைகள், காய்கறி சாயங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டு ஆந்திராவில் கைவினைஞர்களின் கைவினைத் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த மர பொம்மைகள் அன்றாட வாழ்க்கையின் கதைகளையும், நுணுக்கமாக செதுக்கப்பட்ட வண்ணமயமான விலங்குகள் மற்றும் பறவைகளையும் கண் முன் நிறுத்துகின்றன.
சென்னபட்னா பொம்மைகள்:
சென்னபட்னா கர்நாடகாவின் "பொம்மை நகரம்" அதாவது கோம்பேகலா ஊரு என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சென்னபட்னா நகரம் சென்னபட்னா பொம்மைகள் என்று அழைக்கப்படும் மர பொம்மைகளுக்கு மிகவும் பிரபலமானது. இவை பல்வேறு வகையான மரங்களால் ஆனவை. உள்ளூரில் ஆலே மாரா- தந்த மரம் எனப்படும் ஐவரி வுட் மற்றும் கருங்காலி மரத்தால் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. பைன், தேக்கு உள்ளிட்ட மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சீன பொம்மைகளுக்கு சவால்விடும் வகையில் இதன் நுட்பமான கலை வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வண்ணப்பூச்சு, தனித்துவமான வடிவமைப்பு போன்றவை இவற்றின் சிறப்பம்சமாகும். இந்த நகரத்தின் பாரம்பரிய கைவினை உலக வர்த்தக அமைப்பால் புவியியல் குறியீடாக பாதுகாக்கப்படுகிறது.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பொம்மைகள்:
பொம்மைகள் தயாரிக்க வார்ப்பு (mold) தேவைப்படும். பிளாஸ்டர் ஆஃப் பாரிசை தண்ணீருடன் கலந்து கெட்டியான மாவு போன்ற பதத்திற்கு கொண்டு வந்து அந்த வார்ப்பில் ஊற்றுகிறார்கள். காய்ந்த பிறகு வார்ப்பிலிருந்து பொம்மையை எடுத்து தேவையான வண்ணங்களைப் பூசி அலங்கரிக்கிறார்கள்.
காகிதக் கூழ் பொம்மைகள்:
காகிதக் கூழ் பொம்மைகள் செய்வதற்கு பசை மாவு, கிழங்கு மாவு, மைதா மாவு, முகத்தில் பூசும் பவுடர், சிமெண்ட் பேப்பர் சேர்த்து கலவை தயாரிக்கப்படுகிறது. அந்த கலவையில் இருந்து அழகழகான பொம்மைகள் செய்யப்படுகின்றன. ஒரு காகிதக் கூழ் பொம்மை செய்வதற்கு குறைந்த பட்சம் 5 நாட்கள் ஆகிறது.
விழுப்புரம் மாவட்டம் கரடிப்பாக்கம் பகுதியில் நவராத்திரி கொலுவிற்கான பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டு மயிலாப்பூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 1/2 அடி முதல் 2 1/2 அடி உயரம் வரை பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலைகளின் உயரத்துக்கு ஏற்ப விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.