
உலகின் மிகப்பெரிய தனிநபர் இல்லமான லஷ்மி விலாஸ் அரண்மனை, 3 கோடி சதுர அடி பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையைவிட 36 மடங்கு பெரியது. மேலும் துருக்கியின் வெள்ளை அரண்மனையைவிட பத்து மடங்கு பெரியது என்றால் அதன் பிரம்மாண்டத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். விசாலமான 170 அறைகளைக் கொண்ட, பிரமிக்க வைக்கும் லஷ்மி விலாஸ் அரண்மனை, கெய்க்வாட் ராஜா மற்றும் ராணிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்பதுதான் சிறப்பு.
குஜராத் மாநிலம் வதோதராவில்தான் உலகப் புகழ்பெற்ற லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உள்ளது. 1878 ஆம் ஆண்டு மராட்டிய வம்சத்தினை சேர்ந்த மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களால் துவங்கப்பட்டு, தொடர்ந்து 12 ஆண்டுகள் வரை கட்டுமானம் நடைபெற்று, 1890 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் மேஜர் சார்லஸ் மந்த் லஷ்மி விலாஸ் அரண்மனையை வடிவமைத்தார். ஆயினும் அரண்மனையின் முழு கட்டுமானத்தை காணும் முன்னரே விபத்தில் உயிர் துறந்தார்.
பிறகு ராபர்ட் ஃபெலோஸ் சிஷோல்ம் அரண்மனையை முழுமையாக கட்டி முடித்தார். இது இந்தியாவின் பாரம்பரியமும் பிரிட்டிஷ் கால புதுமைகளை கலந்து இந்தோ- சாராசெனிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றியுள்ள பெரிய தோட்டங்களை பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் வில்லியம் கோல்ட்ரிங்க் நிறுவினார். அரண்மனையின் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமான கோல்ஃப் மைதானம் ஒன்று உள்ளது. லஷ்மி விலாஸ் அரண்மனைக்கு பாரம்பரியமாக நான்கு நுழைவாயில்கள் உள்ளன.
அரண்மனையின் தர்பார் மண்டபம் பரோடா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இடமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. இது இந்திய மற்றும் ஐரோப்பிய கலைப் பாணிகளின் ஆடம்பர பொருட்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தரையில் ரங்கோலி வடிவ முறையில் இத்தாலிய உயர் ரக வண்ண கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கண்ணாடி ஜன்னல்கள் பெல்ஜியத்தின் இருந்து வரவழைக்கப்பட்டது. இதில் ராமர், சீதை, கிருஷ்ணரின் ஓவியங்கள் மன்னரையும் மக்களையும் ஆசீர்வதிக்கும் வகையில் தீட்டப்பட்டுள்ளது.
தர்பார் மண்டபத்தின் தொடக்கத்தில் நீலம் மற்றும் தங்க நிறம் கொண்டு வடிவமைக்கப்பட்ட யானை மண்டபம் உள்ளது. ராஜா யானையில் அமர்ந்தவாறு தர்பார் மண்டபத்தில் நுழையும் வகையில் பெரிய வாயில் களுடன் காண்பவர் பிரம்மிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது.அரண்மனையில் உள்ள மர பால்கனிகள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரோஸ்வுட் மரத்தால் உருவாக்கப்பட்டவை. பால்கனியை புடவையும் நகைகளும் அணிந்த தேவதைகள் தாங்கி நிற்பதைப்போல சிற்பங்களும் உருவாக்கப்பட்டு காண்பவரை கவர்கின்றன.
இந்த அரண்மனையில் இதுவரை 4 கெய்க்வாட் மன்னர்களின் முடிசூட்டு விழா நடைபெற்றுள்ளது. முடிசூட்டு விழா மண்டபத்தில் ராமர் சீதையின் ஒவியங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் சீதை தீக்குளிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அரசர் தன் குடும்பத்தின் பற்றை விட குடி மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கடமையை உணர்த்துவதற்காக இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது. அரசரின் சிம்மாசனத்திற்கு பின்னால் ராமர் பட்டாபிஷேக காட்சியும் இடம் பெற்றுள்ளது.
அரண்மனையில் பல முக்கிய அறைகளில் வெள்ளி மற்றும் தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது . அரண்மனையின் பிரம்மாண்டமான உணவுக் கூடம் வெள்ளி மற்றும் தங்கப் பாத்திரங்களால் நிரம்பியுள்ளது. இந்த உணவுக் கூடத்தின் மேஜைகள் மற்றும் நாற்காலிகள் பிரெஞ்சு பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அரச குடும்பத்தினர் லக்ஷ்மி விலாஸ் அரண்மனையின் சில பகுதிகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதித்துள்ளனர். அரண்மனை மைதானத்தில் ஆண்டுதோறும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் விண்டேஜ் கார் கண்காட்சிகள் நடைபெறுகிறது. தர்பார் மண்டபத்தில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது, மற்றப் பகுதிகளில் கைவினை பொருட்கள் கண்காட்சிகள் நடைபெறுகிறது. மகாராணி கைவினை பொருட்கள் செய்யும் கலைஞர்களை தனிப்பட்ட முறையில் ஊக்குவிக்கிறார். அவர்கள் வளம்பெற உதவி செய்கிறார்.
தற்போது இந்த அரண்மனையில் மகாராஜா சமர்ஜித்சிங் ரஞ்சித்சிங் கெய்க்வாட் அவர்களும், மகாராணி ராதிகராஜே கெய்க்வாட்டும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். "லட்சுமி விலாஸ் அரண்மனை எங்களுக்கு வீடாக அமைந்தது எங்களின் அதிர்ஷ்டம் என்றாலும், அது இறுதியில் இந்திய மக்களுக்கானது," என்று மகாராணி ராதிகராஜே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.