தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று, சிலம்பம். சிலம்பம் என்பது கம்பு சுற்றுதல் என்றும் வழக்கில் அழைக்கப்படுகிறது. இந்த கலை சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. சிலம்பம் என்ற பெயர் `சிலம்பு’ என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இதற்கு `ஒலித்தல்’ என்று பொருள்.
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய 4 அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால், தமிழகத்தில் இருந்து எகிப்துக்கு சிலம்பக்கலை பரவியதாக கருதப்படுகிறது.
2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் சிலம்பம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
திருக்குறளில் 'கோல்' என்ற பெயரும், கலிங்கத்துப்பரணியில், `வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகளும் சிலம்பத்தை பற்றி குறிப்பிடுகின்றன. கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 'பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளை யாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
காலம் நம்மை என்னதான் நவீன உலகத்துக்கு கூட்டிச்சென்றாலும், நம்முடைய பண்பாடு, கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இன்னும் இருக்கிறது. சிலம்பாட்டத்தை அதன் நுணுக்கங்களுடன் கற்றுக்கொள்ளும்போது உடலும், மனதும் உற்சாகமடைகிறது. அதுமட்டுமின்றி உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும், சுறுசுறுப்பாக செயல்படவும் வழிவகுக்கிறது. சிறுவயதிலேயே உடலையும், மனதையும் பக்குவப்படுத்திக்கொண்டால் சிறந்ததொரு தலைமுறையை உருவாக்க முடியும். அதற்கு தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக் கலையே சான்று. இத்தகைய நமது பாரம்பரிய சிலம்பக் கலையை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
கராத்தே, குங்ஃபூ என கிழக்கத்திய தற்காப்பு கலைகளை வியந்து, அதை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் நம்மவர்கள், தம்மிடையே தோன்றி தூர தேசங்கள் எல்லாவற்றையும் கவர்ந்த தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது நிகழ்காலத்தின் அவலமாகும்.
சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள கையாண்ட முறையே சிலம்பம். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுத்தினர்.
இதை பயிற்சி செய்வதால், தசை விரைவு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை, கையும் கண்ணும் ஒருங்கிணைப்பு, காலும் கண்ணும் ஒருங்கிணைப்பு, உடல் சமநிலை, தசை ஆற்றல், தசை வலிமை மேம்படும். சிலம்பம் போர்க்கலையாக மட்டுமில்லாது நல்ல உடல் பயிற்சியாகவும், ஒழுக்க முறையாகவும் பயிலப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி நரம்பு சீராக்கம், மூச்சுக்கட்டுப்பாடு, ஒன்றிணைந்த மூளை செயற்பாடு என பல நன்மைகளை தரவல்லது இந்த சிலம்பக்கலை என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
கம்பு வீசும் திறன், காலடி அசைவு, வேகம் இது மூன்றுமே சிலம்பத்தின் அடிப்படை திறன்கள். அதாவது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற பல கூறுகள் அடங்கும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பப்பயிற்சி மெய்ப்பாடம், உடற்கட்டு, மூச்சுப்பயிற்சி, குத்துவரிசை, தட்டு வரிசை, அடிவரிசை, பிடிவரிசை, சிலம்பாட்டம், வர்மம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. அதுமட்டுமின்றி அடிவரிசை முறையில் 18 வகையாகவும், சிலம்பாட்ட வீச்சு முறையில் 72 வகையாகவும் சிலம்பத்தை வகைப்படுத்தலாம்.
சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அந்த காலத்தில் ஆண்கள் மட்டுமே அதிகளவு கற்று வந்த சிலம்பகலையை தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் கற்று விளையாடி வருகின்றனர்.