தலைமுறைகள் தாண்டியும் மின்னும் காஞ்சி பட்டுப்புடவைகள் – ரகசியம் என்ன?

 பட்டுப்புடவை...
பட்டுப்புடவை...Image credit - jpsilks.com

-மரிய சாரா

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு உலகளவில் எப்போதுமே நல்ல மதிப்பு உண்டு. ‘காஞ்சிபுரம் போனா கால ஆட்டிக்கிட்டே சாப்பிடலாம்’ என்று பழமொழிகூட சொல்லப்படுவது உண்டு. அதற்கு அர்த்தம் காஞ்சிபுரத்தில் இருப்பவர்கள் எல்லோருமே வேலைக்குச் செல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு சாப்பிடுகின்றனர் என்பது அல்ல. மாறாக கைத்தறி நெசவாளர்களையே இந்தப் பழமொழி குறிப்பிடுகின்றது. அதாவது கைத்தறியில் பட்டுப்புடவை நெய்பவர்கள் தங்கள் கை, கால்களை ஆட்டி ஆட்டித்தான் நெய்யவேண்டும் என்பதால்தான் இந்தப் பழமொழி.

வரலாறு:

காஞ்சி பட்டுப் புடவைகளுக்கான வரலாறு என்பது சுமார்
400  வருடங்களுக்கும் மேலான வரலாறாகவே அறியப் படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில்தான் பட்டுப்புடவைகள் பணக்காரர்கள் மற்றும் கோயில் தெய்வ சிலைகளுக்கு மட்டும் என நெய்யப்பட்டன. பிறகு நாளடைவில் வளர்ச்சியடைந்து இன்று எந்த சுப காரியம் என்றாலும் மக்கள் வீடுகளில் காஞ்சிபுரம் பட்டுதான் முதல் இடம் பிடிக்கிறது.

நெசவு:

புடவை நெய்வதற்குப் பயன்படுத்தப்படும் நூலானது முதலில் அரிசி நீரில் ஊறவைக்கப்பட்டு பின்னர் வெய்யிலில் உலர்த்தப்படுகிறது. பின்னர் பட்டு நூலானது வெள்ளி மற்றும் தங்க ஜரிகைகளுடன் கோர்க்கப்பட்டு கைத்தறியில் பூட்டப்படுகின்றன. காஞ்சி பட்டுப் புடவை நெய்யப் பயன்படுத்தப்படும் வார்ப் ஃபிரேமானது,  240 துளைகளைக்கொண்ட வார்ப்பும் 250-3000 நூல்களுடன் வெஃப்டில் 60 துளைகளையும் உள்ளடக்கியது.

வகைகள்:

பொதுவாகவே காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் 6.3 மீட்டர் கொண்டவையாகவும் 1 கிலோ வரை எடை கொண்டவையாகவும் நெய்யப்படுகின்றன. பளிச்சென்ற நிறங்களிலும், யாளி, மாங்காய், ருத்ராட்சம், மயில், கோயில் கோபுரம், ஆகியவற்றை மைய்யப்படுத்தியே இவற்றின் வடிவமைப்புகள் இருக்கும். புடவை மொத்தமும் ஒரே நிறத்தில் நெய்யப்படுபவை மற்றும் கோர்வை எனப்படும் உடல் ஒரு நிறம், பார்டர் மற்றும் முந்தானை ஒரு நிறம் என தனித்தனியே நெய்யப்பட்டு பின் ஒன்றாக இணைப்படும் புடவைகள் என இரண்டு ரகங்களில் நெய்யப்படுகின்றன.

விலை:

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் பொதுவாகவே விலை அதிகமானவைதான். அவற்றில் பயன்படுத்தப்படும் நூல் மற்றும் ஜரிகையின் தரம், நெய்தல் வேலைப்பாடுகள் மற்றும் கூலி ஆகியவற்றைப்பொறுத்து நிர்ணயிக்கப் படுகின்றன. 20000 முதல் லட்சங்களில் கூட விலைகள் வேறுபடலாம். பெரிய பெரிய கடைகளைவிட நேரடியாகச் நெசவாளர்களிடம் சென்று வாங்கினால்,  தரமான புடவைகளை நியாயமான விலைக்கு வாங்க முடியும்.

பட்டுப்புடவை...
பட்டுப்புடவை...

ஆயுட்காலம்:

எல்லா பொருட்களுக்கும் ஆயுட்காலம் என்பது உண்டு. ஆனால் தரமாக நெய்யப்பட்ட உண்மையான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு இதுதான் ஆயுட்காலம் என நிர்ணயிக்கமுடியாது. தலைமுறைகள் தாண்டியும் மிளிரும். காஞ்சிபுரம் புடவையின் ஆயுட்காலம், புடவையைப் பராமரிப்பதில்தான் அடங்கியுள்ளது. அதேபோல் இதில் இருக்கும் தூய்மையான, தரமான வெள்ளி ஜரிகைக்காக, இவற்றை எதிர்காலத்தில் விற்று பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

புவிசார் குறியீடு:

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்காக 2005-ம் ஆண்டு தமிழக அரசால் புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பிக்கப்பட்டு, 2005-2006ம் ஆண்டில் இந்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

பட்டுப் புடவை நெய்தல்...
பட்டுப் புடவை நெய்தல்...Image credit - devangaworld.com

அசல் எது? போலி எது?

தற்போதுள்ள அனைத்திலுமே கலப்படங்களும் இருப்பதைப்போலத்தான் இந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளிலும். இப்போதெல்லாம் குறைந்த விலை, கட்டுவதற்கு இலகுவாக வேண்டும் என்ற வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்காகவும், தொழிலில் அதிக லாப நோக்கத்திலும் தர்மாவரம், மதனப்பள்ளி, சேலம், ஈரோடு முதலிய பகுதிகளின் சேலைகளும் சந்தையில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் என விற்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
இளம் பெண்களுக்கு ஏற்ற பிக்னிக் / டூர் உடைகள்!
 பட்டுப்புடவை...

சிறிய கடையோ, பெரிய கடையோ நீங்கள் வாங்குவது சுத்தமான காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றால் அதற்க்கான தமிழ்நாடு சரிகை சான்றிதழை கேட்டு வாங்க வேண்டும். அதில் புடவையின் நிறம், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தங்கம் வெள்ளி, காப்பர் முதலியவற்றின் அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நெசவாளர்களிடம் நேரடியாக வாங்கினால் இந்த சான்றிதழ் கிடைத்துவிடும். ஆனால், பெரிய கடைகளில் கிடைக்காது. அப்படியே நீங்கள் வாங்கினாலும் அதை வெளியில் வந்து கூட்டுறவு சங்கத்தில் நீங்கள் வாங்கிய புடவையை தர ஆய்வு செய்துகொள்ளலாம். அப்படி கடைக்காரர் சொல்லியதைப்போல இல்லாமை போலியாக இருப்பின் கடைக்காரரிடம் முறையிடலாம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திலும் முறையிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com