இந்தியாவில் பல விசித்திரமான கிராமங்கள் இருக்கின்றன என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். அந்தவகையில், ஒரு கிராமத்தில் வீடுகள், கோவில்கள், அலுவலகங்கள் என அனைத்திற்குமே கதவுகள் இல்லையாம். ஏன்? வங்கி, காவல் நிலையத்திற்கு கூட கதவுகள் வைக்கமாட்டார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?
நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கதவைப் பூட்டி விட்டோமா? என்று இரண்டு, மூன்று முறை சோதித்துப் பார்ப்போம். தெரியாமல், பூட்டு போடாமல் வெளியே சென்றுவிட்டோம் என்றால், கற்பனையில் நம் வீடே காலியாக இருப்பது போல நினைத்து பதற்றம் கொள்வோம். ஆனால், ஒரு கிராமத்தில் வீடுகளுக்கு மட்டுமல்ல பொது கழிவறைகளுக்கே கதவுகள் வைக்கமாட்டார்கள்.
ஆம்! ஆனால் அவர்கள் பொது கழிவறைகளுக்கு மட்டும் திரை வைத்துக் கொள்வார்கள்.
ஏன் இவர்கள் கதவுகள் வைப்பதில்லை? கொள்ளை சம்பவங்கள் நடக்காதா? நகைகள், பொருட்கள் எல்லாம் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? இதுபோன்ற கேள்விகள் எழுகின்றனதானே?
மகாராஷ்திராவில் உள்ள ஷனி ஷிங்னாபூர் என்று அழைக்கப்படும் ஒரு கிராமத்தில் தான் இப்படி ஒரு முறை இருக்கிறது. இவர்களுக்கு ஒரு பழங்காலத்து கதை உள்ளது. அதாவது ஒரு 300 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஊரில் உள்ள பனஸ்னலா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அப்போது அந்த நதியிலிருந்து ஒரு கருப்பு கல் வெளி வந்திருக்கிறது. அதனை ஒருவர் குச்சியால் அழுத்திப் பார்த்திருக்கிறார். அப்போது அந்த கல்லிலிருந்து சிவப்பு நிற ரத்தம் வழிந்து தண்ணீரில் கலந்திருக்கிறது.
அன்று இரவே ஊர் தலைவருக்கு ஒரு கனவு வந்துள்ளது. அதாவது, “அந்த கருங்கல் தான் என் சிலை. அதை வைத்து வழிபடுங்கள். நான் உங்கள் ஊரைக் காப்பாற்றுகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. என்னை கூரை வைத்த கோவிலில் வைக்க கூடாது. கதவுகள் வைத்து என்னை அடைக்க கூடாது. விசாலமாக திறந்து வையுங்கள். உங்களின் பாதுகாப்பை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
அன்றிலிருந்து இப்போதுவரை சனிபகவானுக்கு மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ள எந்த கட்டடங்களுக்குமே கதவுகள் வைப்பதில்லை. அதேபோல் அன்றாடம் சனி பகவானுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த கிராமத்திற்கு 2011ம் ஆண்டு தான் பூட்டு இல்லாத வங்கி தொடங்கப்பட்டது. நம் ஊர்களில் இருப்பது போல கிரில் கேட்டுகள் ஏதுமின்றி, ஒரு கண்ணாடி நுழைவாயிலையும், கிராம மக்களின் நம்பிக்கைகளை மதித்து, அதே நேரம் பாதுகாப்பிற்காக ஒரு கண்ணுக்குத் தெரியாத ரிமோட் கண்ட்ரோல் மின்காந்த பூட்டுடனும் வங்கி நிறுவப்பட்டது.
'திறந்திருந்த வீட்டில் திருடன் புகுந்த கதை' என்று ஒரு பழமொழி உள்ளது. ஆனால், அந்த பழமொழி இந்த கிராமத்தில் பொய்யானது. கடந்த 300 வருடங்களாக வீடுகள் திறந்திருந்தாலும் இன்று வரை ஒரு கொள்ளை கூட நடந்ததில்லை. ஏன்? கொலை போன்ற வேறு எந்த சம்பவங்களுமே நிகழ்ந்ததில்லை. இதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றுதானே கேட்கிறீர்கள்?
அந்த கிராமத்தில் 2015ம் ஆண்டுதான் காவல் நிலையம் நிறுவப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு குற்ற நிகழ்வுக்கூட அங்கு பதிவாகவில்லை. இதற்கு அந்த மக்கள், கிராமத்தை சனிபகவான் காத்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.
மனிதர்களை நல்முறையில் வழிநடத்தவே புராணக் கதைகளும், சில வழக்கங்கள் கொண்டு வரப்பட்டன என்றும் ஒரு தரப்பினர் கூறுவார்கள். இந்த சனிபகவான் கதை கட்டுக்கதையோ? அல்லது மக்களின் மூட நம்பிக்கையோ? எதுவாயினும், கடந்த 300 ஆண்டுகளாக ஒரு குற்றம் கூட நடக்கவில்லை என்றால், அந்த கிராமம் நல்ல முறையில் வழி நடத்தப்படுகிறது என்றுதானே அர்த்தம்?
கடவுள் நம்பிக்கை ஒரு நல்ல மாற்றத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது என்றால், அதனை எப்படி மூட நம்பிக்கையாக கருதமுடியும்?